அடுத்த பிரம்மாண்டத்திற்கு தயாராகும் ஹாலிவுட்

0
37

ஹாலிவுட் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான பெயர் ஜேம்ஸ் கேமரூன் இவருக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். டெர்மினேட்டர் சீரியஸ் மூலம் பிரபலமடைந்த கேமரூன், டைட்டானிக்கில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஹாலிவுட்டில் காதல் படங்களும் வருகின்றன என்பதற்கு சாட்சி சொன்னது டைட்டானிக் என்னும் கேமரூனின் பிரம்மாண்ட படைப்பு.

அட்லாண்டிக் கடலில் 1912ஆம் ஆண்டு மூழ்கிப் போன டைட்டானிக் கப்பலை பற்றி ஏராளமான படங்கள் அன்றைய தேதியில் வந்திருந்த போதிலும் கேமரூன் மிகப் பெரும் செலவில் இந்தப் படத்தை எடுத்து முடித்து இருந்தார். அவருடைய திறமைக்கு இந்த உலகம் செவி சாய்த்தது. பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்னும் சொற்கள் அதிகம் புழங்க ஆரம்பித்தது இந்த படத்திற்கு பின்னால் தான். இப்படியும் படம் எடுக்க முடியுமா? என கண்கள் விரிய ஆச்சரியப்பட்டவர்களின் முன்னால் தனது அடுத்த படைப்பான அவதாரை கொண்டு போய் சேர்த்தார் கேமரூன். ஏலியன், பாண்டோரா, வினோத ஜந்துக்கள், அசரடிக்கும் டெக்னாலஜி, நவீனகால போர் யுக்திகள், vfx தொழில்நுட்பம் என இறங்கி அடித்திருந்தார் கேமரூன். படம் ஹாலிவுட்டின் பழைய ரெக்கார்டுகள் எல்லாம் தூக்கி தூர எறிந்து விட்டு முன்னிலையில் வந்து நின்று கொண்டது.

மொத்தம் 4 பாகங்கள்

இந்தப் படம் சுமார் 278 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்து புதிய சாதனை ஒன்றைப் படைத்தது. அவதார் படத்திற்கான கதையை டைட்டானிக் படப்பிடிப்பின் போதே துவங்கிவிட்டதாக கேமரூன் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவதார் ரிலீசானது 2009 ஆம் ஆண்டு அதாவது டைட்டானிக் வெளிவந்து 10 ஆண்டுகள் கழித்து அவதார் வெளிவந்தது. அவதார் படத்திற்குப் பின்னால் அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என கேமரூன் தெரிவித்திருந்தார். உண்மையில் மொத்தம் நான்கு பகுதிகள் வெளிவர இருக்கின்றன அவதார் 2 மற்றும் அவதார் 3,4,5.

அதற்கான அறிவிப்புகள் தான் தற்போது வெளிவந்து அவரது ரசிகர்களை குஷியில் தள்ளியிருக்கிறது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் “அவதார் 2 டிசம்பர் 17 2021 ஆம் ஆண்டு வெளிவரும்” என கேமரூன் குறிப்பிட்டு இருக்கிறார். இதில் இன்னொரு வில்லங்கமும் இருக்கிறது. கேமரூன் அவதார் 2 படம் வெளி வரும் தேதியை சொல்வது இது நான்காம் முறை. 2015, 2017 மற்றும் 2020 என ரிலீஸ் தேதிகளை இஷ்டத்திற்கு அறிவித்துக் கொண்டிருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து கடைசி நேரத்தில் ஏமாந்து போவார்கள். ஆனால் இம்முறை ரிலீஸ் தேதியை அறிவித்திருப்பது பிரபல தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி என்பதால் ரசிகர்களின் முகத்தில் களைகட்ட ஆரம்பித்து இருக்கிறது. டிஸ்னி’ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அவதார் படத்தின் மூன்றாம் பாகம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியிலும், அவதார் நான்காம் பாகம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதியிலும், அவதார் ஐந்தாம் பாகம் டிசம்பர் 17, 2027 ஆம் ஆண்டிலும் முறையே வெளிவரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்திருக்கும் அவென்ஜர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தை அவரின் அடுத்தடுத்த பாகங்கள் சாய்க்கும் என கேமரூனின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்ப்பரித்து வருகின்றனர். எது எப்படியோ அடுத்து மிகப்பெரிய கலைத் திருவிழா ஒன்று திரைப்பட ரசிகர்களுக்காக காத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.