ரஜினி to சூப்பர் ஸ்டார்! – ஜானி – திரை விமர்சனம்

நடிகர் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பயணத்தில், அவர் கொடுத்த சில கிளாசிக் தமிழ் திரைப்படங்களின் விமர்சனங்கள் வரிசையில், முதல் படமாக எவர் க்ரீன் 'ஜானி'.


119
497 shares, 119 points
வெள்ளி தோறும் வெளிவரும் இந்த தொடர் ஒரு ‘Multimedia’ /பல்லூடக விமர்சனத் தொடராகும்.  படிக்கும் போதே இடையிடையே காட்சியைப் பார்க்கும் வகையிலும், இசையைக் கேட்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு தெரிந்தவரை தமிழில் இதுவே முதல்முறை!

ஒரு இனிய மாலை பொழுதில் கையில் ஒரு கோப்பை சூடான தேநீரோடு அந்திவானம் பார்த்து அமர்ந்திருக்கும் அந்த கணத்தில் மனத்திற்குள் யாரோ வந்து பியானோ வாசிக்க ஆரம்பித்தார்கள். சிந்தனையை சிறையெடுக்கும் அந்த இசையில் கண் மூடி நிற்கையில்.. இசைக்கு சொந்தக்காரரும் அந்த இசையைக் காட்சி படுத்திய இயக்குனரும் ஒரு வினாடி கண் முன் வந்து போகிறார்கள்…

இசை.. மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் எத்தனையோ ஞாபக பெட்டகங்களின் பூட்டை திறந்து விடும் மாயச் சாவி தொலைத்த காதல்களையும் வாழ்க்கை வரமென கையில் பிடித்து கொடுத்த காதலையும் ஒரு சேர நினைவில் நிறுத்தி அந்த  இசை இதயத்தை ஈரமாக்கியது.

அர்ச்சனாவும் ஜானியும் பியானோ இசை மூலம் பிரியம் பேசியதை மறக்கமுடியுமா? ஜானி – பாடல்களுக்காக படம் என்பதை தாண்டி பின்னணி இசைக்கான பொக்கிஷமென தமிழ் சினிமா ஆராதித்த படம்.

ஜானி எந்தவித சந்தேகமும் இன்றி, தமிழ் கிளாசிக் திரைப்பட வரலாற்றில் முன் வரிசையில் இருக்க வேண்டிய திரைப்படம். காட்சி அமைப்பு, இசை, நடிப்பு என அனைத்தும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும்.

ஸ்ரீதேவி, ரஜினியிடம் தனது காதலை வெளிப்படுத்தும் காட்சி. ரஜினி ஆரம்பத்தில் தனது பின்னணியை நினைத்துக் காதலை ஏற்கத் தயங்குவார். கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து நடந்த பிறகு அருகில் வந்து திருமணம் செய்வதாக ஒத்துக் கொள்வதாக காட்சி நகரும்.

அந்தக் காட்சியின் இறுதியில், “என்னைப் பத்தி அது இதுன்னு ஏதேதோ தப்பா நினைச்சுட்டு, ஏன் அப்டிலாம் பேசிட்டீங்க?” என்று ரஜினி கேட்டதும், ஸ்ரீதேவி குழந்தைத்தனமாக, “நான் அப்டித்தான் பேசுவேன்” என்பார். “ஏன்? ஏன்? ஏன்?” என்று கேட்கும் ரஜினியின் பக்கம் ஸ்ரீதேவி திரும்பியதும் இருவரும் சிரிக்கத் தொடங்குவார்கள்.

Credits: TNM

பின்னிருந்து படத்தின் ஜீவனான பியானோ ஒலிக்கத் தொடங்கும். காதல் மலர்வதன் முதல் படியில் இருவரும் சிரித்துக் கொள்வது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதில் ரஜினி தனது முகத்தை மூடிக்கொண்டு சிரிக்கும் சமயம் அந்த காதலுக்கான கதவுகள் திறந்து கொண்டிருக்கும்.

ஸ்ரீ தேவியும், ரஜினியும் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம் மெலிதாக வரும் பின்னணி இசை மனதை என்னவோ செய்யும். நீங்களும் கேட்டு ரசியுங்கள் இங்கே.

காதலை வெளிப்படுத்தும் காட்சிகளுக்கென்று சில இலக்கணங்கள் இருந்தாலும், அந்த புன்னகையும் இசையும் அழகிய இலக்கண மீறல். தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த காதல் காட்சிகளில் இது ஒரு கிளாசிக்.

ஜானி திரைப்படத்தில் ஜானியின் கதாபாத்திரமும், வித்யாசாகரின் கதாபாத்திரமும் அநேகமாக ஒன்றுதான். ஜானிக்கும் வித்யாசாருக்கும் இருக்கும் ஒரு வித்தியாசம் இசை.

ஜானி  ஒரு திருடன். அவன் குற்ற வாழ்க்கைக்குப் பின்னால் மனம் வருடும் ஒரு சோகக்கதை இருக்கிறது. தன் தந்தையை தன்னுடைய தந்தைதான் என்று சொல்ல இயலாத ஜானி தன் அன்னையின் மரணத்திற்குப் பின், தான் யாருமில்லை என்பதை உணர்கிறான். அவனுடைய தந்தை கடனால் அடைந்த அவமானத்திலிருந்து அவரை மீட்கத் தவறான வழியைத் தேர்ந்தெடுக்கிறான்.

அப்போது அவனின் இருப்பை அர்த்தப்படுத்தும் ஒரே விஷயமாக,  அவன் அன்னை வழங்கிச் சென்ற இசை அவனோடு இருக்கிறது. அவள் சிதார் வாசிப்பதை அருகிலிருந்து கேட்டு வளரும் ஜானி, அதன் வழியே இந்த உலகத்தின் மனிதர்கள்,  கேலி,  அவமானம் ,  துயரத்திற்கு அப்பால் ஒரு அரூபமான உலகத்தை உருவாக்கிக்  கொள்கிறான்.

தாய் தந்தையின் காதலை உணர்ந்தாலும் அந்த உறவால் அவன் வாழ்வில் மிஞ்சியது அன்புக்கான ஏக்கம் மட்டுமே.

“சின்ன வயதில் முத்தம் கொடுத்தீங்க. ஆனா, இனிஷியல் கொடுத்தீங்களா?” என அப்பாவிடம் மருகி, “This Johnny is a nobody” என்று ஆற்றாமையை சுமந்து நிற்கும் ஜானி, நம்மைத் தனக்கு வெகு அருகில் சேர்த்துக் கொள்கிறான்.

களவுகளில் கரை கண்டவனான ஜானி தன் தந்தை கெளரவம் காக்கத் தன் சுயம் தொலைக்கச் சித்தமானவன்.

பணம் தேடி அவன் புத்தி குறுக்கு வழிகளில் அலைகிறது. அப்போது நடு வீதியில் மேடை போட்டு நின்று இசை அவனை அழைக்கிறது. இசையின் யாசகன் அவன். பாடலைத் தேடி போகிறவன் பாடகியிடம் தன் மனதைப் பறி கொடுக்கிறான்.

தனது இரட்டை வாழ்க்கையைக் காதலியிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் ஜானிக்கு, காதலியின் கண்ணீர் அவனுக்குள் அடைந்து கிடக்கும் உணர்வுகளின் மடையைத்  திறக்கிறது.

ஜானியின் கதைக்கு நேர் கோட்டில் வித்யாசாகர் என்ற முடி திருத்தும் இளைஞனாக, இன்னொரு ரஜினியின் கதையும் மெல்ல பார்வையாளனுக்குச் சொல்லப்படுகிறது. கையில் கத்திரிக்கோலோடு, தொங்கு மீசை, படிய வாரிய முடி சகிதம் கருமியாக அறிமுகம் ஆகும் வித்யாசாகர் எடுத்த எடுப்பில் நம் ஆர்வத்தைக் கிளறுகிறான். மலை மீது தனியாக ஒரு வீட்டில் செளகரியமாக வாழும் அவனுக்கு பெற்றோர், சுற்றோர், காதலி,  நண்பர்கள் யாருமில்லை. ஆனால், அவன் கோழிகளோடு தூங்கி, அவைகளோடே எழுந்து அதன் முட்டையை உடைத்துக் குடித்துவிட்டு தன் நாளை ஆரம்பிக்கிறான்.

கலைத்துப் போட்ட கவிதையாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் அவன் வீடு. அதில் முரட்டு வரிகளாய் அவன் பாத்திரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உண்டு, உறங்கி சொரூப வாழ்க்கை வாழ்ந்து வரும் வித்யாசாகரின் வாழ்வில் ஒரு பெண் வருகிறாள். கருமியான அவன் மிகவும் தயங்கி பின்னர் அவளை வீட்டு வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறான்.

நம் வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் பொருட்கள் மீது நமக்கு காலப்போக்கில் ஒரு பற்றுதல் ஏற்பட்டுவிடும். அதுபோல வித்யாசாகருக்கும் தான் அடிக்கடி பேசிக்கொண்டிருக்கும் அந்தப் பெண் மீது ஒரு பற்று ஏற்படுகிறது. பூக்களையும் வாழ்க்கையையும் வெறும் எண்ணிக்கையாக மட்டுமே பார்த்து வந்த வித்யாசாகர், அந்த கன்னியின் அழகுக்குத் தன் அன்பை காணிக்கை ஆக்கத் தயார் ஆகிறான். அவளுக்கு இளமையின் தேகம். ஆனால், மனமோ அலைபாயும் மேகம்.

ஒன்றை விட ஒன்று சிறப்பு எனத் தாவிச் செல்லும் இயல்பு. தன் அன்பின் வாசம் கொண்டு அவளை வசப்படுத்த வித்யாசாகர் செய்யும் முயற்சிகள் முற்றிலும் தோற்றுப் போகின்றன.

தோல்விகள் சில மனிதர்களைக் காயப்படுத்தும். சில மனிதர்களை பலப்படுத்தும். அதே தோல்வியோடு, துரோகமும் இணைந்து கொண்டால்  சில மனிதர்கள் மிருகங்கள் ஆவதும் நடப்பதுண்டு. அன்புக்காக ஏங்கும் வித்யாசாகர், பின்னர் அதே அன்புக்காக துரோகத்தைச் சந்தித்து ஆவேசம் கொள்ளும் ஆத்திரக்காரனாக மாறுகிறான். ஆத்திரம் அவனை மனித எல்லைக்கு வெளியே தள்ளுகிறது. அதன் பின் மிகப்பெரிய ஒரு குற்றம் புரிந்தவனாகிறான் வித்யாசாகர்.

Spoiler Inside (திரைப்படம் பார்த்தோர் மட்டும் படிக்கலாம்)
இங்கே வித்யாசாகர் அந்தப் பெண்ணைக் கொலை செய்வதற்கு அவள் அவனை நிராகரித்து வேறு ஒருவனைத் தேர்வு செய்தது காரணம் அல்ல. அதை அவன் எளிதில் மறந்துவிடுவான். ஆனால்,  அவள் வேறு ஒருவனைத் தேர்வு செய்வதன் மூலம் ஒரு கேலிப்புன்னகையை அவன் மீது செலுத்துகிறாள். அந்த சீண்டலும், அவன் தனிமையும் வேறு ஒரு பெண் அவன் வாழ்வில் வருவதற்கான சாத்தியமின்மையும் தான் அவனை கொலை செய்ய வைக்கிறது.

ஜானியின் குற்றங்களுக்காக போலீஸ் அவனைத் துரத்துகிறது. வித்யாசாகர் தன் குற்றத்தில் இருந்து தப்பிக்க ஓடுகிறான்.

ஒரே உருவம். ஆனால், இரண்டு மனிதர்கள். இரண்டு மனங்கள்,  இரு வேறு குற்றங்கள் துரத்த ஓடும் ஓட்டம் என வேகமெடுக்கிறது கதை இந்த பரபரப்பூட்டும் பின்னணி இசையுடன்.

ஜானியும் வித்யாசாகரும் சந்தித்துக் கொள்கிறார்கள். மோதுகிறார்கள். வித்யாசாகர் விபரீதத் திட்டம் தீட்டித் தன் குற்றத்தையும் ஜானி மீது போட்டு, ஜானிக்கு உரிமையான அர்ச்சனாவையும் தனதாக்கிக் கொள்ளக் கிளம்புவதில் கதையின் முடிச்சுகள் பலம் பெறுகின்றன.

நல்லவன் வெல்வான் எனக் கதை கேட்டு பழகிய நமக்கு இதில் யார் நல்லவன் என்ற பட்டி மன்றமே வைக்கத் தோன்றுகிறது.

ஜானி நல்லவன் என மனம் ஒரு புறம் நினைத்தாலும்.. வித்யாசாகரும் பாவம் தானே என அதே மனம் சண்டைக்கு வருகிறது.

அர்ச்சனா ஜானியின் காதல் வென்றதா? வித்யாசாகரின் பேதலித்த மனம் அந்த காதலை என்ன செய்தது? என்பதையெல்லாம், படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.


ஜானி – ஆகஸ்ட் 15, 1980-ல் திரைக்கு வந்த படம். கள்வனின் வாழ்க்கையில் பூக்கும் காதலை கவிதையாய் இசை கோர்த்துக்  கதையின் முன்பாகத்தை நகர்த்துகிறார் இயக்குனர் மகேந்திரன். ஃபிரேம் பை ஃபிரேம் காட்சியைச் செதுக்கி, அதை ஒரு கலை ஓவியமாய் பார்வையாளனுக்குப்  படைக்கும் வித்தையை, தமிழ் சினிமாவுக்குப் பழக்கிய பிதாமகன் மகேந்திரன் தான்.

ஜானியின் பெரும் பலம் அதன் இசை. இசையமைப்பாளரின் பணி என்பது வெறும் பாடல்களோடு நிற்பது அல்ல. அதைத் தாண்டியும் அதன் எல்லைகளை விரிவுப்படுத்திய படங்களில் ஜானிக்கு முக்கியப்  பங்கு உண்டு. பாடல்களுக்காக ரசிகர்கள் படங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது இயல்பான நிகழ்வு தான்; ஆனால் பின்னணி இசைக்காகவும் திரையரங்குக்கு ரசிகர்களை படையெடுக்க வைத்தார் இளையராஜா என்றால் அது மிகை ஆகாது.

கதையோடு காதல் வளர்க்கும் கீதங்கள். காலம் தாண்டி இன்றும் பல தமிழக காதல்களுக்கு ஜானி பாடல்களின் ரீ ரிகார்டிங் தொடர்ந்து வண்ணம் சேர்த்து கொண்டு தான் இருக்கின்றன.

இக்கால இளைஞர்கள் பலருக்கும் மிகவும் பிடித்தமான 7G ரெயின்போ காலனி படத்தின் உயிரோட்டமுள்ள தீம் மியூசிக், ஜானியின் தீம் மியூசிக்கில் இருந்து உருவானது தான்.

ஒளிப்பதிவு அசோக் குமார். எதார்த்தமான படப்பதிவு படத்திற்கு பெரும் பலம். பெரிதாக ஒப்பனையில்லாத ரஜினி – ஸ்ரீதேவி – தீபா அழகோ அழகு. ஊட்டியின் வனப்பை மிக சிறப்பாகத் திரையில் கொண்டு சேர்த்திருப்பார் ஒளிப்பதிவாளர்.

Credit: Fully Filmy

கையில் புகைக்கும் சிகரெட்டோடு நிதானமாகத் தன் களவுகளைத் திட்டம் போடுவதாகட்டும், காதலியிடம் உருகும் இடமாகட்டும், தந்தையிடம் மருகி தன் ஆற்றாமையைப் பொறுமுவதில் ஆகட்டும், ஜானியாக ரஜினி நடிப்பில் புது சகாப்தம் படைத்து  இருப்பார்.

ஸ்ரீதேவி ஒற்றை ஆளாக இரண்டு ரஜினிக்கு ஈடு கொடுத்து நடிப்பில் தன் கொடியை பறக்க விட்டிருப்பார்.

ஜானியிடம் தன் காதலை சொல்லும் அந்தக் காட்சியில் பெண்மையின் மென்மையை அதே நேரத்தில் அதன் திண்மையை காட்டும் அந்த கணம்.. தமிழ் சினிமாவின் நாற்பது ஆண்டுகாலத்தின் ஒரு இனிய “வாவ்” தருணம்.

வித்யாசாகர் ஜானியாக மாறி அர்ச்சனாவை சந்திக்க வரும் இடத்தில் மிருதுவான நடிப்பில் மிரட்டி இருப்பார் ஸ்ரீதேவி.

தீபா அழகு அவ்வளவு ஆபத்து என்று சொல்லிவிட்டு போகும் பாத்திரம்.. நிறைவு சுருளி பாலாஜி கோபாலகிருஷ்ணன் சின்ன வேடங்களில் சிறப்பு கூட்டி இருப்பார்கள்.

“எப்போவும் ஒண்ணை விட ஒண்ணு பெட்டரா தான் இருக்கும் அது தான் உலகம் அதை தேடி போயிட்டு இருந்தா முடிவே இருக்காது “.

” இந்த உலகத்துல பணம் செலவழிக்குறதுல்ல கருமித்தனம் இருக்கலாம் ஆனா அன்பு காட்டுறதுல்ல இருக்கக்கூடாது”

மகேந்திரனின் வசனங்கள் காலம் தாண்டியும் மனத்தைத் தைத்து நிற்கின்றன. ஒரு இயக்குனராக காதலில் துவக்கி க்ரைமில் கலந்து மனித உணர்வுகளைக் கோர்த்து பார்வையாளனின் நெஞ்சில் ஒரு படைப்பாளியாக சிம்மாசனம் இட்டு அமர்கிறார் மகேந்திரன்.

பழங்குடி மக்கள் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி  அந்த காலத்திலே அதற்கு  திரை வெளிச்சம் பாய்ச்சி அவர் வாழ்க்கையை உரசி ஒரு பாடலும் வைத்து பெருமை படுத்திய இயக்கினருக்கு ஒரு ஸ்பெஷல் வணக்கம் வைக்கலாம்.

நான் ஜா.. ஜானி இல்ல…

I am barber by profession

Murderer by Accident

இன்னிக்கு நான் ஒரு மனுஷன் உங்களால். படத்தில் வரும் சூப்பர் ஸ்டார் முத்திரை மொமென்ட் .

ஜானி பார்த்து வெகு நேரம் வரை இளையராஜா என் இதயத்து ஜன்னலில் அமர்ந்து பியானோ வாசித்து கொண்டிருந்தது தனிக்கதை.

அழகு மயில் ஸ்ரீதேவியும் கம்பீரக் காதலன் ரஜினிகாந்தும் நினைவுகளை தம் இனிய நடிப்பால் புரட்டிக் கொண்டிருந்தார்கள்.

இப்படத்தின் மூலம் மேலும் ஒரு முறை தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்திருப்பார் ரஜினி.

ஜானி தமிழ் சினிமாவின் அழகிய கலை ஓவியம். இனிய சினிமா கொண்டாட்டம். ஜானி மூலம் ஒரு நடிகர் சூப்பர் ஸ்டாராகப் பரிணமிக்கத் தொடங்குகிறார்.

இசைஞானியின் இசையில் ஜானி படத்தின் பாடல்களை கேட்டு மகிழுங்கள்.

 

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

119
497 shares, 119 points
DPK Devnath

சென்னை வாசி - தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை - தமிழ் இணைய ஆர்வலர்
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.