அனில் அம்பானி – உலக பணக்காரர் டூ ஜெயில் கைதி?

0
32
anil ambani
Credit: The Economic Times

தொழில்துறையில் ஒருவர் எத்தனை பெரிய உயரத்தை அடையமுடியும் என்பதற்கு உலகம் முழுவதும் எடுத்துக்காட்டாக சொல்லப்படும் பெயர் திருபாய் அம்பானி. துருக்கியின் தெருக்களில் பெட்ரோல் புட்டிகளைச் சுமந்து திரிந்தவர் அடுத்த இருபது வருடத்திற்குள் இந்தியாவின் பொருளாதரத்தை தீர்மானிக்கும் நபராக உயர்ந்தார். உலகில் எந்த அளவீடுகளாலும் சொல்லிவிடமுடியாத அளவிற்கு அவர் உழைத்திருக்கிறார்.

anil ambani
Credit: The Economic Times

மின்சாரம், நிதித் துறை, டெலிகாம் என ஒட்டுமொத்த இந்தியரின் தேவைகள் முழுவதையும் தனியொரு நிறுவனமாக இருந்து அளிக்க முயன்றார் அம்பானி. ஆனால் காலம் அப்படிச் செல்லவில்லை. 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட திருபாய் அம்பானியின் மரணம் இந்திய சந்தைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைத்தார்கள். அது ஒருவகையினில் உண்மை தான் என்றாலும் யாருமே எதிர்பார்க்காத வேறு ஒரு சிக்கல் முளைத்தது. அதுவும் அம்பானியின் வீட்டிற்குள்ளே.

பிளவு

அம்பானியின் மகன்களான முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோர் ஆரம்பம் முதலே தந்தையின் தொழில்களை கவனித்துவந்தாலும், அம்பானியின் இறப்பிற்குப் பின்னர் யார் தலைமை வகிப்பது என்ற போட்டி முளைத்தது. சொத்தைப் பிரித்துக்கொடுக்குமாறு தாய் கோகிலாபென் அம்பானியிடம் முறையிட்டார் அனில். 2004 ஆம் ஆண்டு இருவருக்கும் அம்பானியின் சொத்துக்கள், தொழில்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டன.முகேஷ் அம்பானி பெட்ரோல் ரிஃபைனரி மற்றும் பெட்ரோ கெமிக்கல் பிசினஸை எடுத்துக்கொண்டார். மின் உற்பத்தி, டெலிகாம், நிதி சேவை  ஆகிய தொழில்கள் அனிலிடம் சென்றன.

செல்போன் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருந்த காலம் என்பதால் அனிலின் வளர்ச்சி அசாதாரணமாக இருக்கும் என ஆருடம் சொன்னார்கள் நிபுணர்கள். ஆனால் காலம் அத்தனை கருணையை அனிலிடம் காட்டவில்லை.

anil-mukesh-ambani
Credit: DNA India

நிதி, டெலிகாம், மின்சாரம் என அனைத்துத் துறைகளிலும் சரிவுகளையே சந்தித்தார் அனில். சரிவுகளில் இருந்து நிறுவனத்தை மீட்க கடன்வாங்கி மீண்டும் அதே நிறுவனத்தில் முதலீடு செய்தார். மீண்டும் அடி. மீண்டும் கடன். சொத்துகள் பிரிக்கப்பட்ட பின்னர் உலக பணக்காரர் பட்டியலில் பத்தாம் இடத்தில் இருந்த அனில் அம்பானியை பட்டியலில் கடைசி இடத்தில் கூட இல்லாமல் செய்தது இந்தக்கடன்.

அதே நேரத்தில் புலிக்குப் பிறந்தது பூனையாகாது என நிரூபித்துக்கொண்டிருந்தார் முகேஷ் அம்பானி. துவங்கிய தொழில்களில் எல்லாம் வாகைப்பூக்களையே வாரி வந்தார்.

மோதல்

அனிலின் வீழ்ச்சிக்கு மற்றுமொரு காரணம் முகேஷ் அம்பானியுடன் போட்டி போட்டது. இதன் காரணமாக வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் திணறத் தொடங்கினார் அனில். பல்வேறு விதமான பிரச்சினைகள் பல்வேறு துறைகளில் இருந்து வர ஆரம்பித்தது. இப்படியான நிலையில் அண்ணன் தம்பி இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியது. ஒரு கட்டத்தில் கோகிலாபென் தலையிட்டு பிரச்சினையை முடித்துவைத்தார்.

mukesh anil ambani
Credit: Financial Times

ஜியோ புயல்

அனில் அம்பானிக்கும் முகேஷ் அம்பானிக்கும் இடையே பிரிவினையின்போதே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி 2010 ஆம் ஆண்டுவரை ஒருவர் துறையில் மற்றவர் குறுக்கிடக்கூடாது. முகேஷ் அதற்குத்தான் காத்திருந்தார். 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் டெலிகாம் துறையில் ஜியோ என்னும் அரக்கனைக் களம் இறக்கினார் முகேஷ். அத்தோடு முடிந்தது அனிலின் கதை.

அதிரடி ஆபர்கள், இலவசம் என இந்திய மக்களை வெகுவாக ஈர்த்தது ஜியோ. வோடபோன், ஏர்டெல், ஐடியா என அனைத்து டெலிகாம் நிறுவனங்களையும் கலங்கடித்தார் முகேஷ். ஏற்கனவே பிரச்சினையில் இருந்த ரிலையன்ஸ் டெலிகாம் இதனால் காணாமலே போனது.

ஜெயில்

தற்போது எரிக்சன் நிறுவனத்திற்குத் தரவேண்டிய தொகையை வழங்க வழியில்லாமல் தவிக்கிறார் அனில். பணத்தைக் கொடுக்கவில்லை எனில் ஜெயில் தான் என்ற நிலைமை. கடன்தாரர்களைச் சமாளிக்க ரிலையன்ஸ் குழுமம் தனது அலைக்கற்றை, டவர், ஃபைபர் ஆகிய சொத்துகளை ஜியோவிடம் விற்க 2017 டிசம்பரில் முடிவு செய்தது. அண்ணனும் தம்பிக்குப் பரிதாபப்பட்டு உதவ முன்வந்தார். ஆனால், சில ஒழுங்குமுறை விதிகள் அதற்கு சாதகமாக அமையாததால் அந்த விற்பனை நடக்கவில்லை.

ambani anil
Credit: The Economic Times

தற்போதைய நிலையில் அனில் அம்பானிக்கு 1 லட்சம் கோடி கடன் உள்ளது. சந்தேகமே இல்லாமல் அவரிடம் இருக்கும் நிறுவனங்களை விற்றால் மட்டுமே சமாளிக்க முடியும். எப்படியும் எரிக்சன் பிரச்சினையை அனில் சமாளித்துவிடுவார். ஆனால் சிக்கல் அதன் பின் என்ன செய்வார்? என்பதுதான்.

மாபெரும் வர்த்தக மூளைக்கு உதாரணமாகச் சொல்லப்படும் திருபாய் அம்பானியின் மகன், ஒரு தொழிலதிபர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாகியிருக்கிறார்.