உண்மையான ‘பேட் மேன்’ அருணாச்சலம் முருகானந்தம்

Credit : News minuit

தமிழராய்  பிறந்த ஒருவர் குறைத்த செலவில் ஒரு இயந்திரத்தை உருவாக்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையான தரத்தில்,  பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் பயன்படுத்தப்படும் சானிடரி நாப்கின்களைத் (Sanitary napkin) தயாரித்து வருகிறார். அவர் தான் அருணாச்சலம் முருகானந்தம்.

அவரது கண்டுபிடிப்பை வணிக ரீதியாகக் கொண்டு செல்லாமல், ஒவ்வொரு கிராமத்தில் உள்ள    பெண்களும் தங்களுக்கென்று சுயதொழிலாய் அதைச் செய்து அவர்கள் வாழ்வாதாரம் முன்னேற  வேண்டும் என்று விரும்பினார் அருணாச்சலம். இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண்களும் மாதவிடாய்க் காலத்தில் நாப்கின் பயன்படுத்த வேண்டும் என்பதையே குறிக்கோளாய் கொண்டு இன்றும் அவரும் அவரது நிறுவனமும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இவரை சமூகத் தொழிலதிபர் (social entrepreneur) என்றும் கூறலாம். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘டைம்’ வார இதழ் உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் இவரை இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

the real padmanமுதல் முயற்சி

அருணாச்சலம் முருகானந்தம் அவர்கள், 1962 – ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் முருகானந்தம், வனிதா ஆகிய தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவர்கள் கோயம்புத்தூரில் நெசவு தொழில் செய்து வந்தனர். தன் இளம் வயதில் தன்னுடைய தந்தை விபத்தில் மரணம் அடைந்ததால், தனது 14 வயதில் பள்ளி படிப்பை விடுத்து, வறுமையைப் போக்க,  இயந்திரக் கருவி ஆபரேட்டர் (machine tool operator),  வெல்டர் ( welder) ஆகிய சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தார்.

1998 – ஆம் ஆண்டு, சாந்தி என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஒரு நாள் தன் மனைவி  மாதவிடாய்க் காலத்தில் பழைய துணியைப் பயன்படுத்துவதைக் கண்ட அருணாச்சலம், இந்தியாவில் பல பெண்களும்  இவ்வாறு தான்  பயன்படுத்துகிறார்கள் என்பதையும்  புரிந்து கொண்டார்.

தன் மனைவிக்கு கடையில்  நாப்கின் வாங்கச் சென்றார். நாப்கின் விலை அதிகமாக  இருப்பதை அறிந்த அவர், ஏழை பெண்கள் நாப்கின் வாங்குவது கடினம் என்பதை உணர்ந்தார். கோயம்புத்தூரில் தரமான பஞ்சை மிகக் குறைத்த விலையில் வாங்கி, நாப்கின் செய்து தன்  மனைவிக்குக் கொடுத்தார். ஆனால், அது தோல்வியாய் அமைத்தது. அதன் பின் மருத்துவ மாணவிகளிடம் கொடுத்து சோதனை செய்தார், தரமற்ற நாப்கின் என்று பல மாணவிகள் அதை தவிர்த்தனர்.

the real pad man
Credit : Stars Unfolded

நாப்கின் தயாரிக்கும் இயந்திரம்

தொடர்ந்து அவரது முயற்சிகள் தோல்வி அடையவே பொதுமக்களிடம் அவப்பெயரையும்  பெற்றார். ஒரு கட்டத்தில் மக்கள் பைத்தியக்காரன் என்று சொல்லும் அளவிற்குத் தள்ளப்பட்டார். மேலும், தன் மனைவியிடமும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றார். பல சோதனைகள், பல அவமானங்கள் எல்லாம் சூழ்ந்த போதிலும், தன்னுடைய அயராத முயற்சியால் நாப்கின் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மற்றும் மூலப்பொருள்களைக் கண்டறிந்தார். 

பைன் மரப்பட்டையின் மரக்கூழிலிருந்து  பயன்படுத்தி, மலிவான விலையில் எளிய முறையில்  நாப்கின் தயாரிக்கக் கூடிய ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.  இது பன்னாட்டு இயந்திரத்தை ஒப்பிடுகையில் பன்மடங்கு மிக மலிவான விலை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2006 – ஆம் ஆண்டு, சென்னை IIT யில் நடந்த கண்காட்சியில்  இவருடைய படைப்பு வைக்கப்பட்டு Grassroots Technological Innovations Award எனும் விருதை வென்றார்.

கிராமங்களில் விழிப்புணர்வு

 ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி, தனது  இயந்திரங்களை இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராமத்துப் பெண்களுக்கு விற்று வருகிறார். மேலும், இந்தியாவில் பல மாநிலங்களில் கிராமத்திலுள்ள பெண்களுக்கு பயிற்சி கொடுத்து,  நாப்கின் உற்பத்தி செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேலோங்கச் செய்து கொண்டிருக்கிறார். 

the real pad man
Credit : Stars Unfolded

இந்தியாவில் உள்ள பெண்களில் 18% முதல் 25 % வரை மட்டுமே இன்று நாப்கின் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் பெருநகரங்களில் உள்ள பெண்கள் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். கிராமங்களில் நாப்கின் பயன்பாடு குறைவாக இருப்பதற்கு, விலை அதிகமாய் இருப்பது ஒரு காரணம். மற்றொன்று நாப்கின் பற்றிய விழிப்புணர்வு  இல்லாதது. இவருடைய நோக்கமே இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களும் நாப்கின் உபயோகிக்க வேண்டும் என்பதே.

வணிக நோக்கின்றி சேவை மனப்பான்மையுடன் இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்ததற்காக இந்திய அரசு இவருக்கு 2016 – ஆம் ஆண்டு பத்மஶ்ரீ் விருது வழங்கி கவுரவித்துள்ளது.