வால்மார்ட்டின் புதிய தந்திரம் – வணிகர்கள் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்

0
8
Credit : Tech Crunch

சமீபத்தில் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77 சதவிகிதப் பங்குகளை 16 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியது வால்மார்ட் நிறுவனம். இப்போது வால்மார்ட், தான் கையகப்படுத்திய ஃப்ளிப்கார்ட்டின் மூலம், வால்மார்ட் நிறுவனத்தின் பொருட்களை முழுமையாக இணையத்தில் விற்க இருக்கிறது. அதாவது, இனி ஃப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்யும் பொருட்களை வால்மார்ட் சிங்கிள் சப்ளையராக (Single Supplier) விற்பனை செய்து லாபம் பார்க்கும்.

சிங்கிள் பிராண்டுகள்

சிங்கிள் சப்ளையர் என்பதற்கும் சிங்கிள் பிராண்ட் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.  சிங்கிள் பிராண்டுக்கு உதாரணம் ஆப்பிள். ஆப்பிள் ஷோரூம்களுக்கோ, ஆப்பிள் சர்வீஸ் சென்டர்களுக்கோ போனால் முழுமையாக ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் மட்டுமே இருக்கும். இவை தான் சிங்கிள் பிராண்ட் நிறுவனங்கள்.

flipkart walmartமல்டி பிராண்டுகள்

வால்மார்ட் & பிக் பசார் ஆகியவை மல்டி பிராண்டுகளுக்கு நல்ல உதாரணங்கள். இவர்கள் ஒரு கடையிலேயே பல பிராண்டு பொருட்களை விற்பார்கள். பிக் பசார் துணிக்கடைகளை எடுத்துக் கொள்வோம். Allen solly, Levis, Adidas, Reebok, Indian terrain, Vanheusen, Pepe Jeans, Wrangler, Park avenue என்று உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பிராண்டுப் பொருட்களைக் கலந்து விற்பார்கள். இவர்கள் தான் மல்டி பிராண்ட் நிறுவனங்கள்.

சில்லறை வணிகச் சட்டம்

ஒரு சிங்கிள் பிராண்ட் நிறுவனம் இந்தியாவில் வந்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றால், எந்த நிறுவனத்தை வேண்டுமானாலும் முழுமையாக வாங்கி தங்கள் வியாபாரத்தைச் செய்யலாம் அல்லது அவர்களே உள்ளே வந்து ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கலாம். இதற்கு அனுமதி வழங்கப்படும்.

ஆனால் மல்டி பிராண்ட் நிறுவனம், இந்தியாவில் வந்து வியாபாரம் செய்ய வேண்டும் என்றால், ஏதாவது ஒரு நிறுவனத்தில் அதிகபட்சமாக 51% பங்குகளை வாங்கிக் கொண்டு அந்த நிறுவனத்தின் முதலாளி ஆகலாம். அவர்களே சொந்தமாக ஒரு கடையைப் போட்டு வியாபாரம் செய்ய முடியாது. மிக முக்கியமாக இதற்கு அரசு அனுமதி வேண்டும்.

ஓட்டையைப் பயன்படுத்தும் வால்மார்ட்

இப்போது அந்நிய நேரடி முதலீட்டுச் சட்டத்தில், 9-வது ஷரத்தாக “சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு விவகாரத்தில்,  இணைய வர்த்தகம் உட்பட அது எந்த வடிவத்தில் வந்தாலும், மல்டி பிராண்ட் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.”  (Retail trading, in any form, by means of e-commerce, would not be permissible, for companies with FDI, engaged in the activity of multi-brand retail trading) என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறது.

ஆனால் வால்மார்ட், “வணிகம் என்றால் ஒருவரிடம் இருந்து இன்னொருவர் வாங்கி விற்க வேண்டும். ஆனால், இங்கு நாங்கள் ஃப்ளிப்கார்ட் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்க இருக்கிறோம். வாடிக்கையாளர்கள் மீண்டும் அதை விற்க மாட்ட்டார்கள். எனவே, இது வணிக நடைமுறை கிடையாது.” என்று சொல்லித் தன் விற்பனையை ஃப்ளிப்கார்ட் மூலம் விரைவில் தொடங்க இருக்கிறது.

இதை எதிர்த்து அனைத்து இந்திய வர்த்தகர்கள் சம்மேளனம் வரும் செப்டம்பர் 28, 2018 அதாவது நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்திருக்கிறது.