எழுத்தாணியின் முதல் வணக்கம்

0
70
Raja_alankara_Murugan_Palani

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே…

முன்னின்று காக்கும் இறைவனுக்கே…

புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால்…

பூச்சொரிந்தே மனம் பாடி வரும்…

 

சிம்மாசனம் போன்ற மயிலாசனம்…

செங்கோலும் அவன் கையில் சிரிக்கின்ற வேல்

அடியார் தம் இதயங்கள் குடிமக்களே…

அருளாட்சி எல்லாமே அவனாட்சியே…

 

முதல் சங்கம் உருவாக மொழியானவன்

இடைச் சங்கம் கவிபாட புகழானவன்

கடைச் சங்க வாழ்வுக்கு வழியானவன்

கடல் கொண்டும் அழியாத தமிழானவன்…

 

அதனால்

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே!

வணக்கம்

எழுத்தாணி.காம் ( ezhuthaani.com ) இணையதளம் உலகத்தமிழர்களுக்கு சிறந்ததொரு கருத்துக்களமாக விளங்கும் முனைப்புடன்  தமிழ்க்கடவுள் முருகனுக்கு உகந்த தைப்பூசத் திருநாளான இன்று தொடங்கப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள திருமுருகப்பெருமானின் ஆலயங்களிலும் தைப்பூசம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டுவரும் இவ்வேளையில் இத்தளத்தை உங்களுக்கு திறந்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சியும், குதூகலமும் அடைகிறோம்.

பண்டைத் தமிழ்ப் புலவர்கள் பனையோலைச் சுவடிகளில் எழுத்தைப் பதிக்க பயன்படுத்தியது எழுதுகோலான எழுத்தாணி. முத்தமிழான இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழையும் எழுத்தாணியைக் கொண்டு அக்காலத்தே படைத்தனர்.

நமது எழுத்தாணியோ பரந்து விரிந்த தமிழ் கூறும் நல்லுலகில் முத்தமிழையும் கணித்தமிழாக படைக்க உருவாக்கப்பட்டிருக்கிறது.

நமது எழுத்தாணியைக் கொண்டும் இலக்கியங்களையும், ஏனைய பிற கலை வடிவங்களையும்  படைக்க இளம் தலைமுறை எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் வரவேற்பதில் பேருவகை கொள்கிறோம்.

இத்தளத்தில் வரும் மார்ச் 2018 வரை எங்களது குழுவில் இடம்பெற்றிருக்கும் எழுத்தாளர்கள் மட்டும் எழுதிவருவர். அதன் பிறகு, ஏப்ரல் 2018 முதல் எழுத்தார்வம் கொண்ட எவரும் எழுதும் வகையில்  இத்தளத்தை அமைக்க செயல் திட்டமிட்டுள்ளோம்.

எழுத்தாணி உங்களிடம் இருந்து சிறந்த கருத்துக்களையும், ஆல் போல் வளர அறிவுரைகளையும் கோருகிறது.

நன்றி! வாழ்க செந்தமிழ்! வாழ்க வளமுடன்!! வாழிய வாழியவே!!!

‘முதல் வணக்கம்’ பாடலை கேட்டு மகிழுங்கள் இப்போது!