LKG முதல் PhD வரை பெண்கள் இனி இலவசமாக படிக்கலாம் – பஞ்சாப் அரசின் அதிரடி அறிவிப்பு

0
62
amarinder-singh-l-ie-1
Credit: The Financial Express

பஞ்சாப்பில் கேப்டன் அமரிந்தர் சிங் தலைமையிலான அரசு LKG முதல் PhD வரை பெண்கள் இனி இலவசமாக படிக்கலாம் என்னும் சட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கடந்த வாரம் அவர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதன்மூலம் அரசு பள்ளிகளில் இனி புத்தகங்கள் இலவசமாக அளிக்கப்படும் மேலும், ஆன்லைனில் புத்தகங்களை படிக்க ஏற்பாடு செய்துதரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

punjab-government-will-provide-free-education-to-girls12

கேப்டன் அமரிந்தர் சிங்  

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வெற்றியின் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து பத்தாண்டுகள் ஆட்சிக்கட்டிலில் இருந்த அகாலிதளம் கட்சியை சேர்ந்த பிரகாஷ் சிங் பாதலை கீழிறக்கி மீண்டும் காங்கிரசை அதில் அமரவைத்தவர் அமரிந்தர் சிங். 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில், 77 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அப்போது பெண்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டு இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதற்கான உத்தரவை முதல்வர் வெளியிட்டிருப்பது அம்மாநில மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

amarinder-singh-l-ie-1
Credit: The Financial Express

நர்சரி வகுப்புகள்

குழந்தைகளை இலவசமாக சேர்க்க அரசின் சார்பில் புதிய நர்சரி வகுப்புகளும் துவங்கப்பட இருக்கின்றன. தேர்தல் அறிக்கையின் மற்றொரு அறிவிப்பான ஆரம்ப கல்வி நிலையங்களில், அரசு கல்லூரிகளில் இலவச வைஃபை ஆகியவையும் நிகழ்த்தப்பட இருக்கின்றன. பஞ்சாப்பில் உள்ள 13,000 ஆரம்ப பள்ளிகள் மற்றும் 48 கல்லூரிகளில் இந்த வசதி அடுத்த ஆண்டு துவக்கத்தில் செய்துதரப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பஞ்சாப்

2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி பஞ்சாப் மாநில மக்களின் கல்வியறிவு சதவிகிதம் 75.84 ஆகும். இது ஒட்டு மொத்த இந்தியாவின் சராசரி கல்வியறிவு சதவிகிதத்தை (73.0%) விட அதிகமாகும். இங்குள்ள மக்களில் 1,87,07,137 பேர் படித்தவர்கள். பஞ்சாப் ஆண்களில் 80.44% பேர் படித்தவர்கள். பெண்களைப் பொருத்தவரை இந்த சதவிகிதம் 70.73 ஆக இருக்கிறது. அமரிந்தர் சிங்கின் இந்த புதிய அறிவிப்பு பஞ்சாப்பில் பெண் கல்வியை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும் என தீர்க்கமாக நம்பலாம்.

school
Credit: zeenews.india

பெண் மையம்

இந்திய மரபில் பெண்களுக்கான முக்கியத்துவம் இடைப்பட்ட காலத்தில் மிக மோசமான இடத்தை அடைந்திருந்தாலும் தற்போது மெதுவாக நிலைமை மாறிவருகிறது. பெண்களை அரசியல்படுத்தினால் அன்றி தேர்தலில் வெற்றி என்பது எளிதல்ல என்னும் நிலைக்கு பெரும்பாலான கட்சிகள் வந்துவிட்டன. சென்ற வாரத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பெண்கள் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.