மூழ்கிப்போன கப்பல் – கடலுக்குள் கொட்டிக் கிடந்த 240 டன் வெள்ளி!!

0
57

வருடம் 1940. டிசம்பர் மாத இந்தியா. குளிர், பரமாத்மா போல் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது. கல்கத்தா துறைமுகத்தில் எஸ்.எஸ் கெய்ர்சோப்பா (SS Gairsobba) என்ற சரக்குக் கப்பல், இங்கிலாந்து நோக்கிய தனது பயணத்தைத் துவங்கியது. வட அட்லாண்டிக்கில் பயணித்துக் கொண்டிருந்த போது ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் தாக்குதலுக்கு உட்பட்டு அப்படியே கடலுக்குள் மூழ்கிப்போனது. 85 பேர் இறந்து போன அந்த விபத்தில் மூழ்கிப்போன வெள்ளியை 70 ஆண்டுகளுக்குப் பின் தேடி மீட்டிருக்கிறார்கள்!!

Credit: Shipwreckology

மூன்று மாத கடற்பயணம்

இரண்டாம் உலகப்போரில், மொத்த ஐரோப்பாவையும் சுருட்டி வாயில் போட்டுக் கொண்ட திருப்தியில் இருந்தார் ஹிட்லர். மிச்சமிருந்த நாடுகள் எல்லாம் இந்த ஒரு இன்ச் மீசைக்காரன் என்ன செய்வான் என்ற பயத்தில் இருந்த காலம். அட்லாண்டிக், பசிபிக் என எங்கும் ஹிட்லரின் நீர்மூழ்கிக்கப்பல்கள் அலைந்து திரியும். யார் வந்தாலும் சரி ஒரு குண்டு. ஒரே குண்டு. அன்றைய நாளில் எந்தக் கப்பலையும் வீழ்த்தவில்லையென்றால் அவ்வளவுதான், அவர்களுக்கு அன்னம் இறங்காது. அப்படியொரு உலக உத்தமர்கள். இப்படிப்பட்ட ஒரு சுபயோக சுப தினத்தில் தான், எஸ்.எஸ் கெய்ர்சோப்பா கல்கத்தாவிலிருந்து கிளம்பியது. கூடவே, வெள்ளையர்களால் இந்தியா முழுவதும் தேடித் திரட்டி , திருடிச் சேர்த்த 240 டன் வெள்ளியும்.

அறிந்து தெளிக!!
கர்நாடகத்தில் உள்ள சரஸ்வதி ஆற்றங்கரை நகரமான கெருசோப்பா(Gerusobba) வின் பெயரே அந்தக்கப்பலுக்கு வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு வெள்ளையர்களின் வாயில் நுழையக் கஷ்டப்பட்டுப் பின் மாற்றப்பட்டு எஸ்எஸ் கெய்ர்சோப்பா என்றானது.

மூன்று மாதப் பயணம்!! அதுவும் கடற்பயணம். பிப்ரவரி 14 ஆம் தேதி. அயர்லாந்தின் கால்வே விரிகுடாவில்(Galway bay) இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த போது, கப்பலின் எஞ்சின் திக்கி முக்கி கடைசியில் நின்றது. எரிப்பதற்கு நிலக்கரி இல்லை.!! கேப்டன் துறைமுகத்திற்குத் தகவல் தெரிவிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார். அடுத்த சிலமணி நேரங்களில் கடலில் புயல் வேறு அடிக்க ஆரம்பித்தது. மீட்பிற்கு யாராவது வந்தால் தான் உயிர்பிழைக்க முடியும் என்ற நிலை. வந்தார்கள் ஜெர்மானியர்கள்!!

Credit: Info World

ஜெர்மானியரின் தாக்குதல்!!

கடலில் திக்கற்று நின்ற கப்பலைப் பார்த்த பின்னர், உடனே ஜெர்மானிய விமானம் கப்பல் கேப்டனை அழைத்துப் பேசியது. எஸ்எஸ் கெய்ர்சோப்பா-வின் கேப்டனை அல்ல. கடலுக்குள் மூழ்கியிருந்த ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பலின் கேப்டனை. பக்கத்தில் தான் இருக்கிறது. பற்றவை என்று சமிக்ஞை அனுப்பியது. U-101 எனப் பெயரிடப்பட்ட அந்த நீர் மூழ்கிக்கப்பல் வெடிகுண்டைக் கப்பலின் மீது ஏவியது. கப்பலின் எஃ கு மேலோடு உடைந்து தண்ணீர் உட்புக ஆரம்பிக்கவே, அடுத்த 2 மணி நேரத்தில் மொத்தக் கப்பலும் நீர்மட்டத்திற்கு கீழ் சென்று விட்டது.

நல்ல  வேளையாக உயிர்பிழைக்கும் சிறிய வகைப் படகுகள் அதிலிருந்தன. 3 படகுகளில் உயிர் பிழைத்த பயணிகள் ஏறிக்கொண்டனர். தாக்குதல் நடத்திய ஜெர்மானிய வீரர்களுக்கு அக்கப்பலில் வெள்ளி இருப்பத்தைப் பற்றிய விஷயம் தெரியாது. எப்போதும் போல் மூழ்கடித்த திருப்தியில் சென்று விட்டார்கள். அதிலிருந்து 13-ஆம் நாள் ஒரே ஒரு படகு மட்டும் கரை சேர்ந்தது. அந்தப் படகிலும் ஒருவர் மட்டுமே மிச்சமிருந்தார். 85 பேர் மரணமடைந்திருந்தார்கள்!!

அறிந்து தெளிக!!
உயிர்பிழைத்த ஆர்.எச். அயர்ஸ் (R. H. Ayres) அக்கப்பலில் துணைநிலை அதிகாரியாக இருந்தவர். கப்பல் மூழ்குவதற்கு முன் உயிர்பிழைக்கும் படகுகளில் பயணிகளை ஏற்றிக் காப்பாற்ற முற்பட்டதால் அவருக்கு பிரிட்டனின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் தி பிரிட்டிஷ் எம்பயர் (Order of the British Empire) வழங்கப்பட்டது.

புதையல் ஆசை!!

போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டவுடன், அந்நாட்டு மக்களுக்கு இப்புதையல் கப்பலைப் பற்றித் தகவல் தெரியத் துவங்கியது. சும்மா இருப்பார்களா? வாடகைக்குப் படகு எடுத்துச் சென்று வெள்ளியைத் தேட துவங்கினர். முடியாமல் பல பேர் பெருமூச்சு விட்டனர். பலர் தேடுதலின் போது மூச்சையே விட்டனர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசு ஒரு முடிவு எடுத்தது. அரசின் சார்பில் அந்தக்கப்பலை வெளிக் கொண்டு வர டெண்டர்கள் விடப்பட்டன. பிரிட்டிஷ் அரசிற்கு அது கை வந்த கலை அல்லவா!! கடைசியாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஒடிஸி மரைன் எக்ஸ்பொலரேஷன் (Odyssey Marine Exploration) நிறுவனம் கப்பலைக் கரை மீட்கக் கடலுக்குள் குதித்தது.

Credit: Shipwreckology

இரண்டு வருட ஒப்பந்தம்!! சுமார் 16,000 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த கப்பலின் கடைசி ஆணி வரைக்கும் சலித்து எடுத்துவிட்டார்கள். ஆனாலும் கைப்பற்றிய மொத்த வெள்ளியின் மதிப்பு 48 டன் மட்டுமே!! ஆமாம். மீதி 192 டன் வெள்ளி என்ன ஆனது என்பது பற்றிய சரியான தகவல் இல்லை. அவை கடலில் ஏற்படும் பூகம்பம், கண்ட நகர்தலின் காரணமாக அடிப்பரப்பிற்குள் புதைந்து போயிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கப்பலில் கண்டெடுக்கப்பட்ட தபால் தலைகள், கடிதங்கள், ஓவியங்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் எனப் பல ஆவணங்கள் லண்டன் நகர அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. எப்போதாவது பிரிட்டனுக்குச் சென்றால் இந்தக் குட்டி டைட்டானிக்கைப் பற்றித் தெரிந்து வாருங்கள்.