11 வயதில் ஒரு வங்கியை நடத்தும் பெரு சிறுவன்

0
11

இப்போது உள்ள சிறுவர்கள் பல்வேறு புதிய புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றனர். அப்படி ஒரு சிறுவனின் வியத்தகு கதை தான் இது. பெரு நாட்டைச் சேர்ந்த 11-வயது ஜோஸ் டோல்ஃபோ க்விஸோகலா (José Adolfo Quisocala) ஒரு வங்கியை 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

சேமிப்பு ஆர்வம்

குறிப்பாக இவர் நடத்தி வரும் வங்கியில் 2000 பேர் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். ஜோஸுக்கு 7-வயது இருக்கும் போது, தன்னுடைய பள்ளி நண்பர்கள் தின்பண்டங்களுக்கும், பொம்மைகளுக்கும் அதிகமாகச் செலவு செய்வது போல் தோன்றியது. எனவே இதற்கு பதிலாகக் கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்தால், அர்த்தமுள்ள செலவினங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தார்.

அதன் பின்பு ஜோஸ் பணம், வங்கி, சேமிப்பு குறித்து தனது பெற்றோரிடமும் வங்கி அதிகாரிகளிடமும் ஆலோசனை பெற்றார். அந்த சமயம் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. பெற்றோரின் உதவியின்றி மாணவர்களே ஒரு குறிப்பிட்ட தொகையைச் சம்பாதித்து மாணவர்களுக்கான வங்கியில் சேமிக்க வேண்டும் என்பது தான்.

பள்ளியில் வங்கி

அதன்படி மாணவர்கள் தங்கள் வீட்டிலுள்ள தேவையற்ற சில பிளாஸ்டிக் பொருட்கள், பத்திரிக்கை, போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பின்பு அந்தப் பொருட்களை விற்று, அதற்கு உரிய தொகை அந்த மாணவரின் பெயரில் வங்கியில் வரவு வைக்கப்படும். மேலும், இப்படிச் சேமிக்கும் பணத்தைத் தேவையான போது மாணவர்கள் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தன்னுடைய திட்டத்தை பள்ளியில் சொன்னார் ஜோஸ்.

ஆனால், 7-வயது மாணவன் வங்கியை நிர்வாகம் செய்ய இயலாது என்றும், இது பயன் தராத திட்டம் என்றும் ஆசிரியர்கள் சொல்லி விட்டனர். பின்பு ஜோஸுக்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட பள்ளியின் முதல்வரும் துணை முதல்வரும் உதவுவதற்கு முன்வந்தனர்.

எனவே முதல்வரின் உதவியோடு வங்கியை ஆரம்பித்து விட்டார். இருந்த போதிலும் சில ஆசிரியர்கள் மாணவர்கள் அவரை மிக மோசமாகக் கிண்டல் செய்துள்ளனர். அதைப் பொருட்படுத்தமால் தொடர்ந்து வங்கியைச் செயல்படுத்த ஆரம்பித்தார் ஜோஸ்.

பின்பு அவருடைய வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஜோஸைப் புரிந்து கொண்டு ஆர்வத்துடன் வங்கியின் வாடிக்கையாளர்களாக மாறினார்கள். தேவையற்ற பொருட்களை மறுசுழற்சி செய்யும் நிறுவனத்துடன் பேசி, மாணவர்கள் கொடுக்கும் பொருட்களுக்கு கூடுதல் பணம் தரும்படி ஒப்பந்தம் செய்துகொண்டார் ஜோஸ்.

1 டன் மறுசுழற்சிப் பொருட்கள்

மேலும் இவர் ஆரம்பித்த வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்றால் 5 கிலோ மறுசுழற்சி பொருட்களைக் கொடுத்து வாடிக்கையாளர் அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பிறகு மாதம் ஒரு கிலோ பொருட்களை கொடுத்தால் கூடப் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டது.

சில வாரங்களில் இவரது வங்கியில் 200 வாடிக்கையாளர்கள் சேர்ந்தனர். தற்சமயம் 2ஆயிரம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். 2012-2013 ஆண்டில் மட்டும் 1 டன் மறுசுழற்சிப் பொருட்களை 200 வாடிக்கையாளர்கள் கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

“இந்த 4 ஆண்டுகளில் நான் அனுபவத்தின் மூலம் அதிகம் கற்றுக் கொண்டேன், இப்போது பெரியவர்களுடன் தயக்கமின்றி பேச முடிகிறது.” என்றும் ஜோஸ் தெரிவித்துள்ளார்.

இவரின் வெற்றி பெருநாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.