நியூயார்க் நகரத்தைபோன்று இரண்டு மடங்கு பெரிதான பனிக்கட்டி உடைகிறது!

0
121
antarctica

பனிக் கண்டமான அண்டார்டிக்காவில் பல்வேறு நாடுகளின் சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அண்டார்டிக்கா ஆராய்ச்சியில் பல மைல்கல்லைப் பதித்த ஐரோப்பிய யூனியன் கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது ஆராய்ச்சியாளர்களை அங்கு அனுப்பவில்லை. காரணம் குளிர். சாதாரண குளிரல்ல. ரத்தத்தை உறையவைக்கும் கடுங்குளிர். அத்தோடு சமீப ஆண்டுகளில் பனிப்பாறைகளின் உருவாக்கம் மற்றும் கடல் நீர் மட்டம் ஆகியவை குறித்த தரவுகள் குழப்பத்தில் இருந்துவந்தன. இந்த சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில்தான் அமெரிக்க விண்வெளித்துறை ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செயற்கைக்கோளினால் எடுக்கப்பட்ட அண்டார்டிக்காவின் பனிப்பாறையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதைப்பார்த்த அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும் தற்போது வியர்த்துக்கொட்டுகிறது.

அண்டார்டிக்காவின் Brunt Ice Shelf எனப்படும் பனிப்பாறை ஒன்றில் தான் இந்த வெடிப்பானது நிகழ்ந்திருக்கிறது. கடந்த 35 வருடங்களாக இந்த வெடிப்பு தொடர்ந்து வருவதாகவும், ஆண்டிற்கு 2.5 மைல் வரை இந்த வெடிப்பு ஏற்படுவதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பனி வெடிப்பு

நூற்றாண்டுக் கணக்கில் பெய்த பனிப்படலங்கள் ஒன்று சேர்ந்து வலுவான பனிப்பாறைகளாக மாற்றம் பெரும். கடல் சீற்றம், கடலுக்குள் ஏற்படும் அதிர்வுகள் போன்ற பல்வேறு காரணங்களினால் இந்த பனிப்பாறைகள் உடையும். இப்படித் தனித்தனியாக பிரியும் பனிப்பாறைகளின் அளவைப்பொறுத்து அதன் தாக்கமும் இருக்கும். தற்போது அங்குதான் சிக்கலே முளைத்திருக்கிறது. நாசாவின் புகைப்படத்தில் காட்டப்பட்டிருப்பது மிகப்பழைமையான பனிப்பாறையாகும்.

இன்னும் சில மாதங்களிலோ, வருடங்களிலோ பனிப்பாறையின் ஒருபகுதி கடலில் மிதக்க ஆரம்பிக்கும். இப்படி மிதக்க இருக்கும் பனிக்கட்டியின் அளவு எவ்வளவு தெரியுமா? 660 சதுர மைல்கள். அதாவது நியூயார்க் நகரத்தைப்போன்று இரண்டு மடங்கு பெரியது. இது கடல் நீர் மட்டம் உயர்வில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை தற்போது கூற இயலாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள சுட்டியை இடமிருந்து வலமாக நகர்த்தினால் தற்போதைய Brunt Ice Shelf ன் புகைப்படமும், வலது புறத்தில் இருந்து இடதுபுறம் நகர்த்தினால் 1986 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒருங்கே காணலாம். பனிப்பாறையின் மீதுள்ள வெடிப்பு கண்ணுக்கு புலப்படுகிறதா?

iceberg1iceberg

அடுத்த வெடிப்பு

Brunt Ice Shelf ல் நடைபெற்று வரும் இந்த வெடிப்பு மூன்று மைல் தூரத்தில் ஏற்கனவே பிளவுபட்டு இருந்த பனிப்பாறையை மேலும் பிளவடயச் செய்திருக்கிறது. இந்த இரு வெடிப்புகளும் ஒன்றுசேருமேயானால் மிகப்பெரிய அளவிற்கு அண்டார்ட்டிக்கா பாதிப்பை சந்திக்கும். இம்மாதிரியான நிகழ்வை ஆராய்சியாளர்கள் கால்விங் (calving) என்று அழைக்கிறார்கள்.

தற்போது நடக்க இருக்கும் இந்த கால்விங்கால் மீதமுள்ள Brunt Ice Shelf ம் சிதறிப்போகும் வாய்ப்புள்ளது என்கிறார் ஐரோப்பிய யூனியன் சார்பில் அண்டார்டிக்காவை ஆய்வு செய்துவரும் குழுவின் தலைமை ஆராய்சியாளரான டோம்னிக் ஹாட்ஜ்சன் (Dominic Hodgson).

இயற்கை நிகழ்வு

மேலே குறிப்பிட்ட கால்விங் ஆனது பனிப்பாறையின் வளர்ச்சியின்போது ஏற்படும் இயற்கை மாற்றம் தான் என ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருந்தாலும், தற்போது அண்டார்ட்டிக்காவில் இருக்கும் பனிப்பாறைகளின் தடிமன் மிகவும் குறைவாக இருப்பதாகவும், இதற்கு வெப்பமயமாதல் மிகமுக்கிய காரணம் என்றும் எச்சரிக்கிறார்கள்.

Ocean Waves Crashing on Seawall
Credit: British Antarctic Survey

Brunt Ice Shelf பனிப்பாறை அருகேதான் இங்கிலாந்தின் அண்டார்டிக்கா ஆராய்ச்சி மையமான Halley VI Research Station அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.