மனித-யானை மோதல்: தீர்வு தான் என்ன? – (பகுதி – 2)


113
29 shares, 113 points
முனைவர். கோவிந்தராசு கண்ணன் எழுதிய இக்கட்டுரை இரண்டு பகுதிகளை கொண்டது. முதல் பகுதியை இங்கே படிக்கவும்.

முதல் பகுதியில் நாம், யானைகள் மோதலுக்கான பொதுவான காரணங்களை பார்வையாளர்கள் நோக்கில் பார்த்தோம். இப்பகுதியில் வன விலங்கு ஆராய்ச்சியாளரின் பார்வையில் மனித-யானை மோதலுக்கான காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் காண்போம்.

மனித-யானை முரண்பாட்டுக்கான காரணங்கள்

1. வாழிட பற்றாக்குறை: யானை காட்டில் பெரும்பாலும் புற்களையும், மூங்கில் இலைகள், சீகை இலைகள் மற்றும் மரப்பட்டைகளையும் உணவாக உட்கொள்கிறது. இயற்கைத் தாவரங்கள் நிறைந்த யானைகளின் வாழ்விடத்தை நாம் எப்படியெல்லாம் கெடுத்து விட்டோம் தெரியுமா? வெளிநாட்டில் இருந்து அழகுக்காகவும், தோட்டத்திற்காகவும் கொண்டு வரப்பட்ட செடிகள் லண்டானா, யூப்படோரியம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையின் களைச்செடிகள் போன்றவைகளை காட்டுக்குள் பரவ விட்டும் காட்டின் புல்வெளியை சிதைத்து விட்டோம். இந்த களைச் செடிகள் அதிகளவில் வளர்ந்து, புல்வெளிகளுக்குள் பரவி, யானை உண்ண முடியாத வகையில் காட்டின் பெரும் பகுதியினை ஆக்கிரமித்துள்ளது. மேலும் மனிதனின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளும், நீர் தேங்கியிருக்கும் சதுப்பு நிலங்களை நெல் விளைவிப்பதற்காக ஆக்கிரமித்தும் யானைக்கு வாழிடப் பற்றாக்குறையை நாம் ஏற்படுத்துகிறோம்.

2.காட்டுத்தீ:
மனிதனால் செயற்கையாக காட்டில் ஏற்படுத்தப்படும் தீ யானைக்கு உணவாக கூடிய மூங்கில்களையும், பிற மரங்களையும், செடிகள், புற்கள், மற்றும் மரப்பட்டைகளையும்  சேதப்படுத்தி விடுகிறது. மேலும் காட்டின் புல்வெளியில் இருந்து களைச்செடிகள் உருவாக காரணமாகிறது.

3. மரம் வெட்டுதல்:
யானைக்கு உணவாக கூடிய மரங்களையும் செடி, கொடிகளையும் விறகுக்காக வெட்டுதல் யானை மனித முரண்பாட்டிற்கு முக்கிய காரணமாகும். வீடுகளுக்கு கட்டுமான பணிக்கும், கூடைகள், அழகுப் பொருள்கள் செய்வதற்கும், மூங்கில்களை வெட்டுவதும் காடு தன்னிலையை இழக்க காரணமாகிறது. காட்டின் அருகே உள்ள பெரும்பாலான கேளிக்கை விடுதிகளுக்கு கேம்ப்ஃபயர் (Campfire) போடுவதற்க்கும், ஓட்டல்களுக்கு விறகுக்காகவும் யானையின் உணவு மரங்கள் பல வெட்டப்படுகின்றன. இதனால் பறவையின் முக்கிய உணவுப்பொருள்களும் அழிக்கப்படுகின்றன.

4. சிறுவனப் பொருள்கள் சேகரிப்பு:
காட்டில் இருந்து யானை ருசித்து உண்ண கூடிய பொருட்களை, மனிதன் வியாபார ரீதியாக, தேவைக்கு அதிகமான அளவு எடுக்கும் போது காடுகளின் உணவு சமநிலை பாதிக்கப்படுகிறது. யானை அவைகளை தேடியும், சிறு உணவுப் பொருள்கள் சேகரித்து வைக்கும் இடங்களை நோக்கியும் வந்து விடுகின்றன. முக்கியமாக புளியப் பழம், துரிச்சி, நெல்லிக்காய், சீயக்காய், பூச்சுகாய், விழாம்பழம் ஆகியவை மக்களின் அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்காக எடுக்காமல் வியாபார ரீதியாக எடுக்கும் போது யானை நேரடியாகவே பாதிக்கப்படுகிறது.

5. கால்நடை மேய்ச்சல்:
காடுகளின் அருகே வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் கால்நடைகள். லட்சக்கணக்கான ஆடுகளும், மாடுகளும் காட்டின் உள்ளே மேயவிடுவதாலும், கால்நடை மேய்க்க செல்பவர்கள் செடிகளை, மரங்களை, வெட்டியும் ஆடுகளுக்கு உணவாகப் போடுவதால் காடுகள் சீர்குலைந்து நாளடைவில் ஒன்றுக்கும் பயனாகாத கட்டான் தரை போலாகிவிடுகிறது. உழவுக்காகவும், பாலுக்காகவும், மக்கள் வைத்து இருப்பதை தவிர ஆயிரக்கணக்கான பட்டி மாடுகள் சாணிக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இத்தகைய பட்டி மாடுகளால் வனம் முழுமையாக அழிக்கப்பட்டு யானைக்கு உணவு இல்லாமல் ஊருக்குள் வந்து, பயிர் சேதம் விளைவிக்க காரணமாகின்றன. காட்டுக்கு வெளியே மரபணு மாற்றப்பட்ட பலவற்றை உண்ணும் கால்நடைகள், காட்டுக்குள் சென்று சாணமிட்டு மரபணு மாற்றப்பட்ட செடிகள் காட்டுக்குள்ளும் வளர காரணமாகின்றன.

6. யானையினால் ஏற்படும் உயிர்ச்சேதம்:
யானையினால் மனிதனுக்கு ஏற்படும் உயிர்சேதம் பெரும்பாலும் காட்டின் உள்ளேயும் சில விவசாய நிலங்களிலும் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், கவனக் குறைவாக காட்டுக்குள் செல்வதும், பாதுகாப்பாக பரண் அமைத்து யானையை விரட்டாமல், அதன் அருகே சென்று விரட்டுவது போன்றவை ஆகும். பெரும்பாலான உயிர் சேதம், மாட்டு மேய்ச்சலின் போது நீருக்காக காட்டில் உள்ள நீர்நிலைக்கு அருகில் செல்வதாலும், மது அருந்தி விட்டு யானையை விரட்டும் போதும் ஏற்படுகிறது. ஒரு ஆண்டுக்கு தென் இந்தியாவில் மட்டும் 50 முதல் 80 வரை உயிர் சேதம் ஏற்படுகிறது. மேலும் செடிகள் சூழ்ந்திருக்கும் நிலையில் யானை இருப்பது தெரிவதில்லை. இதில் உயிர் இழப்போர் பெரும்பாலும் மாடு மேய்ப்பவர்கள், விறகு எடுக்க செல்பவர்கள், கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், குடிப்பழக்கம் உள்ளவர்கள், மனநிலை குன்றியவர்கள், காது கேளாதவர்கள் ஆவர். சில நேரங்களில் காடுகளுக்கு நாய்களை கொண்டு செல்பவர்கள் உயிர் இழக்கின்றனர். நாய் மீது கொண்ட கோபத்தில் யானை நாயை துரத்தும். பயந்து ஓடும் நாய், அது தன் உரிமையாளரின் பின் சென்று பாதுகாப்பாக இருக்க நினைக்கும் போது, யானை உரிமையாளரை தாக்க நேரிடுகிறது. மனிதனும் யானையும் திடீரென சந்திக்கும் போது பெரும்பாலான யானைகள் திடீரென தாக்குவதில்லை. அப்படியே தாக்கினாலும் லேசான காயங்களுடன் பலரும் தப்பித்து இருக்கின்றனர்.

சாதுவான யானைகள் தும்பிக்கையில் லேசாக அடித்து விட்டு செல்கிறது. கோபமான யானைகள் உயிர் போகும் வரை காலால் மிதித்தும், தந்தத்தால் குத்தியும் உயிர் இழக்க காரணமாகிறது. இந்தியாவில் யானையை காட்டிலும் வெறிநாய் கடியால் ஏற்படும் உயிர் இழப்பு அதிகமாக இருந்த போதிலும், ஊடகங்களாலும், மக்களாலும் யானையால் ஏற்படும் உயிர் சேதம் பெரிதுபடுத்தபடுகிறது.

மனித யானை முரண்பாட்டினை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்

மனிதனுக்கும் யானைக்கும் உள்ள பிரச்சினைகள் பல நூற்றாண்டுகளாக உள்ளன.18ம் மற்றும் 19ம் நூற்றாண்டில் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் மனித யானை முரண்பாட்டினை முடிவுக்கு கொண்டு வர யானைகளை குழி வைத்து பிடித்ததாக வரலாறு கூறுகிறது.

நம் முன்னோர்கள் காடுகளில் விதை விதைக்கும் போதே யானையினால் பயிர் அழிக்கப்படும் என்பதை எதிர்பார்த்து யானைக்கு போக மீதம் உள்ள பயிர்களையே அறுவடை செய்து வந்தனர். அக்காலத்தில் விதைக்கப்படும் விவசாய நிலம் யானைக்குரியது என்பதை முழுமையாக உணர்த்திருந்தனர். மேலும் யானை தெய்வமாகவும் மக்களின் பொறுமையும், விவசாயம் வியாபார ரீதியில் இல்லாமையும் இதற்கு முக்கிய காரணம். இக்காலத்தில் மக்கள் யானையை அரசாங்கப் பொருளாகவும், நிலங்களுக்கு உள்ளே வரும் யானையை மின்சாரம் பாய்ச்சியும், துப்பாக்கியால் சுட்டும், விஷம் வைத்தும் அழிக்கின்றனர். இதற்கு இக்கால மக்கள் பொறுமையை இழந்தும் விவசாயத்தை பொருளாதார ரீதியிலும் வியாபார ரீதியிலும் பார்ப்பதால் பிரச்சினை ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்கான சில வழிகளை காண்போம்.

 1. சத்தம் எழுப்புதல்:
  பண்டைக் காலம் முதலே சத்தம் எழுப்பி மிருகங்களை விரட்டுவது இருந்து வருகிறது. மரத்தின் மீது பரண் அமைத்தும், தரையில் குடிசை அமைத்தும் இரவு முழுவதும் வாயினால் சத்தமும், தகர டின் மற்றும் பறை போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சத்தம் ஏற்படுத்தி வந்தனர். மேலும் மூங்கில் மூலம் காற்றில் தானாகவே ஒலி எழுப்பும் பொருளும் செய்து நிலங்களில் வைப்பார்கள். இப்போது பெரும்பாலும் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்டுகின்றனர். இவ்வாறு யானையை விரட்டுவது எளிதாக இருந்தாலும் சத்தத்திற்கு பழக்கப்பட்ட யானைகள் அவ்வளவு எளிதாக நிலங்களை விட்டு வெளியேறுவது இல்லை. இதில் தரையில் குடிசை அமைப்பதும், யானையின் அருகே சென்று ஒலி எழுப்புதலும் உயிருக்கு ஆபத்தானவை, யானை எளிதாக தாக்கும் அபாயம் உண்டு.
 2. ஒளி எழுப்புதல்:
  இரவு நேரங்களில் பயிர்களை பாதுகாக்க காவல் இருக்கும் போது யானைகள் தோட்டத்தின் உள்ளே வரும் போது மிக பெரிய டார்ச்சின் உதவியால் சக்தி மிகுந்த ஒளியினை யானையின் முகத்தில் பாய்ச்சி யானையை பயமுறுத்தி விரட்டுகின்றனர். மேலும் சில நேரங்களில் பெரிய மூங்கில் அல்லது மரங்களின் நுனியினை தீயில் கொளுத்தி யானைக்கு அருகில் சென்று விரட்டுகின்றனர். இது மிகவும் பயனுள்ள முறை என்றாலும் யானைக்கு அருகே சென்று விரட்டுவது ஆபத்தை விளைவிக்கும்.
 3. அகழி (அ) பள்ளம்:
  யானைக் கூட்டங்கள் விவசாய நிலங்களுக்கு வருவதை தடுக்க காட்டிற்கும் நிலத்திற்கும் இடையே சுமார் 5 அடி ஆழமும், 6 அடி அகலமும் பள்ளத்தை தோண்டி யானை தாண்டாதவாறு அகழி வெட்டி யானையினால் ஏற்ப்படும் பயிர் சேதத்தை தவிர்க்கின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பல லட்ச கிலோ மீட்டர் அரசாங்கத்தால் மக்களின் பயிரை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட இத்திட்டம் மக்களின் பங்களிப்பு இல்லாமல் பெரும்பாலான இடங்களில் நிரந்தர தீர்வு இல்லாமல் இருக்கிறது. தொடக்கத்தில் யானையை முற்றிலும் விவசாய நிலத்திற்கு வர முடியாமல் தடுக்கும் இப்பள்ளம் நாளடைவில் மக்கள் தங்கள் வீட்டருகே இருக்கும் காட்டிற்கு மாடு, ஆடுகளை மேய்க்க அவரவர் பகுதியில் உள்ள பள்ளத்தை மட்டப் படுத்தி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புகின்றனர். மட்டப்படுத்தப்பட்ட அந்த பாதையை, பின்னர் யானை கூட்டமும் பயன்படுத்துகிறது. மேலும் மழை அதிகளவு பெய்யும் பொழுது இப்பள்ளம் விரைவில் மூடி விடுகிறது. ஆண்டுதோறும் இப்பள்ளத்தின் சீரமைப்பு பணிகளை அரசாங்கமே செய்யும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் அதனை பராமரிக்காமல் விட்டு விடுகின்றனர்.
 4. சூரிய மின்வேலி:
  சூரிய ஒளியின் சக்தியை மின்சாரமாக மாற்றி கம்பி வேலிகளில் செலுத்தி வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கின்றனர். இவ்வகையாக வேலி யானைகளிடம் இருந்து மட்டுமில்லாமல் மான், காட்டுபன்றி, காட்டெருமை இவைகளிடம் இருந்தும் பயிரை பாதுகாக்க உதவுகிறது. மிக அதிகளவு முதலீடு தேவைப்படும் சூரியமின் வேலியை மிக பெரிய தோட்டத்தின் அல்லது பண்ணைகளில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான பழத்தோட்டம், பூந்தோட்டம், தென்னை, பாக்கு தோட்டங்களில் இவ்வகை சூரியமின் வேலி நல்ல முறையில் செயல்படுகிறது. இவ்மின்வேலியில் இருந்து வரும் மின்சாரம் யானை மற்ற வனவிலங்கு வேலியை தாண்ட முற்படும் போது சிறிதளவு ஷாக் ஏற்ப்படும். மற்றபடி எந்த ஒரு மிருகத்திற்கும் உயிர் சேதம் ஏற்படாது. தொடக்கத்தில் வேலியின் அருகே வர பயப்படும் யானைகள் கம்பி வேலியின் மின்சார பாயத இரும்பு தூண்களை நகத்தால் எத்தியும், காய்ந்த மரக்கிளை எடுத்து வந்தும் வேலியை சேதப்படுத்தி நிலங்களுக்குள் நுழைகிறது. இவ்வாறு யானை வேலியை சேதப்படுத்துவதை தவிர்க்க வேலிக்கு முன்பாக ஒரு கம்பியை எந்தவித ஊன்றுகோலும் அருகே இல்லாதவாறு அமைப்பதால் யானை கம்பியைத் தொடாமல் வந்த வழியே காட்டுக்குள் செல்கிறது. வனத்துறையால் பல கிராமங்களுக்கு ஏற்படுத்தி தரப்பட்ட சூரியமின்வேலி மக்களின் பங்களிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாமல் செயல் இழந்து விட்டது. இன்றும் சூரிய மின்வேலி மட்டுமே யானையை தடுக்கும் நம்பிக்கை உரிய திட்டமாக உள்ளது. மின்வேலியின் அருகே வளரும் செடிகள் மற்றும் புற்களை வாரம் ஒரு முறை வெட்டி ஒரு கம்பிக்கும் மற்றொரு கம்பிக்கும் இச்செடியின் மூலமாகவே புற்களின் மூலமாகவே தொடர்பு இல்லாதவாறு பராமரிக்க வேண்டும்.
 1. மின்வேலி:
  இவ்வகை மின்வேலியை பெரும்பாலும் சிறு விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். வீட்டுக்கு வரும் மின்சாரத்தை பேட்டரியில் சார்ஜ் செய்து பின்னர் அதனை கம்பி வேலிகளில் செலுத்துகின்றனர். யானை மற்றும் பல்வேறு உயிரினங்கள் இவ்வகை மின்வேலிகள் உயிரை இழக்கின்றன. இவ்வகை மின்வேலியில் மழைக்காலங்களில் பேட்டரி மற்றும் சார்ஜ் செய்யும் கருவியில் ஏற்படும் பழுதால், யானையை கொல்லத்தக்க அளவிலான மின்சாரம் நேரடியாக மின் வேலியில் பாய்ந்து யானை உயிரை இழக்கிறது. சிலர் மான்களுக்கும் காட்டுப் பன்றியின் இறைச்சிக்கும் வைப்பதாக கூறும் மின்வேலிகள் யானையை கொல்கிற நோக்கத்திலேயே வைக்கப்பட்டதாகும். யானையை கொல்ல உயர் அழுத்த மின்சாரத்தை வேலியில் பாய்ச்சுகிறார்கள். மேலும் மின்வேலியை பாதுகாப்பாக பயன்படுத்த பேட்டரி மற்றும் கம்பிகள், சார்ஜ் செய்யும் கருவி அனைத்தையும் தரம் வாய்ந்த பொருளாக ஐ.எஸ்.ஐ. முத்திரையும் வாங்க வேண்டும். யானையை தடுத்து சிறப்பாக செயல்படும் மின்வேலி கீழ்கண்ட பண்புகளை பெற்றிருக்கும்.
  (அ) மின்வேலியில் உள்ள கம்பிகளும், ஊன்றுகோலும் வளைந்து கொடுக்க கூடிய பொருளாக இருப்பதால் யானை எளிதில் கம்பி மற்றும் ஊன்றுகோல் தொடவே சேதபடுத்தவோ முடியாது.
  (ஆ) தரை மட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரமுள்ளதாக இருக்க வேண்டும்.
  (இ) மற்ற செடிகள், கொடிகளால் மின்வேலிக்கு ஏற்படும் பிரச்சினையை தாமாகவே செடி, கொடிகள் கம்பியுடன் இணையும் போது அதனை எரித்து தன்னை பாதுகாத்து கொள்கிறது.
 2. மாற்று பயிர் திட்டம்:
  இவ்வகை மாற்று பயிர்களை விளைவிப்பதன் மூலம் யானை மூலம் நடக்கும் பயிர் சேதத்தை தவிர்க்கலாம். யானை உண்ணாத, ருசி இல்லாத பயிர்களை அதிகளவு காட்டை ஒட்டியுள்ள நிலங்களில் பயிர் செய்வதால் யானையால் ஏற்படும் பயிர் சேதம் பெருமளவு குறைகிறது. எடுத்துக்காட்டாக, யானைக்கு உதவாத பயிர்களான ஆமணக்கு செடிகள், மிளகாய் செடி, இஞ்சி, பட்டுப் பூச்சி இலை, மற்றும் பல்வேறு கிழங்கு வகைகளான உருளை, பீட்ரூட், முள்ளங்கி, கேரட் இவைகளை விளைவிப்பதன் மூலம் யானையால் நடக்கும் பயிர்சேதம் பெருமளவு குறைக்கப்படும்.
 3. மிளகாய் தூள் வேலி:
  கென்ய நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வகை வேலிகள் நல்ல பலனை தந்திருக்கின்றன. மிகக் குறைந்த செலவே ஆகும் மிளகாய்த் தூள் வேலியை இந்தியாவில் ஓசூர் வனக் கோட்டத்திற்குட்பட்ட குல்லட்டி கிராமத்தில் ஆசிய யானை ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மையம் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டுள்ளது. யானைக்கு நுகரும் தன்மை அதிகமுள்ளதால் இவ்வகை மிளகாய் பொடி வேலி யானைக்கு எரிச்சலை தந்து விவசாய நிலங்களுக்கு வர விடாமல் தடுக்கிறது. மிளகாய்த் தூள் வேலியை அமைக்க விவசாய நிலங்களை சுற்றி ஊன்றுகோல் துணையுடன் சணல் கயிரை வேலியை போன்ற சுமார் 5 அடி உயரம் கட்ட வேண்டும். பின்னர் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இவ்வேலியை அமைக்க 10 லிட்டர் வேஸ்ட் இஞ்சின் ஆயில், ஒரு கிலோ மிளகாய் பொடி, ஒரு கிலோ மூக்குபொடி ஆகியவற்றை இஞ்சின் ஆயிலில் கலந்து பின்னல் சணல் கயிறுகளில் பூச வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் யானை பயிர் சேதத்தை தவிர்க்கலாம். மேலும் மழைக்காலத்தில் மழை நின்றவுடன் திரும்பவும் இவற்றை பூச வேண்டும்.

மேலே குறிப்பிட்ட வழிமுறைகள் யாவும் மனித-யானை மோதலை தவிர்ப்பதற்கான தற்காலிக தீர்வு மட்டுமே; நிரந்தர தீர்வை நோக்கி தீவிரமாக பல்வேறு ஆராய்ச்சி செய்தால் மட்டுமே யானையினத்தைப் பாதுகாக்க முடியும்.

இந்தியாவில் யானையின் எண்ணிக்கை தொடர்ச்சியா உயர்ந்து வந்தாலும், வயது முதிர்ந்த ஆண் யானை குறைவு, வாழ்விட பற்றாக்குறை, மனிதர்களின் தொடர் தாக்குதல் பருவகால மாற்றத்தாலும் யானை இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதே நிதர்சனமான உண்மை .

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

113
29 shares, 113 points
முனைவர். கோவிந்தராசு கண்ணன்,
முனைவர். கோவிந்தராசு கண்ணன், வனவிலங்கு ஆராய்ச்சியாளர்
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.