இந்த வார ஆளுமை – அவர் தான் பெரியார்..! – செப்டம்பர் 17, 2018

உலக நாகரிகத்திற்கெல்லாம் வித்திட்ட தேசங்களில் ஒன்றான நமது தமிழ்நாட்டில் தான் பல தேசங்களில் காண முடியாத ஓர் அநாகரிகமும் வேரூன்றி இருக்கிறது. அது தான் தீண்டாமை.


137
24 shares, 137 points

மேலை நாடுகளில் கூட தோலின் நிறத்தில் அடிப்படையில் தான் இன ஒதுக்கல் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், நமது தேசத்தில் தான் பிறப்பின் அடிப்படையிலும், செய்யும் தொழிலின் அடிப்படையிலும் ஒருவன் மேல் சாதி என்றும், கீழ் சாதி என்றும் தரம் பிரிக்கப்பட்டான் இன்றும் பிரிக்கப்படுகிறான். இந்த அநீதிகளால் கூனிக் குறுகிப் போய் சுய மரியாதையை இழந்து தாங்கள் மனிதர்கள் என்ற உணர்வையும் மறந்து போன உயிர்கள் எத்தனை கோடி இருக்கும்? அந்த எண்ணிக்கையை வரலாறு கூட மறந்து போயிருக்கும். பாதிக்கப்பட்டோரில் பலர் அது நம் விதி என்று ஒதுங்கி நிற்க, அது விதியல்ல ஆதிக்கவர்க்கத்தின் சதி என்று துணிந்து சொன்னார் ஒருவர்.

அறியாமையும், மூட நம்பிக்கைகளுமே தீண்டாமைக்கும், சாதிக் கொடுமைகளுக்கும் காரணம் என்று நம்பிய அவர், தாழ்த்தப்பட்டவர்களைத் தூக்கி நிறுத்த சுய மரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை போன்றவற்றை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தார். அவர்தான் ‘தந்தை பெரியார்’ என்று தமிழுலகம் மரியாதையோடு போற்றும் திரு.ஈ.வெ.ராமசாமி.

இன்றும் ஆரியமும், ஆதிக்க சாதியும், ஆண்ட சாதியும் அஞ்சி நடுங்குவது பெரியார் என்ற தாடிக்குத் தான். அடங்கிப் போ என்று எவ்வளவு அடித்தாலும், குனிந்து வாங்காமல் நெஞ்சை நிமிர்த்தி நாம் எதிர்ப்பது பெரியாரின் தடி தந்த வீரத்தில் தான். அன்று அந்தக் கிழவர் விதைத்த விதை தான் இன்று விருட்சமாகி, ஆரியத்தை நம் தமிழ்நாட்டைக் கண்டாலே பதற வைக்கிறது.

பெரியார் பிறப்பு

1879 – ஆம் ஆண்டு செம்படம்பர் 17-ந்தேதி, வெங்கடப்ப நாயக்கர், சின்னத்தாயி அம்மாள் ஆகியோருக்கு மகனாக தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்தார் ஈ.வெ.ரா எனப்படும் ஈ.வெ.ராமசாமி. வசதியான குடும்பம் தான். இருந்தும் அவர் மூன்று ஆண்டுகள் தான் கல்வி கற்றார். இளம் வயதிலேயே படிப்புக்கு முழுக்குப் ] போட்டு விட்டு தந்தையின் வணிகத்திற்கு உதவத் தொடங்கினார்.

உயர் சாதி என்று கருதிக் கொண்டவர்களின் குடும்பத்தில் பிறந்து, வசதியான வாழ்க்கையை வாழ்ந்தாலும், ஈ.வெ.ராவுக்கு மட்டும் சிறு வயதிலேருந்தே சமத்துவம், சமநீதி என்ற எண்ணம் வளரத் தொடங்கியது. சமுதாயப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். 1919 – ஆம் ஆண்டு 40 வயதான போது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்ட அவர் மளிகை வியாபாரம் உட்பட நல்ல வருமானம் தந்து கொண்டிருந்த அத்தனை தொழில்களையும் விட்டு விட்டு சமூகப்பணியில் ஈடுபடுவதற்காக இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். அப்போது ஈரோடு நகர மன்றத் தலைவர் பதவி உட்பட மொத்தம் 29 பொறுப்புகளிலிருந்தும் ஈ.வெ.ரா விலகினார். காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அந்த இயக்கத்தில் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

சுயமரியாதை இயக்கம்

1922 – ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டத்தில் கீழ்சாதி, மேல்சாதி என்ற பேதமில்லாமல் எல்லோரும் எல்லாக் கோவில்களிலும் நுழைய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். பிராமணர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். போராட்டத்தில் பின் வாங்காத ஈ.வே.ரா அடுத்த மூன்று ஆண்டுகளில், கேரளாவில் வைக்கம் என்ற இடத்தில் சாதி எதிர்ப்பு போராட்டம் மேற்கொண்டார். அதன் வெற்றியால் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் அச்சமின்றி பொதுச்சாலைகளைப் பயன்படுத்த முடிந்தது.

நவீன இந்தியாவின் வரலாற்றில் அதுவே முதல் சமூகப் போராட்டமாக வர்ணிக்கப்படுகிறது. காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்ததிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமையை ஒழிக்க எவ்வுளவோ முயன்றார் ஈ.வெ.ரா. சமத்துவம் கிடைக்க வேண்டுமென்றால் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யும் முறை அறிமுகமாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு காந்தியடிகள் மறுப்புத் தெரிவிக்கவே 1925 – ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகினார் ஈ.வெ.ரா அதே ஆண்டு அவருக்கு மிகப்பெரிய மரியாதையைப் பெற்றுத் தந்த சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.

ஹிந்தித் திணிப்பு

முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக இருக்கும் மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைத் தூக்கி எரியுமாறு தமிழர்களுக்குக் கோரிக்கை விடுத்தார். பூசாரிகள் இல்லாமல் சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். பெண்களுக்கு எல்லாத் துறைகளிலும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சாதி வேற்றுமை பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளவும், விதவைகள் மறுமணம் செய்து கொள்ளவும் ஊக்கமூட்டினார். கோவில்களில் பின்பற்றப்பட்ட தேவதாசிகள் முறையை ஒழிக்க சட்டப்பூர்வமாக ஆதரவு திரட்டினார். குழந்தைகள் திருமணத்தை வன்மையாகக் கண்டித்தார். அவருடைய தொடர்ந்த விடாப்பிடியான முயற்சியால் 1928 – ஆம் ஆண்டு அரசாங்க வேலைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யும் முறையை சென்னை நிர்வாகம் அறிமுகம் செய்தது.

1937 – ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராஜகோபாலாச்சாரி என்ற ராஜாஜி உயர்நிலைப் பள்ளிகளில் ஹிந்தி மொழியை கட்டாயமாக்கினார். அதனை வன்மையாக எதிர்த்த பெரியாரின் உறுதியான தலைமையில் 1938 – ஆம் ஆண்டு பெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. அதனால், சிறையில் அடைக்கப்பட்டார் பெரியார். அவர் சிறையில் இருந்தபோது சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாடு ஒன்றில் ஈ.வெ.ராவை இனிமேல் ‘பெரியார்’ என அழைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அன்றிலிருந்துதான் ஈ.வெ.ராவுக்கு பெரியார் என்ற பெயர் நிலைத்தது.

சிறையிலிருந்து வந்ததும் சுதந்திர திராவிட நாடு வேண்டும் என்ற போராட்டத்தில் இறங்கினார் பெரியார். அதே நேரம் இந்தி எதிர்ப்புப் போராட்டமும் தொடர்ந்தது. இறுதியில் 1940 – ஆம் ஆண்டு ஜனவரி 21-ந்தேதி கட்டாய இந்தி மொழிக்கல்வித் திட்டத்தைத் திரும்பப் பெற்றது சென்னை நிர்வாகம். பெரியாரின் தொடர் போராட்டத்திற்கு இன்னொரு வெற்றி கிடைத்தது. 1941 – ஆம் ஆண்டில் இரயில்வே நிலையங்களில் இருந்த உணவகங்களில் பிராமணர்களுக்கும், மற்றவர்களுக்கும் தனித்தனியாக உணவு பறிமாறப்படும் அருவறுப்பான பழக்கம் அந்த ஆண்டிலிருந்து தடை செய்யப்பட்டது.

1944 – ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் பெயரை ‘திராவிடர் கழகம்’ என்று மாற்றினார் பெரியார். கழக உறுப்பினர்கள் தங்கள் பெயர்களிலிருந்து குலப்பெயர்களையும், சாதிப்பெயர்களையும் நீக்கி விட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். 1948 – ஆம் ஆண்டு தமது 70 ஆவது வயதில் 30 வயதான மணியம்மையை மணந்து கொண்டார் பெரியார். அதனைக் காரணம் காட்டித் தான் சிலர் திராவிடர் இயக்கத்திலிருந்து பிரிந்து அறிஞர் அண்ணாவின் தலமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினர்.

குலக்கல்வித் திட்டம்

1952 – ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக வந்த ராஜாஜி ஒரு விசித்திரமான திட்டத்தை அறிவித்தார்.  பள்ளிச் சிறுவர்கள் காலை நேரங்களில் பள்ளிப் பாடங்களையும், மதிய நேரங்களில் அவர்களது பெற்றோர் செய்து வந்த தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த திட்டம். குலக்கல்வி திட்டம்  என்று அழைக்கப்பட்ட அது தீண்டாமையைத் தொடரச் செய்யும் ஒரு சூசகமான திட்டம் என்று கொதித்தெழுந்த பெரியார் அதனை மீட்டுக் கொள்ளுமாறு முழங்கினார். அதன் விளைவாக 1954 – ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ராஜாஜிக்கு ஏற்பட்டது.

அடுத்து முதலமைச்சர் பதவிக்கு வந்த காமராஜர் உடனடியாக குலக்கல்வித் திட்டத்தை நிறுத்தினார். முதிர்ந்த வயதிலும் சமத்துவத்துக்கும், சமநீதிக்குமுமான போராட்டத்தை நிறுத்தவில்லை தந்தை பெரியார். அதன் பலனாக 1971 – ஆம் ஆண்டு ஜனவரி 12-ந்தேதி சாதி, குலம் என்ற அடிப்படையில் இல்லாமல் அனைவருக்கும் சமமான வேலை வாய்ப்புகளை வழங்கும் சட்டத்தை அமல்படுத்தியது திராவிட முன்னேற்றக் கழகம்.

பின்னர் 1973 – ஆம் ஆண்டு கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தினார் பெரியார். கோவில்களில் உள்ள கர்ப்ப கிரகத்துக்குள் எந்த சாதியைச் சேர்ந்த ஒருவரும் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே அந்த போராட்டத்தின் நோக்கம். இது போன்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டுமென்று தன் கடைசி மூச்சுவரை போராடி, சுய மரியாதை உணர்வை விதைத்து, தீண்டாமையை ஒழித்து, சாதிக்கொடுமைகளை புறமுதுகிட்டோடச் செய்த தந்தை பெரியார் 1973 – ஆம் ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி தமது 94 ஆவது வயதில் காலமானார். அவரது வீரியமான பேச்சுக்களிலிருந்து இதோ ஒருசில வரிகள்…

“மூடநம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது”

“சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கமே பக்தியை விட இன்றியாமையாதது, ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடியே நடப்பதும் நடந்து கொண்டபடியே சொல்லுவது ஆகும். பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்”

தந்தை பெரியாருக்கு 1970 – ஆம் ஆண்டு யுனஸ்கோ அமைப்பு விருது வழங்கிச் சிறப்பித்தது. அந்த விருதில் பொறிக்கப்பட்ட வாசகம் இது…

புதிய யுகத்திற்கான தூதுவர், தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ், சமுதாயச் சீர்திருத்தத்தின் தந்தை, அறியாமை மூடபழக்கங்கள் ஆகியவற்றின் எதிரி.

இந்த அத்தனை வர்ணனைக்கும் பொருத்தமானவர் தந்தை பெரியார் அவர்கள். அவரைப் போல் தனக்குச் சரியென்று பட்டதைத் தயங்காமல் சொல்லும் அஞ்சாமையும், எதிரியாக இருந்தாலும் அவரை மதிக்கும் பண்பும், சமத்துவம் ஓங்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையும் இவற்றிற்கெல்லாம் மேலாக மூடபழக்கவழக்கங்களைத் தூக்கி எறியும் திணவும் தைரியமும் உள்ள எவருக்கும் வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்பது தான் வரலாறு சொல்லும் உண்மை.

பெரியார் வாழ்வு ஒவ்வொருவருக்கும் பாடம். அந்தப் பாடம் கற்பிப்பது சுதந்திரத்தையும், சுயமரியாதையையும். பெரியாரைப் படித்துத் தான் நாம் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றில்லை. கொஞ்சம் பகுத்தறிவும், சுயமரியாதையும், துணிவும் இருந்தால், சமூகத்தில் இருக்கும் ஏற்றதாழ்வுகளைக் கண்டு உங்களுக்கு எழும் ஒவ்வொரு கேள்வியையும், ஆதிக்கத்திற்கு எதிராக நீங்கள் எழுப்பும் ஒவ்வொரு குரலையும் தான் பெரியார் அன்று எழுப்பினார்.

பிறகேன் அவரைக் கொண்டாட வேண்டும்? ஏனெனில் இன்று நாம் குரல் எழுப்ப, கேள்வி கேட்க அன்று போராடியவர், சுதந்திரம் பெற்றுத் தந்தவர் தான் பெரியார்.

ஆம், அவர் தான் பெரியார்.

தமிழ்நாட்டின் மாபெரும் ஆளுமையான தந்தை பெரியாரை அவரது பிறந்தநாளான இன்று இந்த வார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

137
24 shares, 137 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.