காலவரையின்றி மூடப்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் – 1 கோடி தொழிலாளர்கள் நிலை என்ன?

0
79

தமிழகத்தில் சிறு குறு தொழிலகங்கள் அதிகம் உள்ள இடமாக இருக்கிறது விருதுநகரின் சிவகாசி. இங்குதான் பட்டாசுத் தொழிற்சாலைகளும், தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் அதிகம். நாட்டின் மொத்தப்பட்டாசுத் தேவையின் 95 சதவிகிதத்தினை சிவகாசி உற்பத்தி செய்கிறது. ஆனால், இப்போது உச்சநீதி மன்றத் தீர்ப்பின்  காரணமாக  அந்த  நகரத்தில் வேலையிழப்பும், வேலைத் தட்டுப்பாடும்உருவாகியுள்ளது.

சிவகாசியில் பட்டாசுத் தொழிலும், தீப்பெட்டித் தொழிலும், அச்சகத் தொழிலும் மிக முக்கியமான தொழில்களாக அமைந்து வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்கித் தந்தன. பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு மட்டுமல்லாமல், கல்வி அளிப்பதற்கென கல்விக் கூடங்கள், கல்லூரிகள் என பட்டாசு ஆலை நிர்வாகங்களே நடத்தி வந்தன. பெரிய தொழிற்சாலைகள் மட்டுமன்றி குடிசைத் தொழில் போல மேற்கண்ட தொழில்களை செய்து வந்தவர்களும் சிவகாசியில் ஏராளம்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படும் என்று கூறி சுற்றுச் சூழல் பாதுகாப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. இதனால் இந்த வருடம் தீபாவளிக்கு 2 மணி நேரமே வெடிகள் வெடிக்கப் பட வேண்டும் என்று கால வரையறை கொடுத்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இதையடுத்து பட்டாசு விற்பனை இந்த வருடம் மிகவும் மந்தமானது. சென்ற வருடம் தயார் செய்து வைத்திருந்த பட்டாசுகளே இந்த வருடத்துக்கும், அடுத்த வருடத்துக்குமே போதுமானதாக இருந்த நிலையில், தீர்ப்பின் காரணமாக மேலும் பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும், குறைவான சத்தத்தையும், புகையையும் ஏற்படுத்தும் பசுமைப் பட்டாசுகளைப் பொதுமக்கள் பயன்படுத்துமாறும் நீதிமன்றம் பரிந்துரைத்தது.

இந்த முறை 30 சதவீதப் பட்டாசுகளே சென்னைத் தீவுத் திடலில் விற்பனையானதாகக்  கூறப்படுகிறது. மதுரை, கோவை என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்களிலும் பட்டாசு விற்பனை வெகுவாக பாதிக்கப் பட்டது.

இந்த நிலையில், வேறு வழியின்றி 1400 பட்டாசு ஆலைகளும் காலவரையின்றி மூடப் படுவதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் ஏறத்தாழ 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒரு நகரமே செய்து கொண்டிருந்த ஒரு தொழில் மூடப்படுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகும். இந்த இக்கட்டான நிலையை சமாளிப்பது குறித்து அரசும், பட்டாசு ஆலை உரிமையாளர்களும் விரைவில் முடிவு எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.