பட்டாசுகள் மட்டும் தான் கொண்டாட்டமா ? – வண்ண வெடிகளின் கருப்புப் பக்கங்கள்

0
13
Credit : Maps Of India

புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள், கொண்டாட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள் எனக் களை கட்டிய தீபாவளி ஒருவழியாக முடிந்து விட்டது. என்ன தான் நீதிமன்றம் கெடுபிடிகளை விதித்தாலும் நாள் முழுவதும் பட்டாசுச் சத்தங்கள் கேட்ட படியே தான் இருந்தன. பின் வெடிச் சத்தம் இல்லாமல் தீபாவளியா?

ஆனால், சில வருடங்களுக்கு முன் கொண்டாடிய தீபாவளிகளைப் போல இன்றைய தீபாவளிகள் இருப்பதில்லை. புத்தாடை அணிந்து புகைப்படம் எடுத்து விட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குள் முடங்கிப் போய் விடுகின்றனர். சிறுவர்கள் தான் இன்னும் பண்டிகைகளை சாயம் போகாமல் வைத்திருக்கின்றனர். அடுத்த வருடம் அந்த நிலையும் மாறலாம். நீதிமன்றங்களின் அறிவுறுத்தல்கள் ஏதும் இன்றியே பட்டாசு இல்லாத தீபாவளியைப் பார்க்க நேரலாம்.

வெடிச்சத்தம் குறைந்தது

நாம் கடந்து வந்த வருடங்களைப் போல் அல்லாமல் வருடாவருடம் வெடிச் சத்தங்கள் குறைந்து கொண்டே வருவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இன்றைய தலை முறையினருக்கு வெடி வைப்பதன் மேலான ஈடுபாடுகள் குறைந்திருக்கலாம். எகிறி நிற்கும் பட்டாசு விலைகளைக் கண்டு நடுத்தர வர்க்கத்தினர் சற்று பின் வாங்கியிருக்கலாம். நிஜமாகவே நீதிமன்ற அறிவுறுத்தல்களை மதித்திருக்கலாம். அல்லது கொண்டாட்டங்களை விட பணத்தின் மீதான கரிசனம் அதிகரித்திருக்கலாம்.

கொண்டாட்டங்கள் என்றால் பட்டாசு மட்டுமா என்ன? தீபாவளிக் கொண்டாட்டங்கள் பட்டாசை மட்டுமே மையப் படுத்தியிருக்கின்றன. ஆனால், நாட்டின் 95 சதவிகித பட்டாசுத் தேவையை நிவர்த்தி செய்யும் சிவகாசியில் பெரும்பாலான மக்கள் பட்டாசுகள் வெடிப்பதில்லை.

பட்டாசுத் தொழிலின் பரிதாபம்

ஒரு நாள் தீபாவளிக்கான பட்டாசுகள், சிவகாசியில் ஒரு வருடம் முழுவதும் தயாரிக்கப்படுகின்றன. பட்டாசுகள் மட்டுமின்றி தீப்பெட்டித் தொழிற்சாலையும் அங்கு அதிகம்.

சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் 850 க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் நேரடியாக 5 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், அதில் பெரும்பாலானோர் குழந்தைத் தொழிலாளர்கள்.

Credits : FrontLine

குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம் கடுமையாக அமலில் உள்ளதே அதெப்படி சாத்தியம் என்கிறீர்களா? குழந்தைத் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வைக்கப்படவில்லை என்று பலகைத் தொங்க விடப் பட்டு இருந்தாலும், தொழிற்சாலையின் உள்ளே சிறுவர், சிறுமியர் பலர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு கூலியாக 100 ரூபாய் கொடுத்தால் போதும் என்கிறார் சிவகாசியைச் சேர்ந்த நண்பர் ஒருவர்.

இதுமட்டுமின்றி, அந்தத் தொழிற்சாலைகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்கள் பற்றிய செய்திகள் தினம் தோறும் செய்தித் தாள்களில் தவறாமல் இடம் பெறுகின்றன. தேவை இருக்கும் பொருட்களே அதிகம் உற்பத்தி செய்யப்படும். பட்டசின் தேவைகள் குறைந்து விட்டால், இவர்கள் வேறு ஏதேனும் பாதுகாப்பான பணியில் ஈடுபட, குழந்தைகள் பள்ளி செல்லச் சிறியதாக வாய்ப்புண்டு.

சீனப்பட்டாசுகள் வெடிக்கலாமா?

சீனப் பட்டாசுகள் சட்ட விரோதம், ஆபத்தானவை, சிவகாசித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதெல்லாம் நாம் அறிந்தது தான். சரி சிவகாசியில் தானே இத்தனை சிக்கல்கள் உண்டு, அதனால் சீனப் பட்டாசுகளை வாங்கலாமா? என்றால் அங்குள்ள தொழிற்சாலைகளிலும் குழந்தைத் தொழிலாளர்கள் தான் அதிகம். அங்கு பெரும்பாலும் இயந்திரங்கள் கொண்டு பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன என்றாலும், பணியாளர்களில் குழந்தைகள் தான் அதிகம்.

சுற்றுச்சூழல் சீர்கேடு

இதையெல்லாம் தாண்டி, நாட்டின் சுற்றுச்சூழல், காற்று மாசு ஆகியவற்றின் நிலை எல்லாம் நாம் அறிந்ததே. டெல்லியில் மக்கள் சுவாசிப்பதற்குக் கூட சிரமப் பட்டு வருகின்றனர். நாட்டில் மற்ற எந்த செயலில் இருந்தும் காற்று மாசுபடாதா? நாங்கள் ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் மட்டும் தான் மாசுபடுமா? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. ஆனால், காற்றை மாசுபடுத்த மற்ற செயல்களை எல்லாம் எங்கிருந்தோ ஏலியன் ஒருவர் வந்து செய்வதில்லை. அதையும் நாம் தான் செய்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எது எப்படியோ, யாரையும் பட்டாசு வெடிக்காதீர்கள் என்று சொல்ல நமக்கு உரிமை இல்லை. மக்கள் கொண்டாடத் தான் பண்டிகைகள். எது கொண்டாட்டம் என்பதை அவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும். ஆனால், கடந்த கால தீபாவளிகளில் இருந்து தற்போதைய தீபாவளி மாறுபடுவதைப் போல, இனிவரும் காலங்களில் ஏதோ ஒரு காரணத்தால் பட்டாசு வெடிக்கும் பழக்கம் குறைந்து விட்டால் நல்லது தான்.