கிரிமினல் வேட்பாளர்கள் செய்த குற்றங்களை பத்திரிகை, டிவியில் விளம்பரமாக வெளியிட வேண்டும் – தேர்தல் கமிஷன் உத்தரவு

0
10
election commission of india
Credit: Deccan Chronicle

மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு பல நிபந்தனைகள் விதித்துவருகிறது. அதில் மிக முக்கியமானது,” வேட்பாளர்களை அவர்களது குற்ற வழக்கு பற்றிய விபரங்களை வெளியிடுமாறு அறிவித்தது. இதனால் தேர்தல் களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் தங்களைப்பற்றிய கிரிமினல் குற்றங்களை பொதுவெளியில் அறிவிக்கத் தயங்கி வருகிறார்கள். இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட பதிவுகளின்படி 1,398 கிரிமனல் வேட்பாளர்கள் உள்ளனர்.

election commission of india
Credit: Deccan Chronicle

நீடிக்கும் நெருக்கடி

வேட்பாளர்கள் தங்களது வெளிநாட்டில் இருக்கும் சொத்து விபரங்கள் மற்றும் கடைசி ஐந்து வருடங்கள் செலுத்திய வருமான வரிக் கணக்கு ஆகியவற்றை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற ஆவணங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நடைமுறை கடந்த டிசம்பரில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முதல் அமல்படுத்தப்பட்டு வரும்நிலையில், வருகிற மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் முதல் முறையாக அமலுக்கு வருகிறது.

விளம்பரம்

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பின்படி, வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகள், அவற்றில் பெற்ற தண்டனை மற்றும் வழக்கின் தற்போதைய நிலை ஆகியவற்றை அம்மாநிலத்தின் முன்னணி சேனல்கள் மற்றும் பத்திரிக்கைகளில் விளம்பரமாக வெளியிடவேண்டும். குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட வேண்டும்.

தங்கள் மீது எவ்வித வழக்கும் இல்லாத வேட்பாளர்களும் அதனை விளம்பரம் மூலம் தெரிவிக்கவேண்டும். அதேபோல் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற ஆவணங்களை சம்பந்தப்பட்ட கட்சித் தலைமையும் விளம்பரப்படுத்த வேண்டும். அது குறித்த தகவல்களை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு இருக்க வேண்டும்.

election
Credit: Livemint

வாழ்நாள் தடை

எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றால் அவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடுத்தார் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வானி குமார் உபாத்யாயா. மேலும் இதுகுறித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை நாடுமுழுவதும் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘எம்.பி, எல்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். அந்த வழக்குகளை ஒரு ஆண்டுக்குள் முடித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு இருந்தது.

election-generic
Credit: Moneycontrol

சிறப்பு நீதிமன்றங்கள்

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கீழமை நீதிமன்றங்களில் முன்னாள் மற்றும் இந்நாள் எம்பி, எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் இருந்த 1,581 வழக்குகள் இந்த சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டன. மேலும், நாடு முழுவதும் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு தினந்தோறும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே குற்றப்பின்னணி உடையவர்கள் தங்களது குற்றத்தை பொதுவெளியில் விளம்பரப்படுத்தியே ஆகவேண்டும் என்பதால் கட்சியின் வெற்றி தோல்வி அதன் வேட்பாளர்களின் “விளம்பரத்தைப்” பொறுத்தே அமையப்போகிறது. யார் யாரெல்லாம் இதனால் சறுக்குகிறார்கள்? யாரெல்லாம் சாதிக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.