ஆட்சியமைக்கப்போவது யார்? – மீண்டும் மோடியா அல்லது ராகுல் காந்தியா?

0
20
rahul

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோடு முடிவடைந்தது. இந்நிலையில் நாளை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளுக்கு (வேலூர் தவிர) 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் நாளை 45 மையங்களில் எண்ணப்படுகின்றன. தேர்தல் முடிவு விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எழுத்தாணியில் சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாநிலம் மற்றும் தொகுதி வாரியாக தேர்தல் முடிவுகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

modi rahul
Credit: Business Today

மோடி Vs ராகுல் 

தேர்தலுக்குப் பிந்தைய கணக்கெடுப்பு மோடிக்கு ஆதரவாக இருப்பது இந்தியர்களிடையே மேலும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, மத மோதல்கள் என மோடி அரசின் மீது நிறையவே விமர்சனங்கள் இருந்தன. ஆனாலும் பாஜக ஆட்சி அமைக்கவே வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் கண் சிமிட்டியிருக்கின்றன.

ஒருவேளை பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் கூட்டணி கட்சிகளின் துணையோடு ஆட்சியமைக்க போராடும். அங்குதான் வருகிறது சிக்கல். ஏனெனில் ஆட்சியமைக்க வேண்டுமானால் இந்தியாவின் பிரதான கட்சிகளின் அனுகிரகம் அக்கட்சிக்கு கிடைக்கவேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணி எந்த அளவிற்கு பலம் கொடுக்கும் என்பதை சொல்ல முடியாது. மற்ற மாநிலங்களில் சொல்லிக்கொளும் படியான பெரிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைக்கவும் இல்லை.

தேர்தலில் பாஜகவிற்கு குறைவான சீட் கிடைத்து, வெளியிலிருந்து ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுக்க விரும்பினால் அதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. மம்தா தவிர்த்து பீகாரின் நிதீஷ் குமார், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு, உத்திரபிரதேசத்தின் மாயாவதி, தெலுங்கானாவின் சந்திரசேகர ராவ் ஆகியோரை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயலும். இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால் சந்திர பாபு நாயுடு, நிதீஷ் குமார் ஆகியோர் பாஜக ஆட்சியமைக்கும்போது அதனுடன் இணக்கமாக இருந்து பின்னாளில் உறவை முறித்துக்கொண்டவர்கள். அதே சமயம் பாஜகவிடம் பிரதமர் நாற்காலியை கேட்கும் அளவிற்கு பெரும்பான்மை இடங்களை மேற்கண்ட கட்சிகள் பெறுமா என்பதும் சந்தேகம் தான்.

alliance-congress
Credit: News Nation

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 44 இடங்களை மட்டுமே பிடித்த காங்கிரஸ் இந்தமுறை ராகுல் காந்தியின் தலைமையில் மக்களவைத் தேர்தலை சந்தித்திருக்கிறது. நாடு முழுவதும் முக்கிய மாற்றங்கள், அதிரடி தேர்தல் அறிக்கை என காங்கிரஸ் தன பங்கிற்கு அயராத உழைப்பை கொட்டியிருக்கிறது. மோடி மீதான எதிர்ப்பு ராகுலுக்கு வெற்றியை அளிக்குமானால் அவர் பிரதமர் பதவியை தேர்ந்தெடுப்பார். அதே நேரம் காங்கிரசின் பலம் குறையும் பட்சத்தில் கூட்டணி மற்றும் கூட்டணி அல்லாத கட்சிகளின் ஆதரவை ராகுல் பெறவேண்டி இருக்கும்.

ஆட்சியைப் பிடிக்கப் போவது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியா அல்லது ராகுல் காந்தி தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியா என்பது நாளை மாலை தெரியவரும். கூட்டணி கணக்குகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மக்களின் கணக்கு எப்படி இருக்கிறதோ அதன்படிதான் அரசாங்கச்சக்கரம் நகர்ந்திருக்கிறது. இந்தமுறை மக்கள் யாருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள் என்பதை நாளை பார்ப்போம்.