பசுமைப் பட்டாசுகள் என்றால் என்ன ? – தீபாவளி நேரத்தில் புதிய சர்ச்சை

0
25

ஊரெங்கும் இப்போதே தீபாவளிக் களை கட்டத் தொடங்கியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் புதுத் துணி, பட்டாசுகள், போனஸ் என்று தான் மக்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். நீதிமன்றம் வேறு தன் பங்கிற்கு பட்டாசு வெடிப்பதற்கு சில விதிமுறைகளை விதித்துள்ளது. இந்நிலையில் தான் புதிதாக பசுமைப் பட்டாசு என்றொரு பேச்சு அடிபட்டு வருகிறது.

பசுமை பட்டாசு

குறைந்த புகை மற்றும் நச்சுதன்மை வெளிப்படுமாறு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு பசுமைப் பட்டாசுகள் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்குள் சல்ஃபர், பொட்டாசியம் மற்றும் பேரியம் ஆகிய வேதி மருந்துகளை பட்டாசில் வைத்தால் காற்று மாசுபடுவதைத் தவிர்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது.  இந்தக் காற்று மாசுவை குறைக்கத் தான் பசுமை பட்டாசுகளைப் (GREEN CRACKERS) பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அறிந்து தெளிக !
2017 – ஆம் ஆண்டு டெல்லியில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து பசுமைப்  பட்டாசுகளைத் தயாரிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருந்தார். பின்பு, 2018 – இல் பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பிறகு பசுமைப் பட்டாசை தயாரித்திருப்பதாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த வேதியியல் ஆய்வாளர் சாம்ராட் கோஷ் கூறியிருந்தார்.

காற்று மாசுபாடு குறையும்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, பசுமைப் பட்டாசுகள் குறித்த தேடல் அதிகரித்துள்ளது. சராசரி பட்டாசுகள் ஏற்படுத்தும் ஒலியின் டெசிபல் அளவை விட குறைவான ஒலியையே பசுமைப் பட்டாசுகள் உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், அலுமினியத்தை மூலப்பொருட்களாக வைத்து சல்பர், கார்பன், பொட்டாசியம் நைட் ரேட் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. ஆனால், தற்போது கூறப்படும் பசுமை பட்டாசில் அலுமினியத்திற்கு பதிலாக மெக்னீசியம் மூலப்பொருளாக சேர்க்கப்பட்டு உள்ளது. சல்பர் மற்றும் கார்பன் தேவையில்லை. இதனால் பட்டாசின் ஒலி அளவு 120-ல் இருந்து 111 டெசிபலாக குறையும். மேலும் காற்று மாசு 70 சதவீதமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுமைப் பட்டாசு தயாரிக்கவேயில்லை

சராசரிப் பட்டாசுகளின் விலையை விட பசுமைப் பட்டாசுகளின் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பசுமைப் பட்டாசுகள் என்றே ஒரு பொருளே இதுவரை தயாரிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை தமிழ்நாடு பட்டாசு தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுவது போல் பசுமை பட்டாசு என்று ஒன்று இல்லையென்றால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு படி பொதுமக்கள் எதை வெடிப்பார்கள் என்று தெரியவில்லை. பட்டாசுக்குப் பெயர் போன சிவகாசியில் இதுவரை தீபாவளிக்கு தேவையான அனைத்து பட்டாசு தயாரிப்பு வேலைகளும் முடிந்து விட்டன.

ஆனால், இதுவரை பசுமைப் பட்டாசுகள் எப்படி இருக்கும் என்றும் எந்தவொரு புகைப்படமும் வெளியாகவில்லை. ஆனால், சமூகவலைத்தளங்களில் ‘பசுமை பட்டாசுகள் பச்சையாக இருக்கும்’ என்று இரண்டு நாட்களாக மீம்ஸ்கள் பரவி வருகின்றன.

தீபாவளி நெருங்கும் நேரத்தில், இப்படி ஒரு தீர்ப்பு வெளியாகி இருப்பதால் பட்டாசு விற்பனையாளர்களும் சரி, பொதுமக்களும் சரி பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர். வடிவேலு பாணியில், பசுமைப் பட்டாசு என்று ஒன்று இருக்கா இல்லையா? விற்பார்களா மாட்டார்களா? தீபாவளிக்கு வெடி வெடிக்கலாமா கூடாதா? என்று பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர் மக்கள்.