டில்லியில் அபாய கட்டத்தை அடைந்த காற்று மாசு – கனரக வாகனங்களுக்குத் தடை

0
22
Credit : NDTV

தலைநகர் டில்லியில் காற்று மாசு அபாயகரமான அளவில் உள்ளதால், 3 நாட்களுக்கு கனரக வாகனங்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் டில்லிக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே டில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசு காரணமாக டில்லி, உத்திர பிரதேசம் போன்ற மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 6 – ஆம் தேதி மற்றும் 7 – ஆம் தேதி தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு டில்லியில் காற்று மாசு மோசமாக அதிகரித்து உள்ளது. டில்லியில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று உச்சநீதி மன்றம் உத்தர விட்டும், அதை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டி உள்ளது.

காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ள நிலையில், பனிமூட்டமும் காணப்படுவதால், பொதுமக்கள் மூச்சுவிடுவதற்குக் கூட கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பனி கலந்த மாசு சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால், பகல் நேரங்களிலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு 11 மணி முதல் சரக்கு லாரிகள், டேங்கர் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் நகரத்திற்குள் செல்லாமல் தடுத்து நிறுத்தப்பட்டு வேறு பகுதிகளுக்குத் திருப்பி விடப்படுகின்றன. மேலும், கனரக வாகனங்களுக்கு 3 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள், உணவுப் பொருட்கள், எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள், பால், பழங்களை ஏற்றிவரும் வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இந்த வாகனங்களை காவல்துறையினர் சோதனை செய்து அனுப்புகின்றனர்.

Credit : APN

டில்லியின் எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.  ஏற்கனவே டில்லியில் காற்று மாசு அபாய நிலையை அடைந்ததால் தான் அங்கு கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது உச்சநீதி மன்றத் தீர்ப்பை மீறி பட்டாசுகள் கொளுத்தப்பட்டதால், காற்று மாசு அதிகரித்து அங்கு வசிப்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

மனிதர்கள் சுவாசிப்பதற்கு தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதை, ‘ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்’ எனப்படும், காற்று தர சுட்டெண் அளவீடு மூலம், நிர்ணயிப்பது வழக்கம்.  இது, 50 – க்குள் இருந்தால், நல்ல காற்று. 51 – 100 என்ற அளவில் இருந்தால் திருப்தி. 101 – 200 மிதமானது. 201 – 300 மோசமானது. 301 – 400 மிக மோசமானது. 401 – 500 மிக மிக மோசமானது  எனக் கூறப்படுகிறது.

ஆனால், டில்லியில் நேற்று காலை, 6:௦௦ மணி நிலவரப்படி, காற்று மாசு அளவுக் குறியீடு, 574 ஆக இருந்தது. டில்லியில் சில பகுதிகளில், காற்றின் மாசு அளவு 8௦௦க்கு மேல் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.