ஒரு நாளைக்கு 5 குழந்தைகள் – ஏமன் நாட்டில் என்னதான் பிரச்சனை??

0
15

பிரஞ்சுப் புரட்சியையும், ரஷியப் புரட்சியையுமே இவ்வுலகின் ஆகப்பெரும் போராட்டங்களாக காட்டிவந்த, எழுதிவந்த வரலாற்று ஆசிரியர்கள் 2010 – ஆம் ஆண்டிற்குப் பிந்தைய மத்திய கிழக்கு நாடுகளின் நிலைமையை என்ன சொல்வதென்று தெரியாமல் திகைக்கிறார்கள். காலங்காலமாக மக்களை அழுத்திக் கொண்டிருந்த மன்னர்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள். இன்றைய சிரியா, ஏமன் நாட்டில் நடக்கும் எல்லா மனித உரிமை மீறல்களுக்கும் காரணம் அந்தப் புள்ளியிலிருந்துதான் துவங்குகிறது. ஏமனின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் ஆட்சிக்கு எதிராக கிளம்பிய மக்கள் புரட்சியினைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். சுதந்திரக் காற்றை மக்கள் ஆனந்தக் கண்ணீரோடு சுவாசிக்கத் தொடங்கினர். அது வெகுநாள் நீடிக்கவில்லை. அதற்குள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருந்தார் அப்த் ரபாக் மன்சூர் ஹாதி. ஏமனின் இருண்டகாலத்தின் துவக்கநாள் அதுதான்.

Hadi
Credit: Fanack

புரட்சிப் படை

சலே தனது பதவியை மன்சூர் ஹாதியிடம் அளித்ததும் ஈரான் தனது அரசியல் காய் நகர்த்தலைத் துவங்கியது. ஈரான் துணையுடன் மாபெரும் புரட்சிப்படை தயாரானது. ஏமனின் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஒரே நோக்கத்தில் உருவாக்கப்பட்ட படை. வேற்று நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றங்களுக்கு ஏன் ஈரான் பெரும்பணம் செலவழித்து தனது புரட்சிப்படையை அங்கு அனுப்பவேண்டும்? காரணம் ஒரு மன நோய். மதம் என்னும் நோய்.இவ்வுலகில் அழிக்கவே முடியாத தீராப் பெரும் நோய். சலேவும், மன்சூர் ஹாதியும் சன்னி பிரிவைச் சேர்ந்த முஸ்லீம் ஆட்சியாளர்கள். சவூதி பெரும்பான்மை சன்னி பிரிவு மக்களைக் கொண்டுள்ள நாடு என்பது நாம் அறிந்ததே. இதனால் அதிபர் ஹாதியை சவூதி அரசு ஆதரிக்கிறது. ஷியா பிரிவு தலைவரைக் கொண்ட நாடாக ஏமனை மாற்றுவதற்கு ஈரான் முயற்சி எடுத்து வருகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் ஈரானின் பக்கபலத்தில் இயங்கும் புரட்சிப்படைக்கும் சவுதியின் ஆதரவில் இயங்கும் அதிபர் ஹாதியின் அரசுப்படைகளுக்குமான மோதல்கள்தான் ஏமனின் உள்நாட்டுப் போருக்குக் காரணம்.

yemen war
Credit: Al Jazeera

மரண ஓலம்

2015 – ஆம் ஆண்டு ஹாதி பதவியேற்றத்திலிருந்து இரு தரப்புக்கும் இடையே சண்டைகள் ஆரம்பித்தன. இருதரப்பும் பல வீரர்களை இழந்திருக்கின்றன. ஆனால் கணிசமான சேதத்தினை சந்தித்தது, சந்திப்பது அந்நாட்டு மக்களே. 11,000 மக்கள் இதுவரை போரினால் உயிரிழந்திருக்கிறார்கள். தொழிற்சாலைக் கட்டிடங்கள், கல்வி நிலையங்கள் என ராணுவத் துப்பாக்கிகளின் கூர் மூக்கின் குறிக்கு ஏதும் தப்பவில்லை. விளைவு? அந்நாடு இதுவரை சந்திக்காத பஞ்சத்தை தற்போது எதிர்நோக்கியுள்ளது. செங்கடலை ஒட்டியுள்ள ஏமனின் துறைமுகப் பகுதியில் போர் உச்சத்தினை எட்டியுள்ளதால் அந்நாட்டிற்கு வரும் நிவாரணப் பொருட்கள் சரிவர மக்களிடம் சென்றடைவதில்லை. ஏராளமான மருத்துவமனைகள் மருந்துகள் இல்லாமல் நோயாளிகளை அனுமதிக்க மறுக்கின்றன. இந்நிலையில் சுகாதாரப் பிரச்சனைகள் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இன்று வரை சுமார் ஒரு லட்சம் மக்கள் காலரா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுவரை காலராவால் 1200 பேர் மரணமடைந்துள்ளனர். ஒருநாளைக்கு சராசரியாக 5 குழந்தைகள் போரினால் இறப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

hungry
Credit: Common Dreams

வரலாறு காணாத பஞ்சம்

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிக்கல்கள் உருவாகியுள்ளன. அந்நாட்டில் நிலவும் கடினமான பொருளாதாரப் பிரச்சனைகளால் வறுமை, பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநரை அதிரடியாக மாற்றினார் அதிபர் ஹாதி. ஆனால் நிலைமை இன்னும் மோசமடைந்துவருகிறது. சுமார் 50 லட்சம் பேர் உணவில்லாமல் தவிப்பதாக தனியார் தொண்டு நிறுவன அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. நோய், விலைவாசிப் பிரச்சனை, பஞ்சம் என ஏமனின் மக்கள் தங்கள் வாழ்க்கையின் மோசமான நாட்களில் வாழ்ந்து வருகின்றனர். இத்தனை பேரின் சடங்களுக்கு மேல் நடந்து சென்று யாருக்கான ஆட்சியை நடத்த சவுதியும், ஈரானும் துடிக்கின்றன? மதம் மனிதத்தை அழிக்கும் என்பது வரலாற்றில் மற்றும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டு வருகிறது. `