இலங்கையில் திடீர் திருப்பம் – மீண்டும் பிரதமராகும் ராஜபக்ஷ

0
15

ராஜபக்ஷ என்ற பெயரை நம்மில் யாராலும் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. இலங்கை ஜனாதிபதியாக அவர் பதவி வகித்த போது தமிழக ஊடகங்களில் அடிக்கடி ஒலித்த பெயர் அது. அடுத்து வந்த தேர்தலில் சிறிசேன புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது, ராஜபக்ஷவின் தோல்விக்கு தமிழ்நாட்டில் மனம் மகிழ்ந்தவர்கள் ஏராளம்.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுக் கொண்டதாக இலங்கை ஜனாதிபதி செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம்

இலங்கையில் ஜனாதிபதியாக இலங்கை சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பதவி வகிக்கின்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகப் பதவி வகித்தார்.

அந்தக் கட்சியின் போட்டிக்கட்சியான மைத்திரிபால சிறிசேனவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருந்தது.

ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் நீடித்து வந்தன.

இந்த நிலையில் மைத்ரிபால சிறிசேன அவர்களின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, கூட்டணி அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது. அத்துடன்  மஹிந்த ராஜபகபஷ நேற்று மாலை ஜனாதிபதியின் முன்பாக புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவர் பதவிப் பிரமாணம் செய்த காட்சிகளைத் தொலைகாட்சிகள் ஒளிபரப்பி வருகின்றன.

திடீர் அரசியல் திருப்பம்

அடுத்த மாதம் 5 – ஆம் தேதி நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டம் நடக்கவுள்ளது. அன்றைய தினம் ராஜபகபஷ தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும். தற்போது மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிகழ்வானது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை இலங்கையில் நடத்தி வந்தன. இரண்டு கட்சிகளுக்கும் இடையே காணப்பட்ட முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே இந்த அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளதாகத் தென் இலங்கை அரசியல் ஆய்வாளர் சிவராஜா தெரிவித்துள்ளார்.

இரண்டு பிரதமர்கள்

ரணில் விக்கிரமசிங்கே தான் இலங்கையின் பிரதமர் என கேபினட் செய்தி தொடர்பாளர் ரஜிதா செனரத்னெ தெரிவித்துள்ளார். ஆனால், கேபினட் கலைக்கப்பட்டு விட்டதாகவும், மஹிந்த ராஜபக்ஷ தான் பிரதமர் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ரணில், ‘தானே பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும், மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுக் கொண்டது அரசியலமைப்புக்கு விரோதமானது’ என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 19-வது அரசியல் அமைப்பின் திருத்தத்தின் 49-வது பிரிவின்படி தான் பிரதமராக தொடர்ந்து நீடிப்பதாக ரணில் விக்ரமசிங்கே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மஹிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது வரை, இரு தரப்பினரும் தாங்கள் தான் பிரதமர் என்று கூறி வருகின்றனர்.