415 கோடி ஒதுக்கீடு : ஆற்றின் கரைகளில் மரங்கள் நடுவதற்குப் புதிய திட்டம்

0
23
odisha river tree

வெள்ளம் ஏற்படும்போது வரும் விளைவுகளைத் தடுக்க ஒடிசா அரசு புதிய திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில் பாயும் மகாநதி, ப்ரஹ்மானி, பாய்தாரிணி மற்றும் ருசியகுலா ஆகிய நதிகளின் இருகரைகளிலும் மரங்கள் நடும் திட்டத்திற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கென 415 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஒரு பகுதியாக கரைகளில் பூங்காக்களும் அமைக்கப்பட இருக்கின்றன.

வெள்ள மாநிலம்

கடற்கரையை ஒட்டிய மாநிலம் என்பதால் பருவ மழைக்காலங்களில் ஒடிசா பெரும் அழிவுகளைச் சந்திக்கிறது. வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயல்கள் என எது வந்தாலும் முதலில் சிக்குவது ஒடிஸா தான். மழைக்காலங்களில் அங்குள்ள அனைத்து நதிகளும் பெருக்கெடுத்து ஓடும். இதனால் நதிகளின் கரைகளில் வசிக்கும் மக்கள் வருடாவருடம் பெரும் சிக்கல்களை சந்திக்கின்றனர்.

Odissa Cyclone
Credit: The National

1999 – ஆம் வருடம் ஒடிசாவில் வீசிய பிரதீப் புயலே இந்திய வரலாற்றில் மிகக் கொடுமையான பேரழிவாகச் சொல்லப்படுகிறது. 260 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் கடற்கரை ஓர நகரங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயலின் காரணமாக 8000 பேர் இறந்தனர். புயல் பெருமழையும் கொண்டுவந்து சேர்த்ததால் அம்மாநிலமே மிகப்பெரும் துயர நிலைக்குச் சென்றது. கனமழையினால் ஆறுகளில் வெள்ளம் காட்டாறு போல் ஓடியது. கரைகளில் மரங்களை வளர்ப்பது மண்ணரிப்பை குறைக்கும். இதனால் கரைகள் உறுதியாவதுடன் நீண்ட காலத்திற்கு ஆற்றின் அருகே வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பும் அளிக்க முடியும்.

ஓராண்டுக்குள்

ப்ரஹ்மானி, பாய்தாரிணி மற்றும் ருசியகுலா நதிக் கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வரையிலும் மரக்கன்றுகள் நடப்பட இருக்கின்றன. இதற்கான பணிகள் 2019 – 2020 நிதியாண்டிலேயே நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள 415 கோடியில் மரக்கன்றுகள் நடுவதற்கும் பராமரிப்பதற்கும் 415 கோடியும் இதர செலவுகளுக்காக 33 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Odissa Cyclone
Credit Odisha Times

மாநிலம் முழுவதும் நடைபெற இருக்கும் இந்தத் திட்டத்தினைக் கண்காணிக்க தலைமைச் செயலாளர் தலைமயிலான 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இயற்கையை பாதுகாக்கவும், நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் என்கிறது அம்மாநில அரசு.

இயற்கையை அனுபவிக்கும் நாம் அதனை பாதுகாக்கவும் உரிய வழிகளைச் செய்ய வேண்டும். இயற்கை சார்ந்த வாழ்க்கையே வளமானது. அதனை நோக்கிச் செல்வதற்கான முதல் அடி இந்தத் திட்டம். ஒடிசா மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் இம்மாதிரியான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே எதிர்கால இந்தியாவை வளமான நாடாக மாற்றும் ஒரே யுக்தியுமாகும்.