ஆதார் சவால் – நடந்தது என்ன ?

0
17

ஆதார் எண் மீதான நம்பகத் தன்மையை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக, ஜூலை 28 – ம் தேதி, இந்தியாவின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) தற்போதைய தலைவரும், இந்தியாவின் தனி அடையாள ஆணையத்தின் (UIDAI) முன்னாள் தலைவருமான ராம் சேவாக் சர்மா, ட்விட்டரில் தனது ஆதார் எண்ணை பதிவிட்டார். பின் பொதுமக்களிடம் என்  ஆதார் எண்ணின் மூலம் எனக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்க முடியும் என்று நிரூபிக்க முடியுமா? என்று சவால் விடுத்தார்.

இந்த சவாலானது, ஆதாருக்கும், தனியுரிமை பாதுகாப்பிற்குமான விவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆயுதமாகக் கையிலெடுக்கப் பட்டது. ஒரு முக்கியமான அரசு உயரதிகாரி, ஆதார் திட்டத்தின் முழுமையான ஆதரவாளரான அவர், தன் ஆதார் விவரங்களை வெளியிட்டு இதன் மூலம் முடிந்தால் எனக்கு ஒரு தீங்கு விளைவியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால், அவர் எதிர்பாரா விதமாக பல ட்விட்டர் பயனர்கள் சர்மாவின் வீட்டு முகவரி, அலைபேசி எண், பிறந்த தேதி மற்றும் பான் அட்டை எண்ணைக் கூடக் கண்டறிந்து கூறத் தொடங்கினர். இருப்பினும், சர்மா அந்த தகவல்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி கண்டறியப்பட்டவை அல்ல என்றே கூறினார். அவற்றில் பெரும்பாலான தகவல்களின் துல்லியத் தன்மையை சரிபார்க்க முடியவில்லை என்று கூறப்பட்டாலும்  உண்மையில் சேதம் நிகழ்த்தப் பட்டது.

ஃப்ரெஞ்ச் பாதுகாப்பு ஆய்வாளர், இலியட் ஆல்டர்சன் (Elliot Alderson), ராம் சேவாக் சர்மாவின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்கும் தொலைபேசி எண், பிறந்த நாள், மின்னஞ்சல் முகவரி – ஆகியவற்றை வெளியிட்டார்.

இலியட் ஆல்டர்சன் ஆதாரில் உள்ள பாதுகாப்பு கோளாறுகளை தொடக்கத்திலிருந்தே சுட்டிகாட்டி வருபவர்.

இலியட் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில், சர்மா ஒரு பெண்ணுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, உங்கள் அருகில் இருப்பவர் உங்கள் மகளாகவோ அல்லது மனைவியாகவோ இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

எனினும், சர்மா பிடிவாதமாக இருந்தார். எந்தவொரு “தீங்கும்” இன்னும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார், அவர் சவாலை வென்றதாக நம்பிக் கொண்டிருந்தார்.

ஜூலை 29-ம் தேதி, UIDAI ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ஆர்.எஸ்.சர்மாவின் தனிப்பட்ட தகவல்கள் அவரது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி திருடப்பட்டது என்ற செய்திக்கு மறுப்பு தெரிவித்ததோடு, இந்த விவரங்கள் இணையத்தில் ஏற்கனவே இருந்தவை தான் என்றும் கூறப்பட்டு இருந்தது.

ஜூலை 30 – ம் தேதி, இந்திய அரசாங்கம் ஆதாரின் தரவுத்தளத்தில் இருந்து சர்மாவின் தனிப்பட்ட விவரங்கள் எடுக்கப்படவில்லை  என்று கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதனால் ஆதார் திட்டத்தின் பாதுகாப்பிற்கு பங்கம் எதுவும் இல்லை என்று அறிவித்தது.

ஜூலை 31 ம் தேதி, ஷர்மா இந்த விவரத்தை மறுபரிசீலனை செய்ய, பத்திரிகையில் ஒரு கருத்துக் கட்டுரையை எழுதினார்: “நான் ஏன் என் ஆதார் எண்ணைக் கொடுத்தேன்”. அந்தக் கட்டுரையில், ஆதார் பாதுகாப்பு சவாலில் தனக்கு எந்த இழப்பும் இல்லை என்றும், தாம் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆதார் சர்வரில் இருந்து, தகவலை திருட நூற்றுக்கணக்கான முயற்சிகள் நடைபெற்றதாகவும், ஆனால் அதில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சவாலை எடுத்துக் கொண்டவர்கள் கூகிள் தேடல்களால் தனது தனிப்பட்ட விவரங்களை கண்டுபிடித்து, தனது மின்னஞ்சல் கணக்கை ஹேக் செய்து பயன்படுத்த முயன்றனர், ஏனெனில் OTP (One  Time Password) அங்கீகாரம் தேவைப்பட்டதால் அவர்கள் தோல்வியடைந்தனர் என்று சர்மா தெரிவித்தார்.

அடுத்த அடியாக , ஆதார் மூலம் பணம் செலுத்தும் வசதியைப் பயன்படுத்தி சர்மாவின் வங்கிக் கணக்கில் ஒரு ரூபாயை ஹேக்கர்கள் செலுத்தி அந்த ஒப்புகைச் சீட்டையும் ட்விட்டரில் வெளியிட்டனர். ஒருவருடைய ஒப்புதல் இல்லாமலேயே அவர் கணக்கில் பெருந்தொகையைப் போட்டுவிட்டு நிதிமோசடிக் குற்றச்சாட்டைச் சுமத்த முடியும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அதற்கும் சர்மா இதனால் நான் எதுவும் பாதிக்கப்படவில்லை எனக்கு பணம் தான் சேர்ந்திருக்கிறது என்று சமாளித்தார்.

இருப்பினும், அதே நாளில் UIDAI அமைப்பு பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்களை பொதுவெளியில் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் பாதிப்பு உங்களுக்குத் தான் என்று அறிவுறுத்தும்படி சில டிவீட்களை செய்தது.

ஆதார் திட்டம் பாதுகாப்பாக உள்ளதா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. யார் மனதிலும் மாற்றங்கள் நிகழப் போவதில்லை. எவ்வாறாயினும், திட்டத்தின் தலைமையில் உள்ளவர்கள் சமூக ஊடகங்களில் குழப்பத்தை விளைவிக்கும் தகவல்களைப் பதியும் முன்னர் முதலில் சிந்திக்க வேண்டும்.