ரபேல் விமான ஊழல் – நடந்தது என்ன ?

0
17

இந்தியாவைப் பாதுகாப்புத் துறையில் வலுப்படுத்தும் நோக்கோடு, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த சமயத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி கடந்த 2012-ல் பிரான்சிடம் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது. அந்த முடிவில், பணம், ஒப்பந்தச் சிக்கல் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் சில மாற்றங்களை செய்து 126-ல் இருந்து 36 ஆக குறைத்து வாங்க பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதில் ஊழல் என்று காங்கிரசும், காங்கிரசை விட மிகச்சிறந்த முறையில் ஒப்பந்தம் செய்துள்ளதாக பாஜகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

ரபேல் விமான ஒப்பந்த வரலாறு

  • 2012 – பிரான்சிடம் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவெடுத்து ஒப்பந்தம் போட்டது. அமெரிக்கா , ரஷ்யா போன்ற நாடுகளின் ஒப்பந்தங்களை நிராகரித்து, பிரான்ஸ் தேர்வு செய்யப்பட்டது.
  • மொத்த போர் விமானங்களில் 18 போர் விமானங்கள் பறக்கத் தயாராக இருக்கும் நிலையில் கொடுக்கப்படும் என்றும் மீதி 108 விமானங்கள் இந்தியாவில் வைத்துத் தயார் செய்து கொடுக்கப்படும் என ஒப்புக் கொள்ளப்பட்டது
  • 2014 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. இடைப்பட்ட காலத்தில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் ஒப்பந்தம் நிலுவையில் இருந்தது.
  • 2015 ஏப்ரல் – பாரிசில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்வில், பிரான்சிடம் இருந்து 126 ரபேல் போர் விமானங்களுக்குப் பதிலாக பறக்கத் தயாராக இருக்கும் வகையிலான 36 ரபேல் விமானங்கள்  உடனடியாக வாங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

  • இந்தியாவில் வைத்து தயார் செய்வதற்குப் பதிலாக , உடனடியாக வாங்க பிரதமர் முடிவு செய்தார். அதே நேரத்தில் ரபேல் விமான உதிரி பாகங்கள் இந்தியாவில் தயார் செய்யவும், பாதுகாப்பு ஆராய்ச்சி கருத்தரங்குகள் போன்றவை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது
  • பிரதமரின் அறிவிப்பு வெளியானதும் ‘மேக் இன் இந்தியா’ என்ன ஆனது என்றும், இத்தனை கோடி ஒப்பந்தத்தில் ஏன் வெளிப்படைத்தன்மை இல்லாமல் அரசு நடந்து கொண்டது என்றும் கூறி இதனை ஊழல் என காங்கிரஸ் சாடியது.
  • 2016-ல் ரபேல் விமானங்களுக்கான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. அதன் படி 36 விமானங்கள் வாங்கப்படும். பிரான்சின் டசால்ட்ஸ் ஏவியேசன் நிறுவனம் மற்றும் அதன் ஒத்துழைப்பு நிறுவனங்களும் இதனை மேற்கொள்ளும். மேலும், சில தனியார் நிறுவனங்கள், ஹிஸ்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனம், டி.ஆர்.டி.ஓ (DRDO) போன்றவையும் இதில் இணைந்து செயல்படும் என்றும் அவற்றுக்கான வரையறையும் நிர்ணயிக்கப்பட்டது.
  • பிரதமரின் அறிவிப்பு வெளியாகி ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் கழித்து, 2016 செப்டம்பரில் இரு நாடுகள் இடையேயான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, 36 விமானங்களுக்கு ரூ.58 ஆயிரம் கோடி தருவதென ஒப்புக் கொள்ளப்பட்டது. 15 சதவீத பணம் முன்பணமாக செலுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
  • டசால்ட்ஸ் நிறுவனத்தால் தேர்வு செய்யப்படும் இந்திய பங்குதாரர் நிறுவனம் மூலம் (நிறுவனம் தேர்வு செய்யப்படும்) ரபேல் விமானங்கள், விமான உதிரி பாகங்கள், ஆயுதங்கள் போன்றவை இந்தியாவில் தயார் செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டது.

 

Credit : WeForNews
  • 2016 நவம்பரில் மீண்டும் ரபேல் விவகாரத்தில் அரசியல் சண்டை மூண்டது. ரூ.58 ஆயிரம் கோடி என்பது அதிக பணம் என்றும் காங்கிரஸ் இறுதி செய்ததை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் அக்கட்சி கூறியது. மேலும், அனில் அம்பானியை டசால்ட்ஸ் நிறுவன இந்திய பங்குதாரராக தேர்வு செய்ததில் மத்திய அரசின் தலையீடு இருந்தது என்றும் கூறப்பட்டது.
  • காங்கிரசின் குற்றச்சாட்டுகள் பொய் என்றும், காங்கிரஸ் அரசு இறுதி செய்ததை விட குறைந்த பணத்தில் விமானங்கள் வாங்கப்படுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அனில் அம்பானி தர்ப்பில் இருந்து, தங்களைத் தேர்வு செய்ததில் அரசின் தலையீடு இல்லை என்றும் உரிய முறையில் பங்காளராகச் சேர்ந்தே செயல்படுகிறோம் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது
  • இந்நிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே (Nicolas Hollande) அளித்த பேட்டியில் அனில் அம்பானியின் நிறுவனத்தை மட்டுமே டசால்ட்ஸின் இந்திய நிறுவனமாகத் தேர்வு செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், வேறு எந்த நிறுவனத்தையும் தேர்வு செய்ய வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்திய அரசு அதனை மறுத்துள்ளது.

இதனால் தான் இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.