துணிக் கடைகளில் தொழிலாளர்கள் அமர்ந்து கொண்டே வேலை செய்யலாம் – கேரள அரசின் அடுத்த அதிரடி

0
11

‘அங்காடித் தெரு’ என்று ஒரு திரைப்படம் சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. துணிக்கடைகளில் குறைந்த சம்பளத்திற்கு அல்லல் படும் தொழிலாளர்களைப் பற்றிய திரைப்படம் அது. வெறும் கதை அல்ல. கடை வீதிகளில் நீங்கள் செல்லும் ஒவ்வொரு கடையிலும், உங்களுக்கு விற்பனை செய்யும் ஒவ்வொரு பிரதிநிதியும் அனுபவித்துக் கொண்டிருக்கும் சிரமங்கள் அவை.

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தான் வேலை என்ற சட்டம் எல்லாம் அங்கே பேச முடியாது. 10 முதல் 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். அதுவும் நின்று கொண்டே. வேதனையை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய வேண்டும். பெண் தொழிலாளர்களுக்குச் சரியான கழிவறை வசதி கூட இருக்காது.

இந்த நிலையை மாற்றத் தான் கேரள அரசு இனி கடைகளில் அமர்ந்து கொண்டே தான் வேலை செய்ய வேண்டும் என்று அவசரச் சட்டம் இயற்றியுள்ளது. இது நாட்டிலேயே முன்மாதிரியான சட்டம் என பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த சட்டம் அக்டோபர் 26 -ஆம் தேதி  முதல் அமலுக்கு வந்துள்ளது.

அவசரச் சட்டம்

1960 – ஆம் வருடத்தின் ‘கேரளக் கடைகளும் வணிக நிறுவனங்களும்’ சட்டத்தில் தொழிலாளிகளுக்குச்  சாதகமான திருத்தங்கள் செய்வது தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் அவசரச் சட்ட ஒப்புதல் அளித்துள்ளார்.

புதிய சட்ட மசோதாவின்படி, வேலை நேரங்களில் அமர்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் துணி, நகைக் கடைகள் மற்றும் உணவகங்களில் வேலை பார்ப்பவர்கள் அமர்வதற்கு அனுமதி கிடையாது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கேட்கவே வேண்டாம் கழிவறைக்குச் செல்லக் கூட அனுமதி கிடைப்பதில்லை. வாடிக்கையாளர் இல்லையென்றாலும், வேலை முடியும் வரை ஊழியர்கள் நின்று கொண்டு தான் இருக்க வேண்டும். இதனால் பல ஊழியர்கள் உடல் நல பாதிப்புக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்.

இதனால்  பணி நேரத்தில்அமர்ந்து கொள்ளவும், ஓய்வெடுக்கவும் வாய்ப்பு வழங்க வேண்டும் என கேரளாவில் பல்வேறு மையங்களில் பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, 1960 – ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கேரளக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சட்டத்தில் தொழிலாளிகளுக்குச் சாதகமான திருத்தங்கள் செய்வது தொடர்பான மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் அவசர சட்ட ஒப்புதல் அளித்துள்ளார். புதிய சட்ட மசோதாவின்படி, வேலை நேரங்களில் அமர்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறினால் அபராதம்

இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு, மேலே கூறப்பட்ட சட்டத்தின் கீழ் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். 1960 – ஆம் ஆண்டு சட்டத்தின் 29 – வது பிரிவின் படி முதல் முறை விதி மீறும் போது, 5,000 ரூபாய் முதல் அபராதமும், இரண்டாவது முறை விதி மீறும் போது பத்தாயிரம் ரூபாயும், தொடர்ந்து விதிமுறையை மீறும் போது இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்ட மசோதா, பெண்களுக்கு இரவு நேர வேலை (Night Shift) அளிக்கவும் வழி வகை செய்துள்ளது. ஆனால், 5 பேர் கொண்ட குழுவில் 2 பேராவது பெண்கள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இரவுப் பயண வசதியையும் நிறுவனமே செய்து தர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதே போல் ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்தில் ஒரு நாளாவது முழுமையாக விடுப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான துணிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளன. இதில் வேலை செய்யும் தொழிலாளர்கள், பெண் ஊழியர்கள் நின்று கொண்டு தான் வேலை செய்கின்றனர். கேரளா போல தமிழ்நாட்டிலும் சட்டம் இயற்றினால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள்.