செய்தி வாசிப்பாளரான ரோபோட் – இப்படியே போனால்?

0
4
china robot

சீன நாட்டைச் சேர்ந்த செய்தி ஊடகம் ஒன்று கடந்த வாரம் உலகின் முதல் எந்திர  செய்தித் தொகுப்பாளரை அறிமுகம் செய்துள்ளது. அதென்ன எந்திர செய்தித் தொகுப்பாளர் என யோசிக்கிறீர்களா? ‘எந்திரன்’ படத்தின் சிட்டி ரோபோட் செய்தி வாசித்தால் எப்படி இருக்குமோ அப்படித் தான் இதுவும்.

இந்த எந்திர செய்தித் தொகுப்பாளர், ஆங்கிலம் மற்றும் சீன மொழி  என்று இரண்டு மொழியிலும் செய்திகளை மிகத் துல்லியமாக வாசித்துத் தொகுத்து வழங்குகிறது.

சின்ஹுவா (Xinhua) என்னும் ஊடக நிறுவனம் மற்றும் மென்பொருள் நிறுவனமான சோகோவ் (Sogou) நிறுவனம் ஆகியவை  இணைந்து, வ்யூஜென் – இல் (Wuzhen) நடைபெற்ற உலக இணைய மாநாடு விழாவில் இந்தப் புதிய எந்திர  செய்தித் தொகுப்பாளரை அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளனர்.

china robotதிறன் மிகு எந்திரன்

இந்த இயந்திர மனிதன் பார்ப்பதற்கு நிஜ மனிதன் போன்ற தோற்றத்துடன் இருக்கிறது. மேலும், அப்படியே மனிதர்களைப் போன்ற பாவனையிலேயே செய்திகளை வாசித்துத் தொகுத்து வழங்குகிறது. மேலும், இது இடைவேளை இன்றி 24 மணி நேரமும் ஓய்வு இல்லாமல் செய்திகளைத் தொகுத்து வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சின்ஹுவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சின்ஹுவா நிறுவனத்தின் செய்தி தொகுப்பாளர் ஒருவரின், உருவம் மற்றும் அவரின் குரல் வளம் தான் இந்த எந்திர செய்தித் தொகுப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிநவீன ரோபோட் செய்தித் தொகுப்பாளர் தானாகவே ஊடகத்திலிருந்து செய்திகளை எடுத்து வாசிக்கும் வல்லமை கொண்டுள்ளது.

டெலி பிராம்ட்டர் (Teleprompter) எனும் சாதனத்தைப் பார்த்து, செய்திகளைத் தொகுத்து வழங்கும் ரோபோட் அதுமட்டுமின்றி, திரையில் வரும் எழுத்துக்களை மனிதர்களைப் போலவே பார்த்து, அவற்றைப் பிழை இல்லாமல் படித்து செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது.

அறிந்து தெளிக !!
டெலி பிராம்ட்டர் என்பது, தொகுப்பாளர் செய்திகளைப் பிழை இல்லாமல் தொகுத்து வழங்குவதற்காக திரையில் அச்செய்திக்கான வார்த்தைகளை ஓடவிடும் முறை ஆகும்.

ஆச்சரியமா ? அச்சமா ?

இந்தச் செய்தி ஒருபுறம் ஆச்சரியமாக இருந்தாலும், சமீப காலமாகவே மனிதனின் வேலை வாய்ப்புகளை எந்திரங்கள் கைப்பற்றி விடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்தபடியே தான் இருக்கின்றனர். ஒரு வேலையே மனிதனை விடவும் நேர்த்தியாக ஒரு இயந்திரத்தால் செய்ய முடியும் என்றால், போட்டியில் இயந்திரம் தான் வெல்லும். ஆனால், அதற்குப் பின் மனிதன் என்ன வேலை செய்வான் என்ற கேள்வி எழுகிறது. அபாயகரமான தொழில்நுட்ப வளர்ச்சியின் சிறு ஆரம்பமாகத் தான் இதைப் பார்க்க வேண்டும்.

இப்போது மேற்கண்ட ஊடக நிறுவனத்தையே எடுத்துக் கொண்டால், 8 மணி நேரம் பணி புரியும் மனிதனை விட, 24 மணி நேரமும் ஓய்வின்றி வேலை பார்க்கும் ரோபோவைத் தான் அந்த நிறுவனம் விரும்பும். ஒரு நாள் அங்கு பணி புரிபவர்கள் பெரும்பாலானோருக்குப் பதிலாக அவர்கள் இயந்திரங்களைப் பணியமர்த்தக் கூடும். இப்படி ஒவ்வொரு நிறுவனமும் நினைத்தால்? உலகம் ரோபோக்கள் மயமாகும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே.