மனிதர்கள் வாழத் தகுந்த புதிய கோள் கண்டுபிடிப்பு

0
6

பூமியைத் தாண்டி மக்கள் வாழ்வதற்கு ஏற்ற கோள்கள் இருக்கின்றனவா என  ஆராய்ச்சியாளர்கள் பல காலமாகத் தேடி வருவது நாம் அறிந்த ஒன்று தான். செவ்வாயிலும், நிலவிலும் மனிதர்கள் வாழ்வதற்கான அம்சங்கள் இருக்கின்றதா எனும்  ஆராய்ச்சி மற்றும் அங்கு மனிதர்களை அனுப்பும் ஏற்பாடு முயற்சிகளில் பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், நாசாவின் கெப்ளர் டெலஸ்கோப்பை (Kepler Telescope) வைத்து எடுத்த தகவல்களைக்  கொண்டு கனடாவின் மாண்ட்ரியல் பல்கலைக்கழகத்தைச் (Université de Montréal) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுந்த புதிய வெளிக்கோள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

அறிந்து தெளிக!
வெளிக்கோள் என்பது சூரியக் குடும்பத்தைச் சேராமல், வேறு ஒரு குடும்பத்தில் இருக்கும் கோள் என்பதைக் குறிக்கும்.

வுல்ப் 503பி

இந்தப் புதிய கோளிற்கு “வுல்ப் 503பி (Wolf 503b)” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வெளிக்கோள் கன்னி நட்சத்திரக் கூட்டத்திற்கு இடையில், பூமியில் இருந்து 145 ஒளி ஆண்டுகள் தொலைவில் மற்ற வெளிக்கோள்களை விட பூமிக்கு அருகில் இருப்பதாக புதியதொரு தகவல் தெரிய வந்துள்ளது.

சூப்பர் எர்த்

இந்த வெளிக்கோள் பூமியை விட இரு மடங்கு பெரியது என்பதால் இதை “சூப்பர் எர்த் (Super Earth)” என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நம் கிரகத்திற்கும் அதன் முதன்மை நட்சத்திரமான சூரியனுக்கும் இருக்கும் தூரத்தை விட, மிக அருகில் வுல்ப் 503பி உள்ளது. முக்கியமாக இந்தக் கிரகம் சூரியனை விடத் தனது முதன்மை நட்சத்திரத்திற்கு 10 மடங்கு அருகில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் முதன்மை நட்சத்திரம் ஒரு ஆரஞ்சு ட்வார்ப் (Dwarf) என்பதால் சூரியனை விட அதன் ஒளிர்வுத் தன்மை சிறிது குறைவு. இந்த வெளிக்கோள் அதன் முதன்மை நட்சத்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால், அதில் விழும் வெளிச்சத்தைக் கொண்டு அந்தக் கோளை பற்றித் தெளிவாக ஆராய முடியும் என்று மாண்ட்ரியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிஜோர்ன் பென்னேக் (Bijorn Bennec) கூறியுள்ளார்.

 

முதன்மை நட்சத்திரம்

நாசா விஞ்ஞானிகள், அகச்சிவப்புத் தொலை நோக்கியைக் கொண்டு சூப்பர் எர்த் – இன் முதன்மை நட்சத்திரத்தைப் பற்றிய முழு விபரங்களையும் சேகரித்து விட்டனர். வுல்ப் 503பி பற்றி ஆராய்ந்து படிப்பதன் மூலம் அதற்கு அருகாமையில் உள்ள நமது மண்டலத்தைச் சேர்ந்த மற்ற வெளிக்கோள்களை பற்றியும் தெரிந்து கொள்ள முடியும் என்று பென்னேக்கின் மாணவரும் ஆராய்ச்சியாளருமான பீட்டர்சன் (Peterson) கூறியுள்ளார்.