இனி மேல் தண்ணீரைக் கடித்து சாப்பிடலாம்!

0
94
edible-water-balls-ooho-skipping-rocks-plastic
Credit: Skipping Rocks Lab

பொதுவாக உலகில் எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. பிளாஸ்டிக்கை தவிர்க்க எல்லா நாடுகளும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. காரணம் பிளாஸ்டிக்கில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையான அதன் மட்கும் காலம். பிளாஸ்டிக்கின் அளவு மற்றும் தன்மையை பொறுத்து அவை மட்க 50 முதல் 1000 ஆண்டுகள் வரை ஆகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதனால் நாம் தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்கள் அப்படியே மண்ணில் தங்கி மழை நீரை மண்ணுக்குள் உட்புக விடாமல் செய்கின்றன. அது மட்டும் இன்றி தொடர்ச்சியான பிளாஸ்டிக் பயன்பாடுகளால் நமது உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. பாதிப்புகள் உடனே தெரிவதில்லை என்றாலும் மெல்ல மெல்ல அதன் அறிகுறிகள் வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. எனவே பிளாஸ்டிக்கிற்கு மாற்று என்பது அவசியமாகிறது.

தண்ணீர் பாட்டில்கள்

தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்கும் இந்தக் காலத்தில் தண்ணீர் பாட்டில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் தண்ணீர் பாட்டில்கள் உபயோகிக்கப்படுகின்றன. அதிலும் திருமணம், பொது விழாக்கள் என்று வந்து விட்டால் பாட்டில்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

இதனைத் தடுக்க லண்டனை மையமாகக் கொண்ட ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப் (Skipping Rocks Lab) என்னும் நிறுவனம் சாப்பிடக் கூடிய தண்ணீர் பந்துகளை அறிமுகம் செய்துள்ளது.  மேலும் இந்தத் தண்ணீர் பந்திற்கு Ooho என்று பெயர் வைத்துள்ளது. இவை பார்ப்பதற்கு குட்டி பந்துகள் போல உள்ளன. இந்த கண்டுபிடிப்பு வந்து ஒரு வருடம் ஆன நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக பல நாடுகளும் பரப்புரைகளை மேற்கொண்டு வரும் இவ்வேளையில், இந்த தண்ணீர் பந்துகள் மீண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன.

edible-water-balls-ooho-skipping-rocks-plastic
Credit: Skipping Rocks Lab

தயாரிக்கும் விதம்

இந்தத் தண்ணீர் பந்துகள், தாவரங்கள் மற்றும் கடற்பாசிகள் கொண்டு மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. உறைந்த நிலையில் உள்ள நீர் கட்டிகளை, கால்சியம் குளோரைடு மற்றும் சோடியம் ஆல்கினேட் கரைசல்களில் அமிழ்த்துவதால் அதன் வெளிப்புறத்தில் சவ்வானது உருவாகிறது.

அறிந்து தெளிக !!
சோடியம் ஆல்கினேட் (NaAgl) பழுப்புப் பாசியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பழுப்புப் பாசி ஏற்கனவே பல உணவு சார்ந்த பொருட்களில் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தண்ணீர் பந்துகளின் தோலை பழங்களின் தோலை உரிப்பது போல் உரித்து விட்டுக் கடித்து சாப்பிடலாம். பின்பு தோலை குப்பையில் போட்டு விடலாம். அவை 4 முதல் 6 வாரங்களில் மட்கி விடும். இல்லையெனில் தோலை உரிக்காமல் அப்படியே கடித்தும் சாப்பிடலாம். இந்தத் தோல் மிகவும் மென்மையானது.

இந்தப் பந்துகளில் இருக்கும் தண்ணீரின் அளவானது 50 முதல் 100 மிலி வரை உள்ளது. இவற்றைத்  தயாரித்த 7 முதல் 10 நாட்களுக்குள் உபயோகிக்கலாம்.

சிறப்பம்சங்கள்

இந்தத் தண்ணீர் பந்துகள் முற்றிலும் இயற்கையானவை மற்றும் மட்கக்கூடியவை. இவை தண்ணீர் போன்று சுவையற்றவை. எனினும், தேவைக்கு ஏற்ப நிறம் மற்றும் பிளேவர்களைச்  சேர்த்தும்  வழங்க முடியும் என்கிறது இதனைத் தயாரித்த நிறுவனம் .

இதன் மற்றுமொரு சிறப்பம்சம், இதற்கு ஆகும் செலவு பிளாஸ்டிக்கை விடக் குறைவு என்பதாகும். இதனால் இவற்றிற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை இந்தத் தண்ணீர் பந்துகள் லண்டன், சான் பிரான்சிஸ்கோ, போஸ்டன் போன்ற நகரங்களில் நடந்த தனியார் நிகழ்ச்சிகள், மாநாடுகள் மற்றும் விழாக்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் தேவைப்படுவோர் அந்த நிறுவனத்தை அணுகலாம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.