கிடேரி கன்றுகளை மட்டுமே பிறக்கச் செய்யும் தொழில்நுட்பம் – பகுதி 1/3

"பிறக்கப்போகும் கன்றின் பாலினத்தை மனிதர்களாகிய நாம் ஏன் தீர்மானிக்கக் கூடாது? அப்படி நம்மால் தீர்மானிக்க முடிந்தால் எதிர்காலத்தில் பால் சுரக்கும் கிடேரி கன்றுகளை மட்டுமே பிறக்கச் செய்யலாம் அல்லவா? அப்படி செய்தால் பசுக்களின் எண்ணிக்கையை மட்டும் அடுத்தடுத்த சந்ததிகளில் அதிகரித்து பால் உற்பத்தியை பெருக்கி இரண்டாம் வெண்மை புரட்சியை நனவாக்கலாம் அல்லவா?" என்றெல்லாம் கனாக்கண்ட அறிஞர்களின் எண்ணத்தில் பிறந்தது தான் "விந்தணுக்களின் பாலினத்தை கண்டறியும் தொழில்நுட்பம்" | மூன்று பகுதிகளைக் கொண்ட கட்டுரையின் முதல் பகுதி இது!


178
29 shares, 178 points
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக (ஒரத்தநாடு), விலங்கின மரபணுவியல் மற்றும் இன விருத்தியல் துறை உதவி பேராசிரியர் Dr. K. ஜெகதீசன், Ph.D அவர்கள் எழுதி மூன்று பகுதிகளாக வரவிருக்கும் தொடரின் முதல் பகுதி இது! ”.

“கிடேரி கன்றுகளை மட்டுமே பிறக்கச் செய்யும் தொழில்நுட்பம்: பொலிக்காளைகளில் விந்தணுக்களின் பாலினத்தை கண்டறிதல் – ஓர் அறிமுகம்” 

(Technology to Produce Only Female Calves: Sperm Sexing or Semen Sexing in Breeding Bulls – An Introduction)

ஒரு கிடேரி (பெட்டை) கன்று பிறக்கிறது. வளர்கிறது. ஒன்னரை முதல் இரண்டு வயதில் உடலளவில் பாலின முதிர்ச்சியை (Sexual Maturity) அடைகிறது. அதன் பின்னர் ஒவ்வொரு 21 நாட்களுக்கு ஒருமுறை சினைப்பருவ அறிகுறிகளை (Oestrus Signs) வெளிப்படுத்துகிறது. இதனை நுகர்ந்து கொண்ட காளை கிளர்ச்சியுற்று பசுவை நெருங்கும். பசுவும் காளையிடம் மன்மத ராகம் பாடி இணக்கம் காட்டும். பின்னர் பசுவும் காளையும் கனநேரத்திலேயே கலவி (Mating) புரிந்து விடும். இதைத் தான் பசுவை ‘காளைக்கு விடுதல்’ (Allowing Cow to be Mounted) என கிராமங்களில் சொல்வார்கள். காளைக்கு விடுவதற்காகவே சாமானியர்கள் தங்களின் பசுக்களை பண்ணையார் வீட்டுக்கு ஓட்டிச்சென்று கொல்லைப் புறத்தில் காலையும், மாலையும் காத்துக் கிடப்பர். ஏனெனில் பண்ணையாரிடம் மட்டும் தான் வீரியமிக்க பொலிக்காளைகள் (Breeding Bulls) இருக்கும். இந்த நிலை தான் பல நூறு வருடங்களாக இருந்து வந்தது.

பசுவை காளைக்கு விடுதல்

Allowing Cow to be Mounted by Bull

காலப்போக்கில், 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் அறிவியலின் வளர்ச்சியால் இயற்கையாக நடைபெறும் “பசு-காளை” கலவி புரிதல் தடுக்கப்பட்டு பருவத்திலுள்ள பசுவிற்கு காளையின் விந்து (Semen) மட்டும் ஊசி மூலம் செலுத்தப்பட்டது. இந்த முறையில் காளையிலிருந்து “விந்து” முறையாக சேகரிக்கப்பட்டு அவற்றை ஆய்வகங்களில் பல்வேறு சோதனைகளுக்குட்படுத்தி அவற்றின் தரத்தை (Quality) உறுதி செய்த பின்னர் பசுவின் கர்பப்பையில் வல்லுநர்களால் செலுத்தப்படுகிறது. இம்முறைக்கு “செயற்கைமுறை கருவூட்டல்” (Artificial Insemination) என்று பெயர். இந்தத் தொழில்நுட்பம் கறவை மாடு வளர்ப்போர்களை பண்ணையார் வீட்டிற்குப் பதிலாக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்தது. ஆண்டான் – அடிமை முறை காணப்பட்ட கிராமங்களில் இது ஒரு மிக முக்கியமான ஜனநாயக நிகழ்வாகும்.

பசுவை செயற்கைமுறை கருவூட்டல் செய்தல்

Artificial Insemination of Cow

பசு ஒவ்வொரு முறை பருவத்திற்கு வரும்போதும் ஒரே ஒரு முட்டை (Ovum / Egg) அண்டகத்திலிருந்து (Ovary) வெளிப்படும். வெளிப்பட்ட அந்த ஒரு முட்டையும், வெளியிலிருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்ட காளையின் கோடானுகோடி விந்தணுக்களும் கருப்பையில் (Womb) சந்திக்கிறது. அங்கு பல கோடி விந்தணுக்கள் (Sperm) ஒற்றை முட்டையை மொய்த்துக் கொண்டு முட்டை சவ்வை (Egg Membrane) துளைத்தெடுக்கும் (Drilling). அப்படிப் பல கோடி விந்தணுக்கள் முட்டையை துளைத்தாலும் அவற்றில் ஒன்றுக்கு மட்டுமே உள்ளே தலையை நுழைக்க (Fertilization) அனுமதி கிடைக்கும். முட்டையினுள்ளே தலையை நுழைத்த அந்த ஒற்றை விந்தணு மட்டுமே தந்தை (Sire) எனும் உறவை அதை வழங்கிய காளைக்கு பெற்றுத்தருகிறது. ஆம்! முட்டையை துளைத்து உள்ளே எட்டிப்பார்த்த அந்த ஒற்றை விந்தணு காளையின் விதையிலிருந்து (Testicle) தான் சுமந்து வந்த முப்பது ‘குரோமோசோம்களை’ (Chromosomes) முட்டையினுள்ளே கொட்டுகிறது. விந்தணுவின் காணிக்கையை பெற்றுக்கொண்ட முட்டையும் தன் பங்கிற்கு பசுவின் அண்டகத்திலிருந்து கொண்டுவந்த முப்பது ‘குரோமோசோம்களை’ தன்னுள்ளேயே கட்டவிழ்த்து விடுகிறது. இப்போது முட்டையின் ‘குரோமோசோம்களும்’ விந்தணுவின் ‘குரோமோசோம்களும்’ நெருங்கி வந்து ஒன்றையொன்று அடையாளம் கண்டு இணை இணையாக ஜோடி சேருகின்றது (Pairing of Homologous Chromosomes).

முட்டையும், விந்தணுவும் இணைந்து கருமுட்டையை உருவாக்குதல்

Formation of zygote after the fertilization of ovum by a sperm

இப்படி முட்டையும், விந்தணுவும் தனித்தனியாக வெளிப்பட்டு கருப்பை நோக்கிப் பயணித்து, ஒன்றையொன்று சந்தித்து தாங்கள் கொண்டுவந்த குரோமோசோம்களை எதிர்கால சந்ததிகளுக்கு கொடையாக்கி சாதாரண முட்டையை சகல வல்லமையும் (Totipotential) கொண்ட ’கருமுட்டையாக’ (Zygote) உருமாற்றமடைய செய்கிறது. எல்லாம் வல்ல கருமுட்டை இப்போது கருப்பையில் உருண்டோடி பதமான சதைப்பரப்பில் இதமாக புதையுண்டு வேரூன்றி (Implantation) கருவாக (Embryo) வளர்கிறது. கருமுட்டை வேரூன்றி கந்துவட்டிக் கணக்காய் வளர்ந்து (Exponential Cell Division) முதிர்ந்த கருவாகவும் (Matured Embryo), பின்னர் தொப்புள்கொடி (Umblical cord) கொண்ட சிசுவாகவும் (Foetus), இறுதியாக உரோமம் உடல் கொண்ட முழு கன்றாகவும் (Calf) உருமாறி பூமியை வந்தடைகிறது. முட்டையும், விந்தணுவும் சந்தித்து ஹாய் சொல்லி கருமுட்டை உருவான நாளுக்கும் அது பின்னர் கன்றாய் உருவெடுத்து கருப்பைக்கு பாய் சொல்லி பூமியை வந்தடைந்த நாளுக்கும் இடைப்பட்ட இருண்ட அந்த ஒன்பது மாத கருப்பைவாச காலமே (Womb Period) பசுவின் கர்பகாலம் (Gestation Period) எனப்படுவது.

கன்றின் பாலினம் (Gender) எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

கர்ப்பக் காலத்தைக் கடந்து பூமியை வந்தடையும் கன்று கிடாவாக (ஆண்) இருப்பதும், கிடேரியாக (பெண்) இருப்பதும் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது? யாரால் தீர்மானிக்கப்படுகிறது? பசுவின் அண்டகதிலிருந்து வெளிப்பட்ட முட்டையும், காளையின் விதையிலிருந்து விடுபட்டு கருவறை நுழைந்து எதிர் நீச்சலிட்டு வந்த விந்தணுவும் தலா முப்பது குரோமோசோம்களை முதலீடு செய்து மொத்தம் அறுபதாகிறது. இந்த அறுபதும் தங்களுக்குள் அடையாளங்கண்டு இணை இணையாக ஜோடி சேர்ந்து முப்பது ஜோடிகளாக ஒருங்கமைந்து, முட்டையை கருமுட்டையாக உருப்பெறச் செய்கிறது. இது தான் பின்னர் வளர்ந்து கன்றாக உருவெடுக்கிறது.

பொதுவாக ஒவ்வொரு முறை பசு பருவத்திற்கு வரும் போதும் ஒரே ஒரு முட்டை தான் அண்டகத்திலிருந்து வெளிப்படும். அந்த முட்டையில் உள்ள முப்பது குரோமோசோம்களில் முப்பதாவது குரோமோசோம் எப்போதுமே “X” வடிவத்தில் மட்டும் தான் இருக்கும். இது இயற்கை. இது மாறாது. நிற்க!

ஆனால் காளையால் ஒருமுறை பீச்சியடிக்கப்படும் விந்துவில் ஒரே ஒரு விந்தணு மட்டும் இருப்பதில்லை. மாறாக கோடானகோடி விந்தணுக்கள் நீந்தித் திளைக்கின்றன. இது இயற்கையின் பாரபட்சம் தான். ஆனால் ஏதோ ஒரு காரணம் இருக்கக் கூடும். விந்துவிலுள்ள கோடானகோடி விந்தணுக்களில் சரிபாதியில் முப்பதாவது குரோமோசோம் “X” வடிவிலும், மீதி பாதியில் முப்பதாவது குரோமோசோம் “Y” வடிவிலும் இருக்கும். இதுவும் இயற்கையே. முட்டையிலுள்ள முப்பதாவது குரோமோசோமுக்கும் விந்தணுக்களிலுள்ள முப்பதாவது குரோமோசோமுக்கும் இடையே உள்ள இந்த அடிப்படை வேறுபாட்டை புரிந்துக்கொள்ள வேண்டும். இது தான் கருமுட்டையின் (கன்றின்) பாலினத்தை தீர்மானிக்கும் ஓர் ஒற்றை காரணியாகும். எப்படி?

கன்று கிடாவாக (ஆண்) இருப்பதும், கிடேரியாக (பெண்) இருப்பதும் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?

bull and cow

எப்பொழுதெல்லாம் முட்டை ”X” குரோமோசோமை கொண்ட விந்தணுவால் கருத்தரிக்கப்படுகிறதோ அப்போது உருப்பெறும் கருமுட்டை கிடேரி (பெண்) கன்றாகவும், எப்பொழுதெல்லாம் முட்டை ”Y” குரோமோசோமை கொண்ட விந்தணுவால் கருத்தரிக்கப்படுகிறதோ அப்போது உருப்பெறும் கருமுட்டை கிடா (காளை) கன்றாகவும் பிறப்பெடுக்கிறது. அதாவது கருமுட்டையின் முப்பதாவது ஜோடி குரோமோசோம்கள் “XX” என்றமையும் போது அது பெண்ணாகவும், கருமுட்டையின் முப்பதாவது ஜோடி குரோமோசோம்கள் “XY” என்றமையும் போது அது ஆணாகவும் நிர்ணயிக்கப்பட்டு, அவை முறையே கிடேரியாகவும், கிடாவாகவும் மண்ணில் பிறக்கிறது. சுருங்கச் சொல்வதென்றால் மண்ணில் பிறக்கும் கன்றின் பாலினம் என்பது அது கருப்பையில் கருமுட்டையாய் உருப்பெறும் போதே தீர்மானிக்கப்படுகிறது. கருமுட்டையின் பாலினத்தை தீர்மானிப்பது முட்டையை கருத்தரித்த ’அந்த’ ஒற்றை விந்தணு சுமந்து வரும் முப்பதாவது குரோமோசோமே ஆகும். இதே ’கதை’ தான் மன்னிக்கவும் இதே ’உண்மை’ தான் மனிதர்களிலும் நிகழ்கிறது. இப்படி கருவின் பாலினத்தை தீர்மானிப்பது விந்தணுவாக இருக்கும் போது பெண் பிள்ளையை பெற்றெடுத்ததற்காக தாயை கரித்துக் கொட்டுவது எவ்வகையில் நியாயம்? முறையாய் பார்த்தால் தந்தை தானே பொறுப்பேற்றிற்க வேண்டும்? இது தான் ஆணாதிக்க சமூகம் என்பதோ? சரி அது போகட்டும். நாம் நம் மாட்டினைப் பார்ப்போம்.

கறவை பண்ணையத்தில் கிடேரி மோகம் (Female Calf – The Most Wanted in Dairy Farm)

மனிதர்களில் “ஆண்” பிள்ளைக்காகவும், மாடுகளில் “கிடேரி” (பெண்) கன்றுக்காகவும் நாம் ஏங்குகிறோம். ஏன்? வெட்கத்தைவிட்டு அம்மனமான உண்மையை சொல்வதென்றால் எல்லாம் ’பொருளாதாரத்திற்காகத்’ தானே! குறிப்பாக மாடுகளில் கிடேரி கன்று தானே பிற்காலத்தில் பாலை சுரக்கும். வருமானத்தையும் கொடுக்கும். கிடாக் கன்று பிற்காலத்தில் வேளாண் வேலைக்கு பயன்பட்டாலும் அதைத் தான் இன்று இயந்திரங்கள் பிடுங்கிக் கொண்டனவே?  இளங்கன்றுகளை அறுத்து சமைத்து சாப்பிடலாமென்றால் காலங்காலமாக நம்மோடு ஒட்டிவந்திருக்கும் கலாச்சார கவசகுண்டலத்தையும் கழற்றியெறிய முடியவில்லை. இக்கட்டான இந்தவொரு சூழ்நிலையில் காளைக் கன்றின் மேல் நாம் விருப்பம் கொள்ளாததைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.

”இன்னும் சரியாகச் சொல்வதென்றால் இன்றைய பொருளாதாரத்திற்கு ஒவ்வாத காளைக் கன்றுகளை பெற நாம் ஏன் சினை ஊசி போடுதல், சினையை உறுதி செய்தல், கர்ப்பகால மேலாண்மை, பேறுகால மேலாண்மை, தேவைப்படும்போது சிகிச்சை, இத்தியாதி… இத்தியாதி… என செலவினங்களை ஒரு வருட காலம் ஏற்க வேண்டும்? இவையெல்லாம் வீணான செலவு தானே? பிறக்கப்போகும் கன்று கிடா தான் என்பதை சினை ஊசி போடும்போதே தெரிந்திருந்தால் நம்மால் இந்த மனித ஆற்றல் இழப்பு, கால விரயம், பொருளாதார இழப்பு போன்றவற்றையெல்லாம் தவிர்த்திருக்கலாம் தானே? பிறக்கப்போகும் கன்றின் பாலினத்தை மனிதர்களாகிய நாம் ஏன் தீர்மானிக்கக் கூடாது? அப்படி நம்மால் தீர்மானிக்க முடிந்தால் எதிர்காலத்தில் பாலை சுரக்கும் கிடேரி கன்றுகளை மட்டுமே பிறக்கச் செய்யலாம் தானே? அப்படி செய்தால் பசுக்களின் எண்ணிக்கையை மட்டும் அடுத்தடுத்த சந்ததிகளில் அதிகரித்து பால் உற்பத்தியை பெருக்கி இரண்டாம் வெண்மை புரட்சியை நனவாக்கலாம் தானே? பால் பொழிவை கிராமங்கள் தோறும் அதிகரிக்கலாம் தானே? வருமானத்தையும் பெருக்கலாம் தானே? கத்தரி, கொத்தவரை, பூசனி, புடலையை புறந்தள்ளி பன்னீர், பாலாடை (Cheese), வெண்ணெய், நெய் என இரவு பகல் பாராமல் சுவைத்து இன்புறலாம் தானே? கட்டவுட்டிற்கும், கோயில் கருவறைக்கும் குழாய் மூலம் பால் அபிஷேகம் நடத்தலாம் தானே? வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம் தானே?” இப்படியெல்லாம் கனாக்கண்ட அறிஞர்களின் எண்ணத்தில் பிறந்தது தான் “விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்” (Sperm Sexing Technology or Semen Sexing Technology) என்பது.

பெண் விந்தணுவும் (X Bearing Sperm), ஆண் விந்தணுவும் (Y Bearing Sperm)

பெண் விந்தணுவா? வாயை பிளக்காதீர்கள். காளையால் பீச்சியடிக்கப்படும் விந்தணுக்களில் “X” மற்றும் “Y” என இரண்டு வகைகள் உள்ளதென்பதை அறிவோம். பசுவின் முட்டை காளையின் “X” வகை விந்தணுவால் கருத்தரிக்கப்படும் போது கருமுட்டை பெண்ணாகவும் (கிடேரி), அதே போன்று பசுவின் முட்டை காளையின் “Y” வகை விந்தணுவால் கருத்தரிக்கப்படும் போது கருமுட்டை ஆணாகவும் (கிடா) தீர்மானிக்கப்படுகிறது. எனவே தான் “X” வகை விந்தணுக்களை “பெண் விந்தணு” என்றும், “Y” வகை விந்தணுக்களை “ஆண் விந்தணு” என்றும் அழைக்கிறோம்.

பருவத்திலுள்ள பசுவை இயற்கையாக காளைக்கு விடும் போதும் அல்லது பருவத்திலுள்ள பசுவை செயற்கைமுறை கருவூட்டலுக்கு உட்படுத்தும் போதும் இரண்டு வகையான (”X” மற்றும் “Y”) விந்தணுக்களையும் கருப்பை பெறுகிறது. ஆகையால் அண்டகத்திலிருந்து வெளிப்பட்ட முட்டை எந்தவகை விந்தணுவால் (”X” அல்லது “Y”) வெற்றிகரமாக கருத்தரிக்கப்பட்டு கருமுட்டையாக உருப்பெறும் என்பதை நம்மால் யூகிக்க முடிவதில்லை. ஆகவே தான் மேற்குறிப்பிட்ட இயற்கை மற்றும் செயற்கை முறை கருவூட்டல் மூலம் பிறக்கும் கன்று பெண்ணாகவும் (கிடேரி) இருக்கலாம் அல்லது ஆணாகவும் (கிடா) இருக்கலாம். அதாவது கன்று கிடேரியாக இருப்பதற்கு 50% சாத்தியக்கூறும், கன்று கிடாவாக இருப்பதற்கு 50% சாத்தியக்கூறும் உள்ளது. எளிதாக சொல்வதென்றால் பசுவிலிருந்து பிறக்கப்போகும் ஒரு கன்று கிடேரியாக இருப்பதற்கும், கிடாவாக இருப்பதற்கும் சமமான சாத்தியக்கூறையே (Equal Probablity) இயற்கை வகுத்துள்ளது. இயற்கையின் இந்த கோட்பாடு தான் மனிதன் உள்ளிட்ட அனைத்து விலங்குகளிலும் ஆண்களின் எண்ணிக்கையையும், பெண்களின் எண்ணிக்கையையும் கூடுமான வரையிலும் சமமாக வைத்துள்ளன. ஆனால் நாமோ எதிர்காலத்தைப் பற்றி எண்ணாமல் நிகழ்கால ’பொருளாதார’ காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட பாலினத்திற்கு ஆதரவாகவும், மற்றவைக்கு எதிராகவும் செயல்பட எத்தனிக்கிறோம்.

பெண் மற்றும் ஆண் விந்தணுக்களை பிரித்தெடுத்தல் (Separation of X and Y Bearing Sperm)

இப்போது நம் முன் உள்ள சவால் என்னவென்றால் பிறக்கப்போகும் கன்று கிடேரியாக இருப்பதற்கான சாத்தியக்கூறை 50%லிருந்து 100%ஐ நோக்கி உயர்த்துவதே ஆகும். இதனை எப்படி சாத்தியப்படுத்துவது? இதற்கான தீர்வு பெண் மற்றும் ஆண் விந்தணுக்களை பிரித்தெடுப்பதில் தான் உள்ளது. ஆம். நம்மால் ஏதோவொரு தொழில்நுட்பத்தால் பெண் விந்தணுக்களை ஆண் விந்தணுக்களின் கலவையிலிருந்து பிரிக்க முடியுமானால் அவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட பெண் விந்தணுக்களை மட்டும் பசுவின் கருவறைக்குள் அனுமதித்து பெண் கருமுட்டைகளை உருவாக்க முடியும். இந்த பெண் கருமுட்டைகள் வளர்ந்து கிடேரிக் கன்றாக உருப்பெற்று மண்ணில் பிறப்பெடுக்கக் கூடும். இப்படி இயற்கை அருளிய ஆண் பெண் விந்தணுக்களின் கலவையைச் சல்லடை கொண்டு சலித்தெடுத்து பெண் விந்தணுக்களை மட்டுமே கருவறை நுழைய அனுமதித்து, அதன் மூலம் கிடேரி கன்றின் பிறப்பை உறுதிசெய்யும் தொழில்நுட்பமே “விந்தணுக்களின் பாலினத்தை கண்டறிதல்” என்பதாகும்.

Separation of X and Y Bearing Sperm

எப்படி விந்துவிலிருந்து ஆண், பெண் விந்தணுக்கள் பிரித்தெடுக்கப்படுகிறது? இதிலுள்ள சவால்கள் என்னென்ன? இயற்கையாக உள்ள கிடா (ஆண்) – கிடேரி (பெண்) கன்றின் பிறப்பு விகித்தை மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? இத்தொழில்நுட்பத்திலுள்ள அறம் மீறலுக்கான சாத்தியக்கூறு (Possibility of Violation of Ethics) என்னென்ன? என்பவை பற்றியெல்லாம் அடுத்தடுத்த கட்டுரைகளில் அறிவோம்! விவாதிப்போம்!!

கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு கட்டுரையாசிரியரே முழுப் பொறுப்பு. அவர் சார்ந்த பல்கலைக்கழகமோ அல்லது வேறு சில அமைப்போ அல்ல.

கட்டுரை ஆக்கம்:

முனைவர். கி. ஜெகதீசன், பி.எச்.டி.
உதவிப் பேராசிரியர்,
விலங்கின மரபணுவியல் மற்றும் இனவிருத்தியல் துறை
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
ஒரத்தநாடு – 614 625, தஞ்சாவூர் மாவட்டம்
மின்னஞ்சல்: jagadeesankrishnan@gmail.com

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

178
29 shares, 178 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.