திருச்சியில் அமைய இருக்கும் இஸ்ரோவின் புதிய ஆராய்ச்சிமையம்

0
7
space-comunication-satellite-isro-gslv-
Credit: The Week

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திருச்சி, நாக்பூர், ரூர்கேலா, இந்தூர் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் புதிய ஆராய்ச்சி மையத்தினை நிறுவ இருக்கிறது. இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் குறித்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதனால் விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இஸ்ரோ வாய்ப்பளிக்க இருக்கிறது.

space-comunication-satellite-isro-gslv-
Credit: The Week

இந்தியா முழுவதும் ஐந்து இடங்களில் அமைய இருக்கும் இந்த விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோவின் நேரிடி கண்காணிப்பில் இயங்கும். அறிவார்ந்த இளைய சமுதாயத்தை அமைத்திட இம்மாதிரியான திட்டங்கள் அவசியம் என இஸ்ரோவின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருகிறது.

இளம் விஞ்ஞானி

விண்வெளி ஆராய்ச்சித்துறையில் குவிந்து கிடக்கும் வாய்ப்புகளை மாணவர்களிடம் எடுத்துரைக்கவும், இதன்மூலம் ஆர்வமும், திறமையும் உள்ள மாணவர்கள் இஸ்ரோவின் திட்டங்களில் இடம்பெறவும் வாய்ப்புள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா மூன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இஸ்ரோவிற்கு பயிற்சிக்காக அழைக்கப்படுவர்.

செயற்கைக்கோள் தயாரிப்பில் நேரிடியாக பங்குபெற இம்மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். மேலும் ஆய்வுமையத்தின் எல்லா பகுதிகளுக்கும் சென்று அனைத்து வகையான விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் செய்யலாம். செயற்கைக்கோள் தயாரிப்பைப் பற்றிய அனுபவத்தை மாணவர்கள்  பெறுவது இத்திட்டத்தின் மூலம் சாத்தியமாகும்.

Dr-K-Sivan
Credit: Your Story

மாணவர்களின் துணையோடு உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும். பின்னர் அதன் பயன்பாட்டை முடித்துக்கொண்ட செயற்கைக்கோள் அழிக்கப்படுவதற்குப் பதிலாக மாணவர்களின் ஆராய்சிக்காக அவை வழங்கப்படும். இதனால் செயற்கைக்கோள் ஆராய்ச்சியை இளம் மாணவர்களிடையே உருவாக்க முடியும் என்று சிவன் தெரிவித்தார்.

பல கனவுகளோடு தங்களது சிறகை விரிக்கக் காத்திருக்கும் ஏராளமான மாணவர்கள் இஸ்ரோவின் இந்த புதிய அறிவிப்பினால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக பல சிக்கல்களை இந்தியா சந்தித்து வருகிறது. இந்நிலையில் இம்மாதிரியான திட்டங்கள் அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும். ஏனெனில் இந்தியாவின் எதிர்காலமும் அதிலேதான் கலந்திருக்கிறது.