செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழலாம் – புதிய ஆய்வு முடிவுகள்

0
23
Credit : Business Insider

பூமியைத் தாண்டி பிற கிரகங்களில் உயிரினங்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா என்று பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இப்போது படிப்படியாக பிற கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆராய்ச்சியாளர்கள்  ஆய்வு செய்யும் கோள்களில்  முதன்மை பெறுவது செவ்வாய் கிரகம் தான்.

Credit : Indian Tribune

செவ்வாய் கிரகத்தில் பிற உயிரிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா? என சர்வதேச அளவில் வெகு காலமாகவே ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே, செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை செயற்கைக் கோள் புகைப்படங்கள் உறுதி செய்தன. தற்போது அங்கு உயிர் வாழ்வதற்குத் தேவையான மற்றொரு ஆதாரமான உயிர்வளி எனும் ஆக்சிஜன் வாயு இருக்கிறதா என்ற ஆராய்ச்சியினை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காணப்படும் உப்பு நீரில் நுண்ணுயிரிகள் உயிர் வாழத் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பதாகத் தற்போது வெளியான ஆய்வறிக்கைகள் உறுதி செய்துள்ளன.

தற்போது செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ஆக்சிஜனின் அளவானது, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு பூமிப்பந்தில் உயிரினங்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்த அளவு எனக்  கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் அளவைக் கொண்டு பூஞ்சைகள் மற்றும் பல்செல் உயிரினங்கள் வாழ இயலும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

செவ்வாயில் தண்ணீர்

கலிபோர்னியாவில் இருக்கும் ஆய்வகத்தின் இயக்குநர் இது குறித்து குறிப்பிடுகையில், செவ்வாய் கிரகத்தில் இருந்து பெறப்பட்ட நீரில் அதிக அளவு உப்பு இருப்பதாகவும், செவ்வாய் கிரகத்தில் ஒரு செல் உயிரினங்கள் சுவாசிப்பதற்குத் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இது நாள் வரையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், செவ்வாய் கிரகத்தில் எந்த ஒரு உயிரினமும் வாழ்வதற்குப் போதுமான அளவு ஆக்சிஜன் இல்லை என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தில், கால நிலைகளுக்கு ஏற்றவாறு வெப்பநிலை -195 டிகிரி முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.