இன்று இங்கிலாந்தில் துவங்கும் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள்!

0
47
cricketworldcupopeningceremony
Credit: IndiaToday

10 அணிகள், 12 மைதானங்கள், 48 போட்டிகள் மற்றும் ஒரு உலககோப்பை. இங்கிலாந்தில் இன்னும் சற்று நேரத்தில் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் 2019 ஆம் ஆண்டிற்கான உலககோப்பை போட்டிகள் துவங்க இருக்கிறது. இதனை குறிக்கும் விதமாக கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதுவரை உலககோப்பையை வெல்லாத அணிகளான இங்கிலாந்து- தென் ஆப்ரிக்கா முதல் போட்டியில் மோதுகின்றன.

2019-icc-cricket-world-cup-begins-

துவக்கவிழா

உலகக்கோப்பைக்கான துவக்க விழா இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் டிராபால்கர் சதுக்கத்தை இணைக்கும் மாலில் பிரமாண்டமாக நடந்தது. இந்நிகழ்ச்சியை இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்டிரு பிளிண்டாப், இந்தியாவின் சிவானி டாண்டேக்கர் ஆகியோர் தொகுத்து வழங்கினர். அப்போது தொடரில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர். இந்த நிகழ்ச்சியைக் காண சுமார் 40,000 பேர் அந்த இடத்தில் குழுமினார்கள்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் மற்றும் முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரேம் சுவான் ஆகியோர் உலகக்கோப்பையை அறிமுகம் செய்தனர். இதனையடுத்து  லாரின் மற்றும் ரூடிமெடல் ஆகியோ உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடலான ‘ஸ்டாண்ட் பை’ பாடலுக்கு நடனமாட, ரசிகர்களும் உற்சாகமாக நடமான உலககோப்பை கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.

இதுவரை 11 உலகக்கோப்பை போட்டி தொடர்கள் நடந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா 5 முறையும்,மேற்கிந்திய தீவுகள், இந்தியா ஆகிய அணிகள் தலா 2 முறையும், பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் உலகக்கோப்பையை வென்றுள்ளன.

கடும் போட்டி

1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்ற இந்தியா இம்முறை கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தொடரை 4-0 என வீழ்த்திய குஷியில் இங்கிலாந்து இந்த தொடரில் களமிறங்குகிறது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் அணிக்குத் திரும்பியதால் ஆஸ்திரேலிய அணி வலிமைவாய்ந்ததாக இருக்கிறது. ஆகவே இந்த உலககோப்பை தொடரில் வழக்கம்போல் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

cricketworldcupopeningceremony
Credit: IndiaToday

சச்சினுக்கு உலககோப்பையை தோனி சமர்ப்பித்ததைப் போல் தோனிக்கு விராட் கோலி உலககோப்பையை வென்று பிரியாவிடை கொடுப்பாரா என இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். எட்டு ஆண்டுகள் கழித்து இந்தியா உலககோப்பையை வெல்லுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.