பறிபோன பஞ்சாப்பின் ப்ளே ஆப் வாய்ப்பு

0
27

ப்ளே ஆப் கனவில் இருந்த பஞ்சாப் அணியை ஓரமா போய் கனவு காணுங்க தம்பி என கொல்கத்தா தொடரை விட்டே வெளியேற்றியிருக்கிறது. இரு இப்போட்டியில் அணிகளுமே வெற்றி பெற்றால் ப்ளே ஆப் வாய்ப்பு அதிகமாகும். தோற்றால் பெட்டி படுக்கையைக் கட்ட வேண்டியதுதான். ஏன்னா? பாய்ண்ட்ஸ் டேபிள் அப்படி.

இந்நிலையில் நேற்று மொகாலியில் நடந்த போட்டியில் பஞ்சாப் – கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரம்பம் முதலே பேட்டை வைத்து என்னசெய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த இருவரையும் பெவிலியன் அனுப்பினார் சந்தீப் ஷர்மா. அடுத்துவந்த மயன்க் அகர்வால் மற்றும் பூரன் இணை அசத்தலாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. அதிரடிகாட்டிய பூரன் 48 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்தவர் மந்தீப் சிங். நல்லத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு என்று நினைக்கும்படி திடீரென்று டெஸ்ட் போல ஆடி கடுப்பேற்றினார் மந்தீப்.

எப்படியாவது இவர அவுட் ஆக்கிவிடுங்க என்று பஞ்சாப் ரசிகர்களே கொல்கத்தா பவுலர்களிடம் கெஞ்சும்படி ஆயிற்று. ஆனால் தொக்கா ஒரு பீஸ் மாட்டிகிச்சு என்ற குதூகலத்தில் இருந்தது கொல்கத்தா. ஆனால் அவர்களின் சந்தோஷம் நிலைக்கவில்லை. 25 ரன்களுடன் தனது விக்கெட்டை தியாகம் செய்தார் சிங்.

நீயாவது மானத்த காப்பாத்து என அஷ்வின் ஆசி வழங்க என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க கேப்டன் என்று களத்திற்கு வந்தார் சாம் கரன். வந்த வேகத்திலேயே வெளுக்கத் தொடங்கினார். கடைசி ஓவரில் 22 ரன்களை தெறிக்கவிட்டு ஸ்கோரை 183 என உயர்த்தினார் கரன்.

184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிரிஸ் லின், சுப்மன் கில் இறங்கினர். இந்த ஜோடி முதல் 6 ஓவரில் 62 ரன்கள் எடுத்தனர். கிரிஸ் லின் 22 பந்துகளில் 46 எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த உத்தப்பா 22 ரன்கள் எடுக்கும்வரை அதிரடியாக ஆடினார். இதன்பின் வந்த தினேஷ் கார்த்திக் பொறுமையாக ஆடி வெற்றியை நோக்கி அணியினை நகர்த்தினார்.

மறுமுனையில் சிறப்பாக விளையடியாடிய உஸ்மான் கில் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரண்டு ஓவர் மீதமிருக்கும் போதே கொல்கத்தா வெற்றியை ருசித்தது. இதன்மூலம் ப்ளே ஆப் போட்டியிலிருந்து பஞ்சாப் அணி வெளியேறியிருக்கிறது.