ஃபேஸ்புக் இந்தியாவின் புதிய தலைவர் நியமனம்

0
6
facebook

கடந்த ஒரு வருடமாக ஃபேஸ்புக் இந்தியா (Facebook India), சரியான முதன்மை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் இன்றி செயல்பட்டு வந்தது. தற்போது அந்தப் பதவிக்கு ஹாட் ஸ்டார் இந்தியா (Hotstar India) நெட்வொர்க்கை வழி நடத்தி வந்த முதன்மை செயல் அதிகாரி அஜீத் மோகனை (Ajit Mohan) ஃபேஸ்புக்  நியமித்திருக்கிறது.

“உலக அளவில் ஃபேஸ்புக் தடம் பதித்து வந்தாலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில், குறிப்பாகத்  தொழில்நுட்பத்தில் தன்னை மேம்படுத்திக் கொண்டு வளரும் நாடுகளில் ஃபேஸ்புக்கின் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதி வேகமாக அதிகரித்து வருவதால், இந்தியா எங்களுக்கு நிச்சயம் முக்கியமான நாடு தான்.” என்று குறிப்பிட்டிருக்கிறது ஃபேஸ்புக். “இப்படி ஒரு வலுவான சந்தையை கவனிக்கச் சரியான ஒரு நபரைத் தேடிக் கொண்டிருந்த போது தான் அஜீத் எங்கள் கண்ணில் பட்டார்.” என்கிறது ஃபேஸ்புக் இந்தியா நிறுவனம்.

facebookமக்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவாக உருவாக்குவது என்பது தான் ஃபேஸ்புக்கின் தார்மீக நோக்கம். ஆனால், அது இந்தியாவில் அத்தனை சுலபமாக நடப்பதில்லை. ஆனால், அது ஒரு முக்கியமான விஷயமாகவே இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது ஃபேஸ்புக். மேலும், மக்களை ஃபேஸ்புக் மூலம் இணைப்பதற்காக இந்தியாவில் சிறந்த முறையில் பல நல்ல முதலீடுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறது.

இப்போது ஃபேஸ்புக் இந்தியாவிற்குத் தலைமை பொறுப்பேற்க இருக்கும் அஜித், வெளிநாடுகளிலேயே படித்துப் பணியாற்றியவர். பல மீடியா நிறுவனங்களிலும் பணியாற்றி இருக்கிறார். ஹாட்ஸ்டார் என்கிற வீடியோ ஸ்ட்ரீமிங்கை ஸ்டார் இந்தியாவுக்கு (Star India) சாத்தியப்படுத்திக் கொடுத்தவர் இவர் தான் .

ajit mohan“இந்தியா போன்ற மிகப் பெரிய. பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட நாட்டிற்கு, ஃபேஸ்புக் போன்ற ஒரு நிறுவனத்தில் தலைவராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததைப் பெருமையாகப் பார்க்கிறேன்” என்று அஜித் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உமங் பேடி (Umang Bedi ) நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து பதவி விலகியதில் இருந்து இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநர் பதவி காலியாகவே இருந்தது. அந்த பதவியைத் தான் இப்போது அஜீத் மோகன் அடுத்து வரும் மாதங்களில் நிரப்ப இருக்கிறார். இவர் ஒரு அமெரிக்க வாழ் இந்தியர் என்பதும் ஒரு கூடுதல் செய்தி.