கூகுளின் புதிய சேவை – நவேலிகா..!!

0
26

இந்தியாவின் நான்காவது ‘கூகுள் ஃபார் இந்தியா‘ (Google for India) நிகழ்ச்சியில், கூகுள் நிறுவனம் தனது புதிய திட்டமான “நவேலிகா(Navelkha)” வை ஆகஸ்ட் 28-ஆம் தேதி அறிமுகப்படுத்தி உள்ளது.

” இந்திய மொழிகளின் 1,35,000 பிரசுரங்களை, ஒரே தொகுப்பாகக் கொண்டு வருவதற்கான புதிய முயற்சி தான் நவேலிகா.” என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 22 அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. ஆனால், இணையத்தை பெரும்பாலும் ஆங்கிலம் தான் ஆள்கிறது. கூகுளின் மதிப்பீட்டின் படி, நாட்டில் பதிவு செய்யப்பட்ட 90% பிரசுரங்களுக்கு, தங்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு வலைத்தளம் இல்லை. இதற்காகக் கொண்டு வரப்பட்டது தான் நவேலிகா.

எழுதுவதற்கான புதிய முறை

நவேலிகா என்பது வடமொழியில் ” எழுதுவதற்கான புதிய முறை” என்று பொருள். இந்தப்  புதிய வலைத்தளம், உள்ளூர் வெளியீட்டாளர்கள் முழு மனநிறைவுடன் அவர்களின் படைப்புகளை எளிதில் இணையத்தில்  வெளியிடும் அனுமதியை வழங்குகிறது.

டிஜிட்டல் ஸ்கேன் அனுபவம்

இந்தப் புதிய சேவைத் திட்டம் மிக எளிதில் ஆவணங்களை ஸ்கேன் செய்து உடனுக்குடன் தனி வெளியீடு தளத்தைப் பயனருக்கு உருவாக்கித் தருகிறது. இதற்கென்று பயனர்களுக்குத் தனி டிஜிட்டல் அனுபவம் மற்றும் டிஜிட்டல் அறிவு தேவையில்லை என்று கூகுள் தெரிவித்துள்ளது.

 

அனைத்து இந்திய மொழிகளிலும்

இந்தப் புதிய தளம் முதலில் ஹிந்தி மொழியில் வெளியீடுகளின் சேவைக்கு அனுமதி வழங்குமென்றும், வரும் நாட்களில் அனைத்து இந்திய மொழிகளிலும் படைப்புகள் வெளியிடுவதற்கான சேவை வழங்கப்படும் என்று கூகுள் கூறியுள்ளது. வெகு விரைவில் தமிழ்,தெலுகு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் நவேலிகா சேவை துவக்கப்படுமென்று கூகுள் ஃபார் இந்தியா விழாவில் தெரிவிக்கப்பட்டது.

 

விளம்பரங்களைப் பணமாக்கும் வசதி

இத்துடன் உங்களுக்கான முதல் மூன்று ஆண்டு சேவை முற்றிலும் இலவசம் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதலாக விளம்பரங்களைப் பணமாக்கும் வசதியையும் வழங்கியுள்ளதாக விழாவில் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.