மூடுவிழா காண இருக்கும் கூகுள் ப்ளஸ்

0
71

2011 – ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் எனும் சமூக வலைதளச்  சேவையை கூகுள் தொடங்கியது. பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூ ட்யூப் மற்றும் கூகுள் டாக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் தொடங்கப்பட்டது.

கடும் போட்டி

ஆரம்பத்தில் அதிகம் ஆர்வம் காட்டாத பயனாளர்கள், பின்னர் கூகுள் ப்ளஸைப்  பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால், சமூக வலைதளங்களின் ராஜாவாக இருக்கும் பேஸ்புக், ட்விட்டர் ஆகியவைகளின் நேரடிப் போட்டிக்கு கூகுள் ப்ளசால் ஈடு கொடுக்க முடியவில்லை.

கூகுள் இது குறித்துக் குறிப்பிட்ட போது, கூகுள் ப்ளஸ் மிகவும் குறைவான நபர்களால் பயன்படுத்தப் படுவதாகவும், பயன்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் இருப்பதாகவும் கூறியுள்ளது. கூகுள் ப்ளஸ் சேவையைப் பயன்படுத்துபவர்களில் 90 சதவீதம் பேர், ஐந்து நொடிகளுக்கும் குறைவாகவே அதனைப்  பயன்படுத்துகின்றார்களாம். இருப்பினும், வர்த்தகப் பயனர்களின் பயன்பாட்டுக்காகத்  தொடர்ந்து கூகுள் பிளஸ் செயல்பாட்டை வைத்திருக்கவும், நிறுவனத்துக்குள்ளான உரையாடலுக்கு மட்டும் இந்தப் பயன்பாட்டைத் தொடர்ந்து கொடுக்கலாமா என்று யோசித்து வருவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

தகவல் திருட்டுக் குற்றச்சாட்டு

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகம் ஒன்றில் கூகுள் ப்ளஸ் மூலம் அதன் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக செய்தி வெளியானது. இந்தச் செய்தி இணைய உலகில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி அடங்குவதற்குள்ளேயே  கூகுள் பிளஸ் என்ற சமூக வலையமைப்புத் தளத்தை நிறுத்தப் போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 5 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் கூகுள் ப்ளஸ் வலை தளத்தில் இருந்து திருடப்பட்டது தெரிய வந்ததை அடுத்துத் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்திலேயே இந்தச் சிக்கல் தெரிய வந்தாலும் அப்போது கூகுள் நிறுவனம் இது குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.

Credit : Techaeris

சுமார் 438 வேறு செயலிகள், கூகுள் ப்ளஸில் இருந்து பயனாளர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, முகவரி, பாலினம், பணி செய்யுமிடம் போன்ற தகவல்களைத் திருடியுள்ளது தெரியவந்ததை அடுத்து கூகுள் இந்த முடிவை எடுத்துள்ளது.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் கூகுள் பிளஸ் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 10 மாதங்களுக்குள் பயனாளர்கள் தங்களின் தகவல்களைப்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.