வாட்சாப்பில் வந்த படத்தை நேரடியாக கூகுளில் தேடலாம்!!

0
25
whatsapp-update
Credit: IoT Gadgets

வாட்சாப்பில் பகிரப்படும் புகைப்படங்களை நேரடியாக கூகுளில் தேடி அதன் உண்மைத்தன்மையைக் கண்டறியும் வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது அந்நிறுவனம். போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க வாட்சாப் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியே இந்த புது இமேஜ் சர்ச் ஆகும்.

whatsappForward Image

காலையில் கண்விழித்து எல்லோரும் பார்க்கும் ஒரு பொருள் போன் தான். அதிலும் பேஸ்புக், வாட்சாப் தான் அதிக முக்கியத்துவங்களைப் பெறுகின்றன. சொல்லப்போனால் பேஸ்புக்கை விட வாட்சாப் அதிக அளவு நெருக்கமானவையாக பார்க்கப்படுகிறது. பேஸ்புக் நட்பு வட்டம் என்றால், வாட்சாப்பில் நெருங்கிய நட்புவட்டம் இருக்கும். அத்தோடு குரூப் என்னும் தலைவலியும்.

2 STD A Section என ஆரம்பித்து, கல்லூரி நண்பர்கள் குரூப், அலுவலக நண்பர்களுக்கென்று தனி, குடும்ப குரூப், என சராசரியாக 10 குரூப்கள் இருக்கும். குட் மார்னிங், குட் நைட் மேசெஜ்களால் இந்த உலகத்தை இயக்கிகொண்டிருக்கும் அதியற்புத சக்திவாய்ந்த நபர்கள் அங்கே இருப்பார்கள்.

பார்வர்ட் பரிதாபங்கள்

10 நிமிடத்தில் சேர் செய்தால் சொர்க்கம், லேட் ஆனால் நிச்சயம் நரகம் என அடிவயிற்றில் வெடிவைக்கும் பதிவுகள், சமூகத்தில் நடைபெறும் அநீதிகளினால் உணர்ச்சிக் குழம்பாகி #தண்டனை கிடைக்கும்வரை சேர் செய்யுங்கள் என பார்வர்ட் பட்டனை நொறுக்கி விடுவார்கள்.

தமிழ் மட்டுமே பேசும் இந்தக் குழந்தை அலகாபாத் ரயில் நிலையத்தில்……… வீரத் தமிழனா இருந்தா சேர்……… நம் முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை………. உஸ்ஸ்ஸ்ஸ். எத்தனை? இப்படி தினந்தோறும் ஆயிரக்கணக்கான மெசேஜ்கள். குற்றச்சாட்டுகள். புகைப்படங்கள். வீடியோக்கள்.

whats appஅது உண்மையானது தானா? வதந்தியா? என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே சமூகத்திற்கு நாம் எதாவது செய்யவேண்டும் என்ற அதீத கடமை உணர்ச்சியால் நாமும் பார்வர்ட் செய்து விடுகிறோம்.

தடுப்பு

இப்படியான போலி செய்திகளைத் தடுப்பதற்கு வாட்சாப் பல முயற்சிகளை எடுத்துவருகிறது. அதனாலேயே அதிகபட்சமாக 5 நபருக்கு மட்டுமே தகவலை பார்வர்ட் செய்யும் கட்டுப்பாட்டை விதித்தது வாட்சாப். தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த இமேஜ் செர்ச் வசதி மூலம் நமக்கு வரும் படங்களை நேரிடியாக கூகுளில் உள்ளீடாகக் கொடுத்து அதன் உண்மைத் தன்மையைக் கண்டறியலாம். மற்றும் ஒரு மாற்றமாக ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியை புதிய எமொஜியாகவும் கொண்டுவர இருக்கிறது வாட்சாப்.

fake-news whats appவாட்சாப் நிறுவனத்தின் சோதனைத் தளமான பீட்டாவில் இதற்கான ஏற்பாடுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்னும் சில காலத்தில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது இந்த புதிய வசதி. வாட்சாப் பீட்டாவின் 2.19.73 பதிப்பில் இந்த வசதி கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இவன் கடுகு டப்பாவில் இருந்து காசு திருடுபவன், பெண்களே உஷார்!! என இனிமேல் யாருடைய புகைப்படமாவது வந்தால் இமேஜ் சர்ச் மூலம் கூகுளாரிடம் யார் இந்த பிரகஸ்பதி? என்று கேட்டுவிடுங்கள். உண்மை தெரிந்துவிடும். கடுகு டப்பாவும் காப்பாற்றப்படும்.