வாடிக்கையாளர்களுக்கு கடன் தர முன் வந்திருக்கும் சியோமி நிறுவனம்

0
18

சியோமி நிறுவனம் (Xiaomi) கைபேசிகள், தொலைக்காட்சிகள் போன்ற பொருட்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது சிறு கடன் அளிக்கும் திட்டத்தினையும் அறிமுகம் செய்துள்ளது. கடந்த 6 மாதங்களாகவே இது குறித்துப் பணிகளில் ஈடுபட்டு வந்த சியோமி தற்போது சிறு கடன் அளிப்பதற்காக எம்ஐ கிரெடிட் (Mi Credit) என்ற செயலி ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.

சியோமியின் எம்ஐ சமூகப் பக்கத்தில் இருந்து இந்த எம்ஐ கிரெடிட் செயலியினைப் பதிவிறக்கம் செய்து கொண்டு வங்கிகளை விடப் பல மடங்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

 

என்ன தான் செயலி மூலம் சியோமி இந்தக் கடன் திட்டத்தினை அறிமுகம் செய்து இருந்தாலும், எம்ஐ தயாரிப்புகள் அல்லது எம்ஐ கைபேசி உபயோகிப்பவர்களால் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாட்டினை விதித்துள்ளது.

சியோமியின் எம்ஐ கிரெடிட் செயலி மூலம் கடன் பெறுவது எப்படி?

எம்ஐ கிரெடிட் செயலியினை உங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்த பிறகு, எம்ஐ கணக்கினைப்  பயன்படுத்தி உள் நுழைய வேண்டும். பின்னர் அடிப்படை விவரங்களை அளிப்பதுடன் தேவையான ஆவணங்களையும் பதிவேற்றி, முகவரி மற்றும் மாத சம்பளம் உள்ளிட்ட விவரங்களையும் அளிக்க வேண்டும்.

நீங்கள் அளித்த விவரங்கள் சரிபார்க்கப்பட்ட உடன் உங்களுக்குத் தேவையான தொகையின் அளவு, எவ்வளவு காலத்திற்குத் திருப்பிச் செலுத்துவீர்கள் உள்ளிட்ட விவரங்களையும் அளிக்க வேண்டும்.

பின்னர் இந்தச் செயலி உங்கள் வங்கிக் கணக்கினை சரி பார்த்து கடன் தொகையினை அளிக்கும். இவை அனைத்திற்கும் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பது தனிச் சிறப்பு.

வட்டி விகிதம்

வங்கி நிறுவனங்கள் தனிநபர் கடன் பெறும் போது ஆண்டுக்கு 10 முதல் 30 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தின் கீழ் கடன் அளிக்கும் நிலையில், சியோமி நிறுவனம் சிறு கடனை மாதம் 1.8 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் அளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை இதன் மூலம் கடன் பெறலாம் என்றும், பணத்தினை எளிதாக இணையதள வங்கிச் சேவை அல்லது டெபிட் கார்டுகள் மூலம் திரும்பச் செலுத்தலாம் என்றும் சியோமி தெரிவித்துள்ளது.

இந்த உடனடி சிறு கடன் திட்டத்திற்காக சியோமி நிறுவனம் கிரெடிட் பீ  (KreditBee) தளத்துடன் இணைந்துள்ளது. இந்தச் சிறு கடன் சேவை மூலம் இந்தியாவில் இளைஞர்கள் எளிதாகக் கடன் பெற்றுத் தங்கள் தேவையினைப் பூர்த்திச் செய்துகொள்ள முடியும் என்றும் அதே போன்று எளிமையாகத் திருப்பிச் செலுத்தவும் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.