தென்மேற்குப் பருவமழை முடிந்தது – வடகிழக்குப் பருவமழை எப்போது?

0
9
Credits : Skymet

தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால் அவ்வப்போது தமிழகத்திலும் மழை பெய்து வந்தது. அது போல் வெப்பச்சலனம் காரணமாகவும் மழை பெய்தது. இந்த மழையால் பூமி குளிர்ச்சி அடைந்தாலும் தண்ணீர் பஞ்சம் தீர்ந்தபாடில்லை.

தென்மேற்குப் பருவமழை முடிவு

வெப்பச்சலனம் காரணமாகவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகவும் கடந்த இரு தினங்களாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக வட இந்தியப் பகுதிகள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களும் நல்ல மழையைப்  பெற்றன.

குறிப்பாக, கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை கோர தாண்டவம் ஆடியது. இதனால் அம்மாநிலம் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் பேரழிவைச் சந்தித்தது.

ஆனால், நாடு முழுவதும் வழக்கமான அளவை விட குறைவான அளவே மழை பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தென்மேற்கு பருவமழை 91 சதவீதம் தான் மழையைக் கொடுத்துள்ளது. பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மழை மிகவும் குறைவாக பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தென் மேற்குப் பருவமழை இன்றுடன் விடை பெறுகிறது.

வடகிழக்குப் பருவமழை

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில், “தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலத்தின் மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும்.

தென்மேற்குப்  பருவமழை இன்றுடன் விடை பெறுவதால், இன்றோ அல்லது நாளையோ வடகிழக்குப் பருவமழை தொடங்கும் சாதகமான சூழல் நிலவும். இந்தப் பருவமழை வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். அதே போல் தாய்லாந்து, வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இது வருகிற திங்கள்கிழமை, வடக்கு அந்தமான் நோக்கி நகர்ந்து, அங்கு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப் பெறுகிறது. சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது ” என்று தெரிவித்துள்ளது.