தவறான / முகம் சுழிக்க வைக்கும் விளம்பரங்கள் – எங்கே புகார் அளிப்பது ?

0
75
Credit : The Logical Indian

சந்தையில் கிடைக்கும் பொருள்களைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொள்ளும் முக்கியமான ஒன்றாக இருந்த விளம்பரங்கள் இப்போது, நுகர்வுச் சந்தையில் விபரீதமான ஒன்றாக மாறிப் போயிருக்கிறது.

அதாவது, நுகர்வோருக்குத் தவறான தகவல்களைத் தருகின்றனர் என்பதையும் விட அதைப் பிற்போக்கான வழிமுறைகளில், மக்களின் மனதை, சிந்தனையைப் பாழ்படுத்தும் விதமாகத் தருகின்றனர்.

மாறிப்போன விளம்பர உத்திகள்

விளம்பரம் என்பது “முதலில் பார்க்க வைக்க வேண்டும், பார்ப்பவர்களைப் பேச வைக்க வேண்டும், பேச வைத்த பிறகு குறிப்பிட்ட அந்தப் பொருளை வாங்க வைக்க வேண்டும்’. இதுதான் இதுநாள் வரை சொல்லப்பட்டு வரும் இலக்கணம்.

ஆனால், நமது விளம்பரங்கள் பார்க்க வைக்கின்றன. பேச வைக்கின்றன, ஆனால், வாங்க வைக்கின்றனவா? சந்தேகம்தான். காரணம் பல. அவற்றுள் ஒன்று, இப்போதுள்ள நவீன விளம்பர உத்திகள் குறுக்குப் புத்தி கொண்டவைகளாக இருப்பதுதான்.

சம்பந்தமே இல்லாத காட்சிகள், சம்பந்தமே இல்லாத உரையாடல்கள், சம்பந்தமே இல்லாத பாத்திரங்கள், எல்லாமும் முடிந்து சம்பந்தமே இல்லாத ஒரு பொருளைக் காட்டி முடிக்கின்றனர்.

விளம்பரங்களில் பெண்கள்

அதிலும், குறிப்பாக பெண்களை மையப்படுத்திய விளம்பரங்கள். இடையிடையே ஒன்றிரண்டு தடை செய்யப்பட்டு வந்தாலும், இப்போது கொஞ்சம் கூடுதலாக இருக்கின்றன.

பெண்களை விளம்பரப் படங்களில் காட்சிப்படுத்துவது குறித்த சமீபத்திய ஆய்வு ஒன்றின் படி,

  • காட்சிப்படுத்தப்படும் அனைத்து விளம்பரங்களிலும், 75%  குளியலறை மற்றும் சமையலறை தொடர்பான உற்பத்திப் பொருட்களுக்கே பெண் பயன்படுத்தப் படுகிறாள்.
  • 56%  விளம்பரங்களில் பெண் வீட்டுப்பணிப் பெண்ணாகவும் இல்லத்தரசியாகவும் காட்டப்படுகிறாள்.
  • அழகுசாதனப் பொருட்களின் பாவனை பற்றிக் காட்சிப்படுத்த பெண்களின் தோற்றம் பயன்படுத்தப்படுகிறது.

பெண்கள் தான் அதிகம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள், அவர்களைக் கவர பெண்களைக் கொண்டே விளம்பரங்கள் எடுக்கப்படுகின்றன என்ற வாதம் மாறி,  இன்று “பெண்களின் உருவம் இருந்தால் தான் குறித்த பொருள் விற்பனையாகும்.” என்ற எண்ணம் உருவாகியுள்ளது. அதனால் தான், பெண்களுக்கு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அல்லது அவர்களால் பயன்படுத்த முடியாத ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் போது கூட அதனோடு ஒரு பெண்ணின் தோற்றத்தையும் சேர்த்து விடுகின்றனர்.

எங்கே புகார் அளிப்பது ?

தற்போதெல்லாம், பல விளம்பரங்கள் பெண்ணின் சுயமரியாதையைச் சிதைக்கின்றன. குடும்பத்தினரை முகம் சுழிக்க வைக்கின்றன. போலியான வாக்குறுதிகளைத் தருகின்றன. இப்படி ஒரு நிறுவனம் தரும், விளம்பரத்தில் அவர்கள் தரும் வாக்குறுதிகள் பொய்யானவையாகவோ அல்லது காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் விதம் தவறானதாகவோ நமக்குத் தோன்றினால், நாம் இந்திய விளம்பரத் தரநிர்ணய ஆணையத்திடம் (The Advertising Standards Council Of India),  நமது புகார்களைப் பதிவு செய்யலாம்.

இந்திய விளம்பரத் தரநிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டுத் தான் விளம்பரங்கள் தயாரிக்கப்பட வேண்டும். விளம்பரங்கள், உண்மைகளை நேர்மையாக வெளிப்படுத்தவேண்டும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது என்பது ஏஎஸ்சிஐ கொள்கை. குறிப்பிட்ட துறைசார் விளம்பரங்களுக்கான விதிமுறைகளையும் ஏஎஸ்சிஐ வகுத்துள்ளது.

எப்படிப் புகார் அளிப்பது?

விளம்பரத்தில் சொல்லப்பட்ட வாக்குறுதியை ஒரு பொருள் அல்லது சேவை நிறைவேற்றவில்லை என நீங்கள் கண்டறிந்தால் https://gama.gov.in/Default.aspx என்ற இணையதளத்துக்குச் செல்லலாம். தவறாக வழி நடத்தும் விளம்பரங்கள் குறித்து ஆன்லைன் வழியாக புகார் அளிப்பதற்கான, நுகர்வோர் விவகாரத் துறையின் இணையதளம் இது. பயனர் பெயர் மற்றும் கடவுசொல்லுடன் இந்த தளத்தில் உள்நுழைந்து உங்களது புகாரைப் பதிவு செய்யலாம்.

தவறான விளம்பரங்களுக்கு எதிராக தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஏஎஸ்சிஐ-க்கு உள்ளது.

தவறான வாக்குறுதிகளை அளிக்கும் விளம்பரங்கள் குறித்த வீடியோக்களையும் கூடுதல் ஆதாரமாக இந்தத் தளத்தில் பதிவேற்றலாம். ஏஎஸ்சிஐ அமைப்பும் புகார் பதிவு மற்றும் புகார் பதிவின் நிலையை அறியும் வசதியை https://www.ascionline.org/index.php/lodge-ur-complaints.html என்ற தளத்தில் தருகிறது.

ஏஎஸ்சிஐ அமைப்பை வாட்ஸ்ஆப் வழியாக + 91 7710012345 என்ற எண்ணிலும், மின்னஞ்சல் வழியாக contact@ascionline.org என்ற முகவரியிலும் அல்லது 1-800-22-2724 என்ற கட்டணமற்ற அழைப்பு எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தவறான விளம்பரங்களுக்கு எதிராக தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஏஎஸ்சிஐ-க்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முறைகளில் உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கவில்லையென்றால் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிலைகளில் உள்ள நுகர்வோர் குறைதீர்ப்பு மையங்களை அணுகலாம்.